துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் கலக்கிய பென் ஸ்டோக்ஸ்

ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்

117
Image Courtesy - Getty Images

12 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (14) நிறைவுக்கு வந்திருந்தது. இதில் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக்கிண்ணத்தை சுவீகரித்தது.  இந்நிலையில் நிறைவுக்கு வந்திருக்கின்ற உலகக்கிண்ண தொடரில் பிரகாசித்த வீரர்களுக்கு, ஐ.சி.சி இனால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள புதிய ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த வெளியிடப்பட்ட புதிய தரவரிசையானது உலகக்கிண்ண அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என்பவற்றை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் பங்குகொண்ட இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த அதிக வீரர்களுக்கு தரவரிசையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.  

ஐ.சி.சி யின் 2019 உலகக் கிண்ண அணி வீரர்கள் இவர்கள்தான்

ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (14) நிறைவுக்கு….

 

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

அணித்தலைவராக அதிக ஓட்டங்களை 2019 உலகக்கிண்ணத்தில் குவித்து அணித்தலைவர் என்ற ரீதியில் புதிய சாதனை படைத்த கேன் வில்லியம்சன் இந்திய அணியுடன் நடைபெற்ற அரையிறுதி போட்டி மூலமாக வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளை பெற்று இரண்டு நிலைகள் முன்னேறி ஆறாவது நிலைக்கு வந்துள்ளார்.

மேலும் நியூசிலாந்து அணி சார்பாக தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் வரிசையில் வில்லியம்சனுக்கு அடுத்ததாக 9 இன்னிங்சுகளில் 350 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட ரொஸ் டெய்லர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளை பெற்று தொடர்ந்தும் ஐந்தாமிடத்தில் நீடிக்கின்றார். 

இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குதாரியாக இருந்தார். அப்போட்டியில் 65 பந்துகளில் 85 ஓட்டங்களை குவித்ததன் மூலம் வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் 3 நிலைகள் முன்னேறி முதல் முறையாக முதல் பத்து நிலைகளுக்குள் புகுந்துள்ளார். 

மேலும் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது வென்ற சகலதுறை வீரர், பென் ஸ்டோக்ஸ் வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் 5 நிலைகள் முன்னேறி இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கனுடன் சேர்ந்து 20 ஆவது நிலையில் காணப்படுகின்றார். அத்துடன் இறுதிப்போட்டியில் பென் ஸ்டோக்ஸூடன் சேர்ந்து பெறுமதியான இணைப்பாட்டத்தினை பகிர்ந்து கொண்ட ஜொஸ் பட்லர் 2 நிலைகள் முன்னேறி 17 ஆவது நிலையை அடைந்துள்ளார். 

வில்லியம்சனிடம் மன்னிப்பு கோரிய பென் ஸ்டோக்ஸ்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (14) லோர்ட்ஸ்….

ஒரு வருட தடையிலிருந்து மீண்டு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிய முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 29 ஆவது நிலைக்கும், அதே அணியின் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி 32 ஆவது நிலைக்கும் முன்னேறியுள்ளனர். இறுதிப்போட்டியில் அரைச்சதம் அடித்து நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்த ஹென்றி நிக்கொல்ஸ் 51 ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

மேலும் நியூஸிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்காக துடுப்பாட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ரவீந்திர ஜடோஜா நீண்ட நாட்களுக்கு பின்னர் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேறியுள்ளார். அவர் 24 நிலைகள் முன்னேறி 108 ஆவது நிலையை அடைந்துள்ளார். ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி 886 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகின்றார். 

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

இந்திய அணியுடனான அரையிறுதி மற்றும் நியூஸிலாந்து அணியுடனான இறுப்போட்டி ஆகியவற்றில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் திறமையாக செயற்பட்ட கிறிஸ் வோக்ஸ் வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் 6 நிலைகள் முன்னேறி ஏழாவது இடத்தை அடைந்துள்ளார். 

உலகக்கிண்ண தொடரில் தன்னுடைய வேகத்தின் காரணமாக 20 விக்கெட்டுக்களை வீழ்த்தில் இங்கிலாந்து அணி சார்பாக அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஜொப்ரா ஆர்ச்சர் வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் உச்சத்தை தொட்டுள்ளார். ஆர்ச்சர் 13 நிலைகள் முன்னேறி 29 ஆவது நிலைக்கு வந்துள்ளார்.

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக செயற்பட்ட அவ்வணியின் வேகப்பந்துவீச்சாளர் மெட் ஹென்றி 5 நிலைகள் முன்னேறி மீண்டும் முதல் பத்து நிலைக்குள் இடம்பிடித்துள்ளார். அரையிறுதியில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 32 ஆவது நிலையையும், மிட்செல் சென்ட்னர் 33 ஆவது நிலையையும் அடைந்துள்ளனர். 

ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 2019 உலகக்கிண்ண தொடரிலும் 18 விக்கெட்டுக்களை வீழ்த்திய இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஜஸ்பிரிட் பும்ரா தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். 

சகலதுறை வீரர்களுக்காக தரவரிசை

பங்களாதேஷ் அணிக்காக தன்னை முழுமையாக அர்பணித்து 2019 உலகக்கிண்ண தொடரில் ஒரு சகலதுறை வீரராக 11 விக்கெட்டுக்கள் மற்றும் 606 ஓட்டங்களை குவித்த சகீப் அல் ஹசன் 406 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். 

முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை வளர்ந்துவரும் அணி

முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க விளையாட்டு….

இரண்டாமிடத்தில் தொடர்ந்தும் இங்கிலாந்து சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் காணப்படுகின்றார். ஆனால் 2019 உலகக்கிண்ண தொடரில் 7 விக்கெட்டுக்களுடன், 465 ஓட்டங்களை குவித்ததன் மூலம் ஸ்டோக்ஸ் 319 தரவரிசை புள்ளிகளை பெற்று வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளை பெற்றுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<