இந்தியாவின் சுழலில் சுருண்ட இலங்கை மகளிர் அணி

1316
IND v SL

இன்று நடைபெற்று முடிந்த ஆசிய கிண்ண T20 சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மகளிர் அணியுடனான போட்டியில் தனது சுழற்பந்து வீச்சாளர்களின் துணையுடன் இந்திய மகளிர் அணி 52 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன்மூலம் இத்தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முதலாவது அணியாக இந்தியா தெரிவாகியுள்ளது.

பெங்கொக் நகரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணித்தலைவி, ஹர்மான்பிரீத் கவுர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதன்படி, மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோருடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 47 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் முதல் விக்கெட்டினை பறிகொடுத்து.

பின்னர் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது விக்கெட்டுக்காக நல்ல இணைப்பாட்டத்தினை பெற்ற அவ்வணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றது.

இதில், ஏனைய இந்திய வீராங்கனைகளை விட சிறப்பாக செயற்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை மிதாலி ராஜ், அரைச்சதத்துடன் 59 பந்துகளிற்கு 6 பவுண்டரிகளை விளாசி 62 ஓட்டங்களை குவித்தார்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில், உதேசிகா பிரபோதினி, சாமரி அத்தபத்து, சிரிபாலி வீரக்கொடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

womens asia cup points table

இதனை அடுத்து, வெற்றி இலக்கான 121 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற வேண்டிய நிலையில், ஹாசினி பெரேரா மற்றும் சாமரி அத்தபத்து ஆகியோருடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி, ஆரம்பத்தில் மெதுவாகவே ஓட்டங்களை பெற ஆரம்பித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகள் இருவரும் இலங்கை மகளிர் அணி 16 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்து வெளியேற, பிரசாதினி வீரக்கொடி, டிலானி மனோதரா ஆகியோர் நிலைமையை சுதாகரித்துக் கொண்டு ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்தனர்.

இலங்கை அணி 33 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் பிரசாதினி வீரக்கொடியும் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்த பந்தில் புதிதாக வந்த ஒசாதி ரணசிங்கவும் ஆட்டமிழந்தார். எனவே, இலங்கை மகளிர் அணி மீண்டும் மெதுவாக ஓட்டங்களை பெற ஆரம்பித்தது.

இவ்வேளையில், சிறப்பாக செயற்பட்ட இந்திய மகளிர் அணியின் எக்தா பிஸ்ட், ப்ரீத்தி போஸ் ஆகியோரின் சிறப்பான சுழலினால் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்து இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களிற்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, மேலதிக 52 ஓட்டங்களினால் தோல்வியினை தழுவியது.

இலங்கை மகளிர் அணி சார்பாக, டிலானி மனோதரா மாத்திரம் அதிகபட்சமாக 20 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில்,  சிறப்பாக செயற்பட்ட எக்தா பிஸ்த், 8 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், ப்ரீத்தி போஸ் 14 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், பூணாம் யாதவ், ஜூலானி கோஸ்வாமி, அனுஜா பாட்டில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் இந்திய மகளிர் அணி சார்பாக கைப்பற்றினர்.

இப்போட்டியில், தோல்வியடைந்த காரணத்தினால், இலங்கை மகளிர் அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு கேள்விக்குரியாகியுள்ளது. இருப்பினும் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறும் போட்டிகளின் பின்பே இலங்கை மகளிர் அணியின் நிலைமை என்ன என்பது உறுதியாக தெரியவரும்.

போட்டியின் சுருக்கம்

இந்திய மகளிர் அணி: 121/4(20) – மிதாலி ராஜ் 62(59), வேதா கிருஷ்ன மூர்த்தி 21(23), மந்தனா 21(28), உதேசிகா பிரபோதினி 20/1(4)

இலங்கை மகளிர் அணி: 69/9(20) – டிலானி மனோதரா 20(32), எக்டா பிஸ்ட் 8/3(4), ப்ரீத்தி போஸ் 14/3(4)

போட்டி முடிவு : இந்திய மகளிர் அணி 52 ஓட்டங்களால் வெற்றி