மலேசியாவை சவாலின்றி வென்ற இலங்கை மகளிர்

508

மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரில் மலேசியாவுடனான போட்டியை இலங்கை மகளிர் அணி எந்த சவாலும் இன்றி 90 ஓட்டங்களால் இலகுவாக வென்றது. இதன்மூலம் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற இலங்கை மகளிர் அணி 6 அணிகள் பங்கேற்றிருக்கும் இந்த தொடரில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பங்களாதேஷை துவம்சம் செய்து ஆசிய கிண்ணத்தை ஆரம்பித்த இலங்கை மகளிர்

பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களுக்கு சுருட்டி மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரை இலங்கை மகளிர் அணி அதிரடி…

மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான மகளிர் ஆசிய கிண்ண தொடரில் இலங்கை மகளிர், முதல் நாளில் பங்களாதேஷ் அணியை வீழ்த்திய நிலையில் கோலாலம்பூரில் இன்று (04) மலேசியாவை எதிர்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மலேசிய அணித் தலைவி வினிப்ரைட் துரைசிங்கம் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணிதார்.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப வீராங்கனைகளான யசோதா மெண்டிஸ் மற்றும் நிபுனி ஹன்சிகா 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். 36 ஓட்டங்களை பெற்றிருந்த யசோதா மலேசிய அணியின் 16 வயது மிதவேகப்பந்து வீச்சாளர் சாஷா அஸ்மியின் பந்துக்கு போல்டானார்.

தொடர்ந்து மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஹன்சிகா 37 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார். மத்திய வரிசையில் அனுஷ்கா சஞ்சீவனி (26) மற்றும் ஹசினி பெரேரா (ஆட்டமிழக்காது 32) ஆகியோரும் போதுமான ஓட்டங்களை குவித்தனர்.

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 136 ஓட்டங்களை எடுத்தது. இந்த ஓட்டங்கள் கத்துக்குட்டி மலேசியாவுக்கு சவாலான வெற்றி இலக்காகவே இருந்தது.

பின்னர், துடுப்பெடுத்தாட வந்த மலேசிய வீராங்கனைகள் ஓட்டங்கள் பெறுவதை விடவும் விக்கெட்டை காத்துக் கொள்வதிலேயே அதிக அவதானம் செலுத்தினர். முதல் ஓவரை வீசிய ஓஷதி ரணசிங்க மலேசிய ஆரம்ப வீராங்கனை யுஸ்ரினா யாகொப்பை ஒரு ஓட்டத்துடன் வெளியேற்றினார். தொடர்ந்து அணித்தலைவி துரைசிங்கம் 16 பந்துகளில் ஒரு ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்ததோடு அடுத்து வந்த வீராங்கனைகளும் வெற்றி இலக்கை நோக்கி வேகமாக ஆடவில்லை.

மறுமுனையில் ஆடிய ஆரம்ப வீராங்கனை கிறிஸ்டினா பரெத் 32 பந்துகளில் பெற்ற 14 ஓட்டங்களுமே அந்த அணியின் அதிகூடிய ஓட்டங்களாகும். இதன்மூலம் மலேசிய மகளிர் அணியினருக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களுக்கும் துடுப்பெடுத்தாட முடிந்தபோதும் அந்த அணியால் மொத்தமாக 46 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

இதன்போது இலங்கை மகளிர் அணி சார்பில் வலது கை மிதவேக வீராங்கனை நிலக்சி டி சில்வா 4 ஓவர்களுக்கும் 13 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தெரிவானார். அணித்தலைவி ஷஷிகலா சிறிவர்தன 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.   

கனடா குளோபல் டி20 லீக்கில் ஆறு இலங்கை வீரர்கள்

கனடா கிரிக்கெட் சபையினால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குளோபல் டி20 பிரீமியர் லீக் தொடரில், இலங்கையைச் சேர்ந்த …

இலங்கை மகளிர் அணி அடுத்து வரும் புதன்கிழமை (06) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதனிடையே மகளிர் ஆசிய கிண்ணத்தில் கடந்த 6 தொடர்களிலும் பட்டம் வென்ற இந்திய அணி இந்த தொடரில் தனது இரண்டாவது போட்டியில் இன்று தாய்லாந்து அணியை 66 ஓட்டங்களால் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.  

அதேபோன்று, முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வியுற்ற பங்களாதேஷ் அணி இன்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் – 136/3 (20) – யசோதா மெண்டிஸ் 36, ஹசினி பெரேரா 32*, அனுஷ்கா சஞ்சீவனி 26, நிபுனி ஹன்சிகா 20, சஷா அஸ்மி 1/12

மலேசிய மகளிர் – 46/7 (20) – கிறிஸ்டினா பரட் 14, நிலக்சி டி சில்வா 3/13, ஷஷிகலா சிறிவர்தன 2/12

முடிவு இலங்கை மகளிர் அணி 90 ஓட்டங்களால் வெற்றி  

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<