பங்களாதேஷை துவம்சம் செய்து ஆசிய கிண்ணத்தை ஆரம்பித்த இலங்கை மகளிர்

700
Photo Courtesy - ACC Official Website

பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களுக்கு சுருட்டி மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரை இலங்கை மகளிர் அணி அதிரடி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இதன்போது, இலங்கை அணி பங்களாதேஷ் நிர்ணயித்த 64 ஓட்ட வெற்றி இலக்கை 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து எட்டியது.  

ஆசிய கிண்ண மகளிர் டி-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் மலேஷியா ஆகிய ஆறு நாடுகளின் பங்குபற்றலுடன்…….

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இன்று (03) ஆரம்பமான ஆசிய கிண்ண டி-20 தொடரில் இலங்கை அணித்தலைவி சாமரி அத்தபத்து உபாதை காரணமான பங்கேற்காத நிலையில் நான்கு ஆண்டுகளின் பின் ஷஷிகலா சிறிவர்தன தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். ரோயல் சலகோர் கழக மைதானதில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற ஷஷிகலா முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார்.  

இந்த முடிவு சரியானது என்பதை நிரூபிக்கும் வகையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் உதேசிகா பிரபோதனி போட்டியின் இரண்டாவது பந்திலேயே ஷமிமா சுல்தானை LBW முறையில் ஓட்டமின்றி ஆட்டமிழக்கச் செய்தார்.

உதேசிகாவுடன் ஆரம்ப ஜோடியாக பந்துவீச வந்த இடது கை சுழல் பந்துவீச்சாளர் சுகன்திகா குமாரியும் தனது முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார். இதனால் பங்களாதேஷ் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  

தொடர்ந்து ஓப் ஸ்பின் பந்து வீசும் அணித்தலைவி சிறிவர்தன பங்களாதேஷின் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை அயாஷா ரஹ்மானை 11 ஓட்டங்களுடன் வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகளில் இலங்கை அணிடன் இணையும் தனஞ்சய

இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தனஞ்சய டி சில்வா, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட்……..

தொடர்ந்து இடது கை சுழற்பந்து வீராங்கனை இனோக்கா ரணவீர அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசையை ஆட்டம் காணச்செய்தார். பங்களாதேஷ் அணியால் 20 ஆவது ஓவர் வரை துடுப்பெடுத்தாட முடிந்தபோதும் அதன் மந்தமான ஆட்டத்தால் சவாலான ஓட்டங்களை பெற முடியவில்லை. ஆரம்ப வீராங்கனை  ஆயிஷா ரஹ்மான் பெற்ற 11 ஓட்டங்களுமே அந்த அணியின் அதிகூடிய ஓட்டங்களாகும். ஒட்டுமொத்த இன்னிங்ஸிலும் ஒரு பௌண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் மாத்திரமே பெறப்பட்டது.    

இதன்படி பங்களாதேஷ் மகளிர் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 63 ஓட்டங்களையே பெற்றது. எனினும் பங்களாதேஷ் அணி டி-20 சர்வதேச போட்டிகளில் பெற்ற 4ஆவது மிகக் குறைந்த ஓட்டங்களாகவே இது உள்ளது. அந்த அணி 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 44 ஓட்டங்களுக்கு சுருண்டது டி-20 சர்வதேச போட்டிகளில் பெறப்பட்ட மிகக் குறைந்த ஓட்டங்களாக இருந்தது.

இதன்போது இலங்கை மகளிர் அணி சார்பில் சுகன்திகா குமாரி 3 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு பிரபோதனி வெறும் 6 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் இனோகா ரணவீர மற்றும் ஓஷதி ரணசிங்க ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

இந்நிலையில் போட்டியின் பதில் இன்னிங்ஸில் பங்களாதேஷ் சுழல் விராங்கனை கதீஜா துல்குப்ரா தானது நான்கு ஓவர்களிலும் இலங்கை அணியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அது எதிரணிக்கு நெருக்கடியாக அமையவில்லை. இலங்கை மகளிர் அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 64 ஓட்டங்களையும் எட்டியது.

மகளிர் ஆசிய கிண்ணத்தின் முன்னைய ஆறு தொடர்களில் இலங்கை மகளிர் அணி நான்கு முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த வெற்றி மூலம் அந்த அணி இம்முறை தொடரில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய சுகன்திகா குமாரி போட்டியின் ஆட்ட நாயகியாக தெரிவானார்.  

இம்முறை மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரில் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுடன் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளும் பங்கேற்றுள்ளன.

இதில் கடந்த ஆறு தொடர்களிலும் சம்பியனான இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டு 142 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியை சுவைத்தது. முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களை பெற்றதோடு பதிலெடுத்தாடிய மலேசிய மகளிர் அணி 27 ஓட்டங்களுக்கே சுருண்டது. அந்த அணியின் 6 வீராங்கனைகள் டக் அவுட் ஆகினர்.     

இலங்கை மகளிர் அணி நாளை (04) மலேசிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் மகளிர் – 63 (19.3)  ஆயிஷா ரஹ்மான் 11, சுகன்திகா குமாரி 3/17, உதேஷிகா பிரபோதனி 2/6, ஓஷதி ரணசிங்க 2/10, இனோகா ரணவீர 2/15

இலங்கை மகளிர் – 64/4 (14.3)  நிபுனி ஹன்சிகா 23, யசோதா மெண்டிஸ் 20, கதீஜா துல் குப்ரா 3/13

முடிவு: இலங்கை மகளிர் 6 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<