லீக் சுற்றின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த இலங்கை இளையோர் அணி

455

மலேஷியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தொடரில் பாகிஸ்தானுடனான தனது கடைசி குழுநிலை போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

கோலாலம்பூர், கின்ராரா அகடமி ஓவல் அரங்கில் இன்று (13) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி சொற்ப ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி போராடியபோதும் போட்டியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

இளையோர் ஆசிய கிண்ணத்தில் அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்த இலங்கை

பிரவீன் ஜயவிக்ரமவின் அதிரடி பந்துவீச்சின் மூலம் 19 வயதுக்கு..

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளையோர் அணியின் தலைவர் கமின்து மெண்டிஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். எனினும் ஆரம்ப வீரர்களாக வந்த தஞ்சய லக்ஷான் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததோடு ஹசித்த போயகொடவினால் 4 ஓட்டங்களையே பெற முடிந்தது.

பின்னர் வந்த அணித்தலைவர் மெண்டிஸ் ஓட்டமேதும் பெறாமலேயே ஆட்டமிழந்தார். மத்திய வரிசை வீரர்களான நிபுன் தனஞ்சய மற்றும் ஜெஹான் டானியல் ஒற்றை இலக்கங்களோடு அட்டமிழக்க இலங்கை அணி நிலை தடுமாறியது. தொடர்ந்து விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்க 44 பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 41 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இலங்கை அணியின் முதல் வரிசையில் வந்த ஆறு வீரர்களில் மதுஷ்க மாத்திரமே இரட்டை இலக்கத்தை எட்டி இருந்தார்.

எனினும் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிவது நிற்கவில்லை. நுவனிது பெர்னாண்டோவும் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை 71 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் 8ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஷேன் பண்டார மற்றும் கெவின் கொத்திகொட பெற்ற 43 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணி 100 ஓட்டங்களை தாண்டியது.

இந்நிலையில் 35 பந்துகளுக்கு 20 ஓட்டங்களை பெற்றிருந்த கொத்திகொட ஆட்டமிழந்தார். எவ்வாறாயினும் புனித அலோசியஸ் கல்லூரியின் அஷேன் பண்டார மாத்திரம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி பாகிஸ்தான் அணிக்கு சவால் விடுக்கும் ஓட்டங்களை பெற உதவினார்.

95 பந்துகளுக்கு முகம்கெடுத்த பண்டார 4 பௌண்டரிகளுடன் 49 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் இலங்கை இளையோர் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில் முனீர் ரியாஸ் மற்றும் முஹமது மூசா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்களால் ஆரம்பத்தில் நெருக்கடி கொடுக்க முடிந்தது. பாகிஸ்தான் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 38 ஓட்டங்களுக்கே பறிபோனது.

சமநிலையில் நிறைவடைந்த இலங்கை அணியின் பயிற்சி ஆட்டம்

இன்று (12) நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை..

எனினும், நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொஹமட் தாஹா சற்று வேகமாக ஆடி பாக். அணியை நெருக்கடியில் இருந்து மீட்டார். 38 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 2 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 31 ஓட்டங்களை பெற்று வெளியேறும்போது பாகிஸ்தான் அணி 69 ஓட்டங்களுடன் இருந்தது.

இந்நிலையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்கெட் காப்பாளர் ரொஹைல் நசீர் மற்றும் சாத் கான் ஆகியோர் இலங்கை அணியின் சொற்ப எதிர்பார்ப்பையும் தகர்த்தனர். இருவரும் இணைப்பாட்டமாக 54  ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதில் சிறப்பாக ஆடிய ரொஹைல் நசீர் அரைச் சதத்தை இரண்டு ஓட்டங்களால் தவறவிட்டார். 58 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 4 பௌண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 48 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் பிரவீன் ஜயவிக்ரமவின் பந்துக்கு போல்டானார்.  மறுமுனையில் சாத் கான் ஒத்துழைப்போடு ஆடி 22  ஓட்டங்களை குவித்தார்.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அபாரமாக செயற்பட்ட ஜயவிக்ரம பாக். அணியின் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி நெருக்கடி கொடுத்தபோதும் அது போட்டியை வெல்வதற்கு போதுமாக இருக்கவில்லை.   

பாகிஸ்தான் அணி 32.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 142 ஓட்டங்களை எட்டியது.

எட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய இலங்கை அணி சார்பில் புனித செபஸ்டியன் கல்லூரி சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம 9 ஓவர்களில் 28 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் பலரது அவதானத்தை பெற்றிருக்கும் கெவின் கொத்திலகொட 5.1 ஓவர்கள் பந்துவீசிய 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். காலி, ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான கொத்திலகொடவின் பந்துவீச்சு பாணி இந்த போட்டி தொடரில் அனைவரதும் அவதானத்தை பெற்றுள்ளது. அவர் உடலை வளைத்து பந்துவீசும் முறை தென்னாபிரிக்க அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் போல் அடம்ஸ் பாணியில் உள்ளது.   

இந்தியாவுடனான தொடரில் தமது பந்துவீச்சுப் பாணியை மாற்றவுள்ள இலங்கை

உஷ்ணமான காலநிலையைக் கொண்ட ஐக்கிய அரபு..

இந்த தோல்வியுடன் இளையோர் ஆசிய கிண்ண தொடரில் B குழுவில் ஆடும் இலங்கை அணி அந்த குழுவில் இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இலங்கை அணி தனது மூன்று போட்டிகளிலும் இரண்டில் வென்று 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதோடு பாகிஸ்தான் அணியும் 4 புள்ளிகளை பெற்றிருந்தபோதும் நிகர புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதன்படி இலங்கை அணி போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. B குழுவில் 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி நாளை (14) ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொள்ளவுள்ளது. இதில் ஆப்கான் அணி அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு நெருக்கடிக்கு உள்ளாகும். ஐக்கிய அரபு இராச்சியம் வென்றால் இலங்கை அணி நெருக்கடி இன்றி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

எனினும் நிகர புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி ஆப்கானை விடவும் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை இளையோர் ஆசிய கிண்ண தொடரில் A குழுவுக்காக இன்று நடந்த மற்றொரு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி 335 ஓட்டங்களை விளாசிய பங்களாதேஷ் அணி 262  ஓட்டங்களால் மலேஷிய அணியை வீழ்த்தியது. A குழுவில் நேற்று (12) நடந்த போட்டி ஒன்றில் நேபாள அணி இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றி ஒன்றை பெற்றதால் அந்த குழுவில் அரையிறுதிக்கு முன்னேறுவதில் போட்டி நிலவுகிறது.

இந்த தொடரின் குழுநிலை போட்டிகள் நாளை நிறைவடையவிருப்பதோடு வரும் நவம்பர் 16ஆம், 17ஆம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகள் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கின்றன. தொடர்ந்து இறுதி ஆட்டம் நவம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 141 (49.4) – அஷேன் பண்டார 49, கெவின் கொத்திகொட 20, முனீர் ரியாஸ் 3/30, முஹமது மூசா 3/25, ஷஹீட் அப்ரிடி 2/19

பாகிஸ்தான் – 142/7 (32.1) – ரொஹைல் நசீர் 48, மொஹமது தாஹா 31, பிரவீன் ஜயவிக்ரம 4/28, தனஞ்சய லக்ஷான் 1/17, திலான் பிரஷான் 1/21, கெவின் கொத்திகொட 1/32