சமநிலையில் நிறைவுற்ற கம்பளை ஸாஹிரா, புனித ஜோசப் இடையிலான மோதல்

586

ThePapare.com நடாத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான ThePapare சம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் கம்பளை ஸாஹிரா மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான மோதல் சமநிலையில் நிறைவுற்றது.  

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் இரண்டாம் வாரப் போட்டிகள் ஆரம்பம்

இலங்கை பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையில் …

கம்பளை வீகுலுவத்தை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் ஏற்கனவே தமது முதல் மோதலில் வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், தமக்கான இரண்டாவது வெற்றிக்காக இந்த மோதலில் களமிறங்கின.

போட்டி ஆரம்பித்து  முதல் நான்கு நிமிடங்களின் போதே புனித ஜோசப் அணி வீரர்களால் விடுக்கப்பட்ட சவாலின் போது கம்பளை ஸாஹிரா அணியினது கோல் காப்பாளரின் சிறந்த முறையில்  பந்தை தடுத்தாடும் ஆற்றலை அவதானிக்க முடிந்தது.

தொடர்ந்து சவால் விடுத்த  கொழும்பு வீரர்களுக்கு போட்டியின் 16 ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற வாய்ப்பின் போது தேசிய அணியின் முன்கள  வீரர் அசேல மதுசான் உதைந்த பந்து கோல் காப்பாளரால் தட்டி விடப்பட்டது. இதன் போது கிடைக்கப் பெற்ற பந்தை பயன்படுத்தி புனித ஜோசப் அணி வீரர் ஷமத் ரஷ்மித்த மூலம் முதல் கோல் பெறப்பட்டது.  

டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடி வரும் கம்பளை கிறிஸ்டல் பெலஸ் அணியின் முன்கள வீரர்களான பாஸித் மற்றும் இபாம் ஆகிய வீரர்களின் சிறப்பாட்டத்தின் மூலம் முதல் பாதியில் அதிகமான வாய்ப்புக்களை கம்பளை ஸாஹிரா அணி பெற்றது. எனினும்,  எந்தவொரு கோலையும் முதல் பாதியின் இறுதி வரை அவ்வணி வீரர்களால் பெற முடியவில்லை.

ஹமீட் அல் ஹுஸைனியை வீழ்த்தி அரையிறுதிக்குள் சென்றது ஸாஹிரா

பிரிவு ஒன்றுக்கான பாடசாலை அணிகளுக்கு இடையிலான …

எனினும், முதல் பாதியின் சிறந்த வாய்ப்பை கம்பளை அணியின் ரிபாஸ் போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் பெற்றார். அவ்வேளையில் எடுக்கப்பட்ட முயற்சியின் போது பந்து கோல் கம்பத்தின் வலது மூலைக்கு அருகாமையால் சென்றது.

முதல் பாதி: கம்பளை ஸாஹிரா கல்லூரி 0 – 1 புனித ஜோசப் கல்லூரி

இரண்டாம் பாதியின் தொடக்கம் முதலே போட்டியை ஆக்கிரமிக்க ஆரம்பித்த  ஸாஹிரா அணி வீரர்களால் 53 ஆவது நிமிடத்தில் போட்டி சமப்படுத்தப்பட்டது. இதன் போது இடது பக்க மூலையிலிருந்து பாஸித் வேகமாக உள்ளனுப்பிய பந்து பின்கள வீரரான ஸெசன் பெர்னாண்டோவின் கால்களில் பட்டு ஓவ்ன் கோலாக (Own goal) மாறியது.  

போட்டியை விறுவிறுப்பாக்கிய புனித ஜோசப் அணி வீரர்களால் 66 ஆவது நிமிடத்தில்  தமது அணிக்கான இரண்டாவது கோலும் பெறப்பட்டது.

அசேல மதுசான் முன்களத்தின் வலது மூலையிலிருந்து மத்திய களத்திற்கு வழங்கிய பந்தை, பின்கள வீரரான பிம்ஸர சயுர மூலம் உள்ளனுப்பினார். இதன்போது, உபாதையுடன் விளையாடிக் கொண்டிருந்த ஸாஹிரா கல்லூரியின் கோல் காப்பாளரின் கைகளில் பட்டு உள்ளே சென்றது.

பின்னர், மாற்று கோல் காப்பாளருடன் போட்டியை சமப்படுத்த வேகமாக விளையாடிய ஸாஹிரா கல்லூரி அணியினர் தமது அணியின் அனுபவமிக்க வீரரான பாஸிதின் அழகான ப்ரீ கிக் மூலம் போட்டியை 79 ஆவது நிமிடத்தில் சமப்படுத்தினர்.

மேலதிக 5 நிமிடங்கள் உள்ளடங்களாக மேலும் 15 நிமிடங்கள் விளையாடிய இரு அணியினருக்கும் இறுதி நிமிடம் வரை பல வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றன. எனினும், இரு அணியினது கோல் காப்பாளர்களும் அவற்றை மிகச் சிறந்த முறையில் தடுத்ததன் மூலம் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

முழு நேரம் : கம்பளை ஸாஹிரா கல்லூரி 2 – 2 புனித ஜோசப் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

கம்பளை ஸாஹிரா கல்லூரி – ஜேசன் பெர்னான்டோ 53′ (ஓவ்ன் கோல்), பாஸித் 79′

புனித ஜோசப் கல்லூரி – ஷமத் ரஷ்மித 16′,  ஓவ்ன் கோல் 66′   

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க