புனித நிகொலஸ் விளையாட்டுக் கழகத்திற்கு வெற்றி

301
St.Nicholas v Young Henricans

கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணத்தின் 6ஆவதுசுற்றில் யாழ்.மஹஜன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற புனித நிகொலஸ் விளையாட்டு கழகம் மற்றும் யங் ஹென்றிகன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் புனித நிகொலஸ் விளையாட்டுக் கழகம் 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

யங் ஹென்றிகன்ஸ் அணியைப்  பொறுத்தவரையில் பாடசாலை மட்ட கொத்மலே சொக்ஸ் கிண்ணத்தில் விளையாடிய அனுபவமுள்ள வீரர்கள் காணப்பட்டார்கள். இவர்கள் புனித அந்தோனியார் விளையாட்டுக் கழகத்தை 5-4 என்றுபெனால்டி சூட் அவுட்டில் வெற்றி கொண்டு 6ஆவது சுற்றுக்கு நுழைந்த நிலையில் புனித நிகொலஸ் விளையாட்டுக் கழகம் மற்றுமொரு புனித அந்தோனியார் விளையாட்டுக் கழகத்தை யங் ஹென்றிகன்ஸ் அணிபோன்றே 5-4 என்றுபெனால்டி சூட் அவுட்டில் வெற்றிகொண்டு 6ஆவது சுற்றுக்கு நுழைந்த நிலையில்தான் இந்த இரு அணிகளும் மோதின.

போட்டியின் ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடின. முதல் பாதியின் 15ஆவது நிமிடத்தில் புனித நிகொலஸ் விளையாட்டுக் கழக வீரரான அஜந்தன் தனது அணிக்காக முதலாவது கோலைப் போட்டார்.

யங் ஹென்றிகன்ஸ் அணியின் கோல் காப்பாளர் பந்தைப் பிடிக்க முயன்றாலும் பந்து கையில் இருந்து நழுவ அஜந்தனால் கோல் போடப்பட்டது.  முதல் பாதிக்குள் தாம் ஒரு கோலைப் போட யங் ஹென்றிகன்ஸ் அணி முற்பட்டது.  ஆனால் அது கைகூடவில்லை. முதல் பாதியின் முடிவில் 1க்கு 0 என்ற அடிப்படையில் புனித நிகொலஸ் விளையாட்டுக் கழகம் போட்டியில் முன்னிலை வகித்தது.

அதன் பின் 2ஆவது பாதி விறுவிருப்பாக நடைபெற்றது. போட்டியின் 70ஆவது நிமிடத்தில் பாடசாலை மட்டக் கால்பந்தாட்டப் போட்டியில் புனித ஹென்றி கல்லூரியை வழிநடாத்திய ஹென்றிகன் அணியின் வீரரான சிவகுமாரன் கிருஷாந்திற்கு yellow card “மஞ்சள்அட்டை” வழங்கப்பட்டது. அதன் பலனாக புனித நிகொலஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

ஆனால் அந்த வாய்ப்பில் கோல் போடக் கிடைத்த இலகுவான வாய்ப்பு தவறவிடப்பட்டது.  இறுதி வரை கோலை போட யங்ஹென்றிகன்ஸ் அணி முயன்றது. ஆனாலும் புனித நிகொலஸ் விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளாரின் சிறந்த கோல் தடுப்பின் மூலம் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டது

இறுதியில் புனித நிகொலஸ் விளையாட்டுக் கழகம் 1-0 என்ற ரீதியில் யங்ஹென்றிகன்ஸ் அணியை வென்றது. இந்த கார்கில்ஸ் புட்சிட்டி FA கிண்ணத்தின் 6ஆவது சுற்றின் குழு “D” இல் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் கெலிஓய கால்பந்தாட்டக் கழகத்தை கொம்ரட்ஸ் விளையாட்டுக் கழகம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.