100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் ஜப்பான் வீரர் சாதனை

165
AFP PHOTO

100 மீற்றர் ஓட்டப் பந்தய தூரத்தை 10 செக்கன்களுக்குள் கடந்த முதல் ஜப்பான் வீரர் என்ற பெருமையை யொஷிஹிதே கிர்யு பெற்றுக்கொண்டார். இதன்படி 10 செக்கன்களுக்குள் 100 மீற்றர் தூரத்தை நிறைவு செய்த 2ஆவது ஆசிய வீரர் என்ற புதிய சாதனையும் படைத்தார். முன்னதாக 2015ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த சூ பிங்டியேன், 99.9 செக்கன்களில் 100 மீற்றர் தூரத்தை ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு உலகில் ஜப்பான், சீனா மற்றும் கொரிய நாட்டு வீரர்கள் ஜிம்னாஸ்டிக், டேபிள் டென்னிஸ், ஜூடோ, கராத்தே, நீச்சல் போன்ற விளையாட்டுகளில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் மெய்வல்லுனர் அரங்கில் அவர்கள் அதிக அளவில் சாதிப்பது அரிது எனலாம்.

photo Source - Getty image
photo Source – Getty image

ஆனால், ஜப்பான் வீரர் ஒருவர் முதன் முறையாக 100 மீற்றர் ஓட்டப் பந்தய தூரத்தை 10 செக்கன்களுக்குள் கடந்து சாதனை படைத்துள்ளார். டோயோ பல்கலைக்கழக மாணவரான யொஷிஹிதே (21 வயது) ரியோவில் நடைபெற்ற 4*100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றவர். அத்துடன் கடந்த மாதம் லண்டனில் நிறைவுக்கு வந்த உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி உசைன் போல்ட்டுடன் ஓடி முதல் சுற்றில் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் போட்டியின் பிறகு அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ”இப்பருவத்தின் கடைசி மெய்வல்லுனர் தொடரில் என்னுடைய சாதனையை மீண்டும் புதுப்பிக்க கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 4 வருடங்களாக மேற்கொண்ட கடின உழைப்பின் காரணமாகவே இவ்வெற்றியைப் பெற முடிந்தது” என தெரிவித்தார்.

முன்னதாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிரோஷிமா நினைவுதின மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட யொஷிஹிதே கிர்யு, 10.01 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்திருந்தார். எனினும், குறித்த போட்டித் தொடரில் இலத்திரனியல் கடிகாரம் பயன்படுத்தாத காரணத்தால் அவருடைய போட்டியை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்தது.

ஒரே நாளில் அனைத்துப் போட்டிகளிலும் தங்கம் வென்ற ரத்நாயக்க வித்தியாலயம்

இந்நிலையில், நேற்று ஜப்பானில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு போட்டித் தூரத்தை 9.98 செக்கன்களில் கடந்து புதிய சாதனை படைத்ததுடன், ஜப்பான் நாட்டு வீரர் ஒருவர் 10 செக்கன்களுக்குள் இலக்கை எட்டியது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன் கோஜி இடோ என்பவர் கடந்த 1998ஆம் ஆண்டு 10 செக்கன்களில் கடந்ததே சாதனையாக இருந்தது. 2007ஆம் ஆண்டு வரை இதுதான் ஆசிய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், உலக மெய்வல்லுனர் அரங்கிற்கு அண்மையில் விடைகொடுத்த ஜமைக்காவின் உசைன் போல்ட் 100 மீற்றர் தூரத்தை 9.58 செக்கன்களில் கடந்ததே உலக சாதனையாக உள்ளதுடன், நைஜீரியாவைப் பிறப்பிடமாக் கொண்ட கட்டார் நாட்டு வீரரான பெமி ஒகுனோட், 9.91 செக்கன்களில் ஓடி முடித்ததே ஆசிய சாதனையாகவும் உள்ளது.