சீகிரிய மோட்டார் பந்தயத்தில் சாதிப்பாரா கமால்தீன் ஹம்தான்?

239

இலங்கை மோட்டார் வாகன சாரதிகள் சங்கமும், இலங்கை விமானப் படையின் சேவா வனிதா பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 2018ஆம் ஆண்டுக்கான ‘சீகிரிய ரெலி குரொஸ்’ மோட்டார் வாகன ஓட்டப் பந்தயம் (Sigiriya Rallycross-2018) இம்மாதம் 27ஆம் திகதி சீகிரியாவிலுள்ள இலங்கை விமானப்படை ஓடுபாதையில் நடைபெறவுள்ளது.  

சுவாரசியமான பந்தயங்களோடு நடைபெறவுள்ள வளவ சுப்பர் க்ரொஸ் 2018

சபரகமுவ மாகாணத்தின் எல்லை ஓரத்தில்………

இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தினால் நடத்தப்படுகின்ற மோட்டார் பந்தய சம்பியன்ஷிப் தொடர்களில் முக்கிய இடத்தை வகிக்கின்ற சீகிரிய மோட்டார் பந்தயத்தில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற காரோட்டிகள் மற்றும் சைக்கிளோட்டிகளுக்கு இவ்வருட இறுதியில் தேசிய சம்பியனை தீர்மானிப்பதற்கான புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கின்ற முக்கிய போட்டியாகவும் இது அமையவுள்ளது.

2009ஆம் ஆண்டு ஆரம்பமான இப்போட்டியானது 10ஆவது தடவையாக இம்முறை நடைபெறவுள்ளது. அத்துடன், 200 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ள இம்முறைப் போட்டித் தொடரில் மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என இரு பிரிவுகளிலும் 24 வகையான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற சீகிரிய ரெலி குரொஸ் மோட்டார் பந்தயமானது வருடத்தின் இறுதி மோட்டார் பந்தய போட்டித் தொடராக அமையப் பெற்றதுடன், இதில் MX 2500 சீசீ மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயமானது வருடத்தின் சம்பியனைத் தீர்மானிக்கின்ற போட்டியாகவும் அமைந்தமை சிறப்பம்சமாகும்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைய காத்திருக்கும் இரண்டாவது இலங்கையர்

உலகின் மிக உயரமான மலைச் சிகரமாக விளங்குகின்ற…….

எனினும், குறித்த போட்டிப் பிரிவில் தேசிய சம்பியனான இஷான் தசநாயக்கவுக்கு கடந்த வருடம் சிறப்பாக அமையவில்லை. உபாதை காரணமாக நான்கு முக்கிய போட்டித் தொடர்களை தவறவிட்ட அவர், சீகிரிய ரெலி குரொஸ் மோட்டார் பந்தயம் நடைபெறுவதற்கு முன் தரப்படுத்தலில் 3ஆவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.

இதேவேளை, 2016இல் சம்பியன் பட்டத்தை வென்ற இஷான் தசநாயக்க, இலங்கையின் சிறந்த மோட்டார் சைக்கிளோட்டியாக பல தடவைகள் விருதுகளைப் பெற்றுக்கொண்டதுடன், தொடர்ச்சியாக 2017இலும் தேசிய சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இந்நிலையில், இம்முறை சீகிரிய ரெலி குரொஸ் மோட்டார் பந்தயத்தில் MX 2500 சீசீ மோட்டார் சைக்கிள் பிரிவில் களமிறங்கி மீண்டும் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் அவர் உள்ளார்.

இதேநேரம், மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தய தரவரிசையில் முதலிரண்டு இடங்களையும் பெற்றுக்கொண்டுள்ள ஜக்குவஸ் குணவர்தன மற்றும் முன்னாள் நட்சத்திர வீரர் கயான் சந்தருவன் ஆகியோர் இஷான் தசநாயக்கவுக்கு பலத்த போட்டியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, அண்மையில் நிறைவுக்கு வந்த வளவ சுப்பர் க்ரொஸ் மோட்டார் பந்தயத்தில் யமஹா YZ 125 சீசீ பிரிவு மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், 250 சீசீ பிரிவில் 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட புத்தளத்தைச் சேர்ந்த இளம் மோட்டார் சைக்கிள் ஓட்ட வீரரான கமால்தீன் ஹம்தானும், இம்முறை சீகிரிய ரெலி குரொஸ் மோட்டார் பந்தயத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

கமால்தீன் ஹம்தான்

அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற தேசிய மட்ட மோட்டார் பந்தயங்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்ற அவர், கடந்த வருடமும் இப்போட்டித் தொடரில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மோட்டார் கார் ஓட்டப் பிரிவில் (SL GT Cars) 3,500 சீசீ ரக காரோட்டப் போட்டிகளில் அஷான் சில்வா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம். இவ்வருடத்தில் நடைபெற்ற அனைத்துப் மோட்டார் பந்தயப் போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், தரவரிசையில் முன்னிலை பெற்று இவ்வருடத்துக்கான தேசிய சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட வீரராக சீகிரிய ரெலி குரொஸ் மோட்டார் பந்தயத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், அஷானுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து புள்ளிப் பட்டியலில் அவரை நெருங்கி வருகின்ற இளம் வீரரான குஷான் பீரிஸ், கடந்த வருடம் நடைபெற்ற தகுதிச் சுற்றில் அஷான் சில்வாவை விட தனது சிறந்த காலத்தைப் பதிவுசெய்திருந்தார்.

அஷான் சில்வா

எனவே, இம்முறை நடைபெறவுள்ள சீகிரிய ரெலி குரொஸ் மோட்டார் பந்தயத்தில் மோட்டார் கார் பிரிவில் நடப்புச் சம்பியனான அஷான் சில்வாவுக்கு குஷான் பீரிஸ், கடுமையான போட்டியைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்முறை சீகிரிய மோட்டார் பந்தயமானது அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இந்தப் போட்டிகளை நேரடியாகவும், முக்கிய செய்திகளாகவும் கொண்டுவரவிருப்பதோடு ThePapare.comஇன் மோட்டார் பந்தயங்களுக்காக வழங்கப்படும் Raceshow நிகழ்ச்சியை உங்களுக்கு மைதானத்தில் இருந்து கண்டுகளிக்கவும் முடியும்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<