பலமிக்க விம்பில்டன் கழகத்திடம் போராடித் தோற்றது பேல்ஸ் கழகம்

185

புத்தளம் கால்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற “ட்ரெகன்ஸ் லீக் – 2017” போட்டிகளின் 29ஆவது லீக் ஆட்டம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் தரப்படுத்தலில் 4ஆம் இடத்திலுள்ள புத்தளம் விம்பில்டன் விளையாட்டுக் கழகத்திற்கும் தரப்படுத்தலில் 7ஆம் இடத்திலுள்ள கல்பிட்டி பேல்ஸ் (Pearls) விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் முழுமையாக 80 நிமிடங்கள் கொண்ட போட்டியாக இடம்பெற்றது.

இப்போட்டி இறுதி நிமிடம் வரை எவ்வாறான முடிவை வழங்கப் போகிறது என்ற நிலையில் பெருந்திரலான பார்வையாளர்கள் மைதானத்தை சூழ்ந்து காணப்பட, இறுதியாக 4 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் கல்பிட்டி பேல்ஸ் விளையாட்டுக் கழகத்தை புத்தளம் விம்பில்டன் விளையாட்டுக் கழகம் வீழ்த்தியது.

போட்டி ஆரம்பித்து 9 ஆவது நிமிடத்தில் விம்பில்டன் வீரர் ஸரீக் கம்பத்தின் இடப்புறமாக இருந்து உயர்த்தி அடித்த பந்தை உயரே எழுந்து முஸ்பிக் ஹெடர் செய்துவிட பந்து கம்பத்திற்கு மேலால் செல்ல முதல் வாய்ப்பு தோல்வியில் முடிந்தது.

மேலும் 6 நிமிடங்கள் கழிந்த நிலையில் ஸரீக் மைதானத்தின் நடுப் பகுதியிலிருந்து வழங்கிய பந்தை முஸ்பிக் பெற்று, அதனை கோல் கம்பங்களை நோக்கி உதைய, பந்து பேல்ஸ் கழகத்தின் தடுப்பு வீரரின் கையில் பட்டது. இதனால் நடுவர் விம்பில்டன் அணிக்கு பெனால்டி வழங்கினார்.

பெனால்டி உதையை ஜெஸான் கம்பத்தின் வலப்புறத்தால் உள்ளனுப்ப முதலாவது கோலைப் விம்பில்டன் விளையாட்டுக் கழகம் பதிவு செய்தது.

எவரெடி வெற்றிக் கிண்ண அரையிறுதியில் மோதவுள்ள நான்கு அணிகள்

ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் ஆஸிக் கொடுத்த சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை அஸ்பாக் பெற்று இரண்டு தடுப்பு வீரர்களையும் கடந்து விம்பில்டன் கோல் காப்பாளர் இம்ரானின் கைகளுக்கே பந்தை வழங்க பேல்ஸ் கழகத்தின் முதலாவது முயற்சி வீணானது.

இரு கழகங்களினதும் பந்துப் பரிமாற்றங்கள் சிறப்பாக காணப்பட சம விகிதத்தில் பந்து இரு அணி வீரர்களின் கால்களிலும் காணப்பட்டமையால் போட்டி மேலும் விறுவிறுப்பானது. போட்டியின் 26ஆவது நிமிடத்தில் அஸ்மியிடமிருந்து பந்தைப் பெற்ற ரினூஸான் மைதானத்தின் நடுப் பகுதியிலிருந்து கம்பம் நோக்கி பந்தை வேகமாக அடிக்க, பந்து கம்பத்தின் மேலால் சென்று ஏமாற்றியது.

அடுத்த நிமிடமே அல்தாப் கொடுத்த நேர்த்தியான பந்தைப் பெற்ற சர்பான் விம்பில்டனின் தடுப்பு வீரர்களைத் தாண்டி பெனால்டி பகுதிக்குக் கொண்டு சென்று தனித்து நின்ற கோல் காப்பாளர் இம்ரானையும் நிலைகுலையச் செய்து கம்பத்தினுள் பந்தை அனுப்பி கோல் கணக்கை சமன் செய்தார்.

அடுத்த நிமிடமே தக்க பதிலடியை பேல்ஸ் கழகத்திற்குக் விம்பில்டன் கழகம் கொடுத்தது. தனக்கு கிடைத்த கோர்ணர் வாய்ப்பை முஸ்பிக் உயர்த்தி கம்பம் நோக்க அடிக்க பேல்ஸ் கழகத்தின் தடுப்பு வீரர்களின் கவனக்குறைவால் பந்து கோல் கம்பத்திற்குள் சென்றது. இதனால் விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் மீண்டும் முன்னிலை அடைந்தது.

தொடர்ந்து ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் அல்தாப் வழங்கிய பந்தை ஆஸிக் கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க பந்து கம்பத்திற்கு சற்று மேலால் வெளியேறியது.

முதல் பாதியின் இறுதி முயற்சியாக நுஸ்கான் பந்தை சர்பானிடம் கொடுக்க, சர்பான் கம்பத்திற்கு அருகாமையில் சென்று அடிக்க முயற்சிக்கும் முன் கோல் காப்பாளர் இம்ரான் சிறப்பாகச் செயற்பட்டு பந்தை தன் வசப்படுத்திக் கொள்ள, பேல்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் முதல் பாதியில் மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சியும் தோற்றுப் போனது.

முதல் பாதி: விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 2 – 1 பேல்ஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்த கனமே முஸ்பிக் பந்தை ஹிமாஸிடம் அனுப்ப அதை கம்பம் நோக்கி அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் செல்ல ஹிமாஸின் முயற்சி வீணானது.

மேலும் இரண்டு நிமிடங்கள் கடக்க அஸ்பாக் மைதானத்தின் நடுப் பகுதியிலிருந்து விம்பில்டன் கழகத்தின் 5 வீரர்களைக் கடந்து பெனால்டி பகுதிவரை கொண்டு சென்று பந்தை அடிக்க, பந்து இம்ரானின் கைகளில் சரணடைந்தது. இதனால் அஸ்பாக்கினால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சி பலனில்லாமல் போனது.

ஆட்டத்தின் 50 ஆவது நிமிடத்தில் விம்பில்டன் கழகத்திற்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க அதை நிஸாத் வேகமாக கம்பம் நோக்கி அடிக்க, பந்து இடப்பக்க கம்பத்தில் பட்டு வெளியேறியது.

ரஹ்மானின் இரண்டு கோல்களால் இராணுவப்படைக்கு மற்றொரு வெற்றி

தொடர்ந்து ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் முஸ்பிக் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை ஹிமாஸ் பெற்று கம்பத்தின் இடப்புறத்தால் பந்தை உள்ளனுப்ப விம்பில்டன் கழகம் கோல் கணக்கை மூன்றாக உயர்த்தியது. இந்த கோலுடன் விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் மேலும் முன்னிலை அடைந்தது.

முன்னிலை பெற்றிருந்த விம்பில்டன் கழகத்துக்கு மேலும் 5 நிமிடங்கள் கடந்த நிலையில் பேல்ஸ் கழகம் பதிலடி கொடுத்தது. அஸ்பாக் மைதானத்தின் நடுப் பகுதியிலிருந்து கொண்டு வந்த பந்தை கம்பம் நோக்கி உருட்டி விட கோல் காப்பாளர் இம்ரான் அதை பிடிக்க முயற்சிக்க முன், வேகமாக செயற்பட்ட முன்கள இளம் வீரர் ரிஸ்கான் வலக்காலால் உதைத்து விட பந்து எவ்வித தடையுமின்றி கோல் கம்பத்தினுள் புகுந்தது. பெறப்பட்ட இந்த கோலுடன் பேல்ஸ் கழகம் இரண்டாவது கோலைப் பதிவு செய்தது.

மீண்டும் அடுத்த நிமிடமே பேல்ஸ் கழகத்துக்கு விம்பில்டன் கழகம் கோல் அதிர்ச்சி கொடுத்தது.

சிஸான் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை பெற்ற ஹிமாஸ் கம்பத்திற்குள் பந்தை உள்ளனுப்ப பந்து கம்பத்தினுள் சென்று ஹிமாஸின் கோல் கணக்கு இரட்டிப்பாக,  விம்பில்டன் கழகம் நான்காவது கோலைப் பதிவு செய்தது.

தொடர்ந்து 65 ஆவது நிமிடத்தில் நுஸ்கான் விம்பில்டன் கழக வீரர்கள் இருவரைக் கடந்து பந்தை சர்பானிடம் கொடுக்க, அதனை சர்பான் கோலாக மாற்றத் தவறினார். இதனால் பேல்ஸ் கழகத்துக்கு கிடைத்த இலகுவாய்ப்பு வீணாகியது.

மீண்டும் 71 ஆவது நிமிடத்தில் இளம் வீரர் ரிஸ்கான் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை அஸ்பாக் பெற்று இடக் காலால் கம்பம் நோக்கி மெதுவாக உள்ளனுப்ப கோல் காப்பாளர் இம்ரான் பாய்ந்து தடுக்க பந்து இம்ரானின் கைகளில் பட்டவாறு கம்பத்தினுள் நுழைய தனது மூன்றாவது கோலையும் பேல்ஸ் கழகம் பதிவு செய்தது. ஒரு கோலால் பின்னிலையுற்ற நிலையில் சவாலான ஆட்டத்தை தொடர்ந்தது.

போட்டியை சமநிலை செய்ய பேல்ஸ் கழக வீரர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தடுக்கும் முயற்சியில் விம்பில்டன் கழகம் தமது தடுப்பு வீரர்களை அதிகரித்தது.

ஆட்டத்தின் இறுதி முயற்சியாக ஹிமாஸிற்கு கிடைத்த பந்தை சிஸானிடம் வழங்க, வேகமாக செயற்பட்ட சிஸான் பந்தை கம்பம் நோக்கி அடிக்க அதை அம்ஜத் இலகுவாகப் பற்றிக் கொண்டார்.

பேல்ஸ் விளையாட்டுக் கழகத்தின் இறுதி நேர முயற்சிகள் பயனளிக்காமல் போக போட்டி நிறைவு பெற்றதாக நடுவர் அறிவித்தார். பலம் மிக்க விம்பில்டன் கழகத்திற்கு எதிராக 4-: 3 என்ற கோல்கள் அடிப்படையில் கல்பிட்டி பேல்ஸ் கழகம் போராடித் தோற்றது.

இந்த போராட்டமிக்க வெற்றியோடு இதுவரையில் எந்தவித தோல்விகளையும் சந்திக்காத விம்பில்டன் விளையாட்டுக் கழகம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துக் கொண்டது.

முழு நேரம்: விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 4 – 3 பேல்ஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

விம்பில்டன் விளையாட்டுக் கழகம் – ஜெஸான் 15’, முஸ்பிக் 28’, ஹிமாஸ் (55’ & 61’)

பேல்ஸ் விளையாட்டுக் கழகம் – சர்பான் 27’, ரிஸ்கான் 60’, அஸ்பாக் 71’

மஞ்சள் அட்டை

விம்பில்டன் விளையாட்டுக் கழகம் – அப்ஸல் 73’, மனாஸிர் 77’

பேல்ஸ் விளையாட்டுக் கழகம் – நுஸ்கான் 17’, றினூஸான் 40’