குமார் சங்கக்கார விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா?

2550
Will Sanga face inquire?

தமது தரப்பினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, வேண்டும் என்றால் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்பொழுது இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருபவருமான  குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.  

அண்மையில் நடந்த ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது தொடக்கம் அணியில் அதிரடி மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமைப் பதவியில் இருந்து விலகியதோடு டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி அணிகளுக்கு வெவ்வேறு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எமது தடுமாற்றம் இலங்கை அணிக்கு பாதிப்பாக அமையும் : சங்கக்கார

அதற்கு முன்னர் அணித் தலைவர், தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் ஏனைய வீரர்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் பல வகையான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் தோல்விகள் குறித்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட வீரர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சங்கக்கார துடுப்பாட்ட வரிசையில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

இது குறித்து விசேட செவ்வி ஒன்றில் கருத்து தெரிவித்த சங்கா, “அணி ஒன்று தோல்வியடையும்போதே விசேடமாக அனைத்து கருத்துகளும் எழுகின்றன. வெற்றி பெறும்போது இவ்வாறான கருத்துகள் வருவது குறைவு. இந்த கருத்துகளை பார்க்கும்போது எனது அல்லது மஹேல ஜயவர்தனவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த அல்லது எம் மீது சந்தேகங்களை ஏற்படுத்த இவ்வாறு செய்வதாகத் தோன்றுகின்றது” என்று விளக்கம் அளித்தார்.

குறிப்பாக சங்கக்கார மற்றும் இலங்கை அணியின் மற்றொரு முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவின் முகாமையாளர் சார்லி ஒஸ்டின் தொடர்பிலும் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் இலங்கை அணி விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டும் தரப்புகள் குறிப்பிடுகின்றன.

எனினும் சார்லி ஒஸ்டின் தனது வர்த்தக நடவடிக்கையில் தொடர்புபட்டவர் என்றும் அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் தொடர்பு இல்லை என்றும் சங்கக்கார குறிப்பிட்டார்.

“நான் தலைவராக இருக்கும்போதும் மஹேல தலைவராக இருக்கும்போதும் அணியாக நாங்கள் பெற்ற வெற்றிகள் தொடர்பிலேயே நாம் பார்க்க வேண்டும். நாங்கள் ஐந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் விளையாடினோம். 2014இல் நாம் ஒரு உலகக் கிண்ணத்தில் வெற்றி பெற்றோம். துரதிஷ்டவசமாக நான்கில் எம்மால் வெல்ல முடியவில்லை.

அதேபோன்று 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் முதல் முறை நாம் தோற்கடித்தோம்.

இவை அனைத்துமே முகாமையாளரின் தலையீட்டாலா இடம்பெறுகின்றன. தேர்வுக்குழு ஒன்று இருக்கிறது, அணித் தலைவர் ஒருவர் இருக்கிறார், கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஒன்று இருக்கிறது. இதனையெல்லாம் தாண்டி ஒரு தனி நபருக்கு தலையிட முடியுமாக இருந்தால் நாட்டில் அவருக்கு என்ன செய்ய முடியாது?” என்று சங்கக்கார கேள்வி எழுப்பினார்.

ஆரம்பத்தில் மஹேல ஜயவர்தனவின் தனிப்பட்ட முகாமையாளராக இருந்த சார்லி ஒஸ்டின் தொடந்து சங்கக்காரவின் முகாமையாளராக இணைந்தார். 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அவர் சங்கக்காரவின் முகாமையாளராக செயற்பட்டு வருகிறார்.

அழுத்தங்களுடன் ஜிம்பாப்வேயை டெஸ்ட்டில் எதிர்கொள்ளவுள்ள இலங்கை

“கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் வரும் வாய்ப்புகளை பார்த்துக் கொள்ளவே நான் சார்லி ஒஸ்டினை இணைத்துக் கொண்டேன். சார்லி ஒஸ்டின் என்னை வேலைக்கு அமர்த்தவில்லை. மாறாக, அவர் வேலை பார்ப்பது என்னிடம்” என்று சங்கக்கார கூறினார்.

எனினும் தமது தரப்பினர் தொடர்பில் தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கவலையை வெளியிட்ட சங்கா, இவைகள் பற்றி பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“இந்த குற்றச்சாட்டுகளில் சில உண்மைகள் இருக்கும் என்றால், அதை யாருக்காவது கூற முடியும். விளையாட்டுத் துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார், கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஒன்று இருக்கிறது. எனவே இதுபற்றி பக்கச்சார்பற்ற முறையில் விசாரணை நடத்த முடியும். எம்மிடம் வேண்டும் என்றாலும் விசாரணை நடத்த முடியும்.

இதனை செய்வது கிரிக்கெட் வீரர்களுக்கும் நல்லது, கிரிக்கெட் சபைக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் நல்லது. எனவே இது பற்றி நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்று நான் நம்புகிறேன்” என்றும் சங்கக்கார குறிப்பிட்டார்.