இம்முறை டயலொக் சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு?

1017

இலங்கையின் கால்பந்து ரசிகர்கள் அனைவருக்கும் விருந்தளிக்கும் ஒரு பருவகாலமான டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடர் இறுதித்தருவாயை எட்டியுள்ள நிலையில், இம்முறை கிண்ணத்திற்கான போட்டிக்காக தற்பொழுது இரு அணிகளே எஞ்சியிருக்கின்றன.  

கடந்த முறை இத்தொடரின் முதல் சுற்று இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் சுற்றில் முதல் 4 இடங்களையும் பெற்ற அணிகள் அடுத்த சுற்றான சுபர் 8 சுற்றில் விளையாடின. எனினும், இம்முறை தொடரில் பங்குகொள்ளும் 18 அணிகளும் ஏனைய அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் என்ற முறைக்கேற்ப, அனைத்து அணிகளும் தலா 17 போட்டிகளில் விளையாட வேண்டும்.

சுப்பர் சன்னை வீழ்த்த உதவிய புது மணமகன் ரிப்னாஸ்

திருமண பந்தத்தில் இணைந்து அடுத்த தினத்தில் களமிறங்கிய மொஹமட் ரிப்னாஸ், அணித் தலைவராக…

அந்த வகையில் தற்பொழுது 13 வாரங்களுக்கான போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கிண்ணத்திற்கு போட்டி போடும் இரு தரப்பாக நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகம் மற்றும் கடந்த முறை இரண்டாம் இடம் பெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகம் ஆகிய இரண்டு அணிகளே எஞ்சியிருக்கின்றன.

இந்நிலையில், கிண்ணத்தை வெல்வதற்கு இவ்விரு அணிகளுக்கும் உள்ள சாத்தியம் மற்றும் அவர்கள் அடுத்துவரும் போட்டிகளில் எவ்வாறான முடிவுகளைப் பெற வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

 ரினௌன் விளையாட்டுக் கழகம்

கடந்த இரண்டு பருவகாலப் போட்டித் தொடர்களிலும் இறுதிவாரம் வரை போராடி, கடைசி நேரத்தில் சம்பியன் கிண்ணத்தை இழந்த ரினௌன் விளையாட்டுக் கழகம், இம்முறை கிண்ணத்தை நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையோடு அபாரமாக விளையாடி வருகின்றது.

இம்முறை தொடரில் இதுவரை எந்தவொரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காத ரினௌன் வீரர்கள், இறுதியாக சுபர் சன் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் வீழ்த்தியிருந்தனர். ஏற்கனவே, பலம்கொண்ட கொழும்பு கால்பந்துக் கழக அணி மற்றும் இராணுவப்படை அணிகளை வீழ்த்திய சுபர் சன்னுக்கு எதிராக ரினௌன் வெற்றி பெற்றமை அவர்களது பலத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

புள்ளிப் பட்டியல் (2017.11.28ஆம் திகதிவரை)

கடந்த முறை ரினௌன் அணியில் விளையாடிய அனுபவ வீரர்களான மொஹமட் பஸால் மற்றும் பசுல் ரஹ்மான் ஆகியோர் இந்த பருவகாலத்தில் கொழும்பு கால்பந்து கழகத்துடன் இணைந்து கொண்டுள்ளனர். எனவே, இளம் வீரர்களைக் கொண்ட அணியை வழிநடாத்தும் பாரிய ஒரு பணியை தலைவர் ரிப்னாஸ் கொண்டுள்ளார்.

எனினும், இலங்கையின் தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் அமனுல்லாவின் வழிகாட்டலில் தனக்குள்ள பொறுப்புக்களை ரிப்னாஸ் சிறந்த முறையில் கொண்டு செல்கின்றார். அணியை வழிநடாத்தும் அதேவேளை, அணிக்காக அதிக கோல்களைப் பெற்றுக் கொடுக்கும் ஒருவராகவும் அவர் உள்ளார்.

FIFA தரவரிசை வெளியீடு : வரலாற்றில் இலங்கைக்கு மிகப் பெரிய சரிவு

சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் (FIFA) தரவரிசையில் உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனி…

அதுபோன்றே, அனுபவம் மிக்க ஹகீம் காமில் மற்றும் ப்ரன்சிஸ் ஆகியோர் ரிப்னாசுக்கு பின்களத்தில் பங்களிப்பை வழங்க, தொடரில் அதிக கோல்களைப் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள ஜொப் மைக்கல் மற்றும் ட்ரவரே மொஹமட் ஆகியோர் முன்களத்தில் சிறந்த பணியை மேற்கொள்கின்றனர். மத்திய களத்தில் அனுபவம் மிக்க ரிஸ்னி உள்ளார்.

இதில் குறிப்பாக, ஒரு வருட போட்டித் தடையை எதிர்கொண்டிருந்த ப்ரன்சிஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளமை ரிஸ்கான், ரியால், திமுது பிரியதர்ஷன போன்றவர்களுக்கு மிகவும் பலம் சேர்க்கும் ஒரு விடயமாக அமைந்துள்ளது.

ரினௌனின் புள்ளிப் பட்டியல்

போட்டி வெற்றி சமநிலை தோல்வி பெ.கோ எ.பெ.கோ கோ. வித் புள்ளி
14 11 3 0 41 15 26 36

பெ.கோ – பெற்ற கோல்கள்  | எ.பெ.கோ – எதிரணி பெற்ற கோல்கள் 

கோ. வித் – கோல் வித்தியாசம்

ரினௌன் அணி 14 போட்டிகளில் 11 வெற்றி மற்றும் 3 சமநிலையுடன் 36 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இவர்கள் இம்முறை தொடரில் சம்பியனாக வேண்டுமாயின் அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் அல்லது அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அதேவேளை, கொழும்பு அணியுடனான இறுதி வார மோதலில் போட்டியை சமநிலையில் முடிக்க வேண்டும்.

ரினௌன் விளையாட்டுக் கழகம்

அவ்வாறு இல்லையெனின், அடுத்த இரண்டு போட்டிகளிலும் ரினௌன் வெற்றி பெறும் அதேவேளை, கொழும்பு அணி ஒரு தோல்வியை அல்லது ஒரு சமநிலையான முடிவைப் பெறும் பட்சத்தில் எந்தவித சந்தேகமும் இன்றி இவர்கள் (ரினௌன்) இறுதி வாரத்திற்கு முன்னரே சம்பியனாகத் தெரிவாகுவர்.

அதிகமான இளம் வீரர்களைக் கொண்ட ரினௌன் அணிக்கு கிண்ணத்திற்கான கனவை நிறைவேற்ற அடுத்த 3 வாரங்களிலும் பலம்மிக்க அணிகளையே அவர்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

 ரினௌன் அணிக்கு உள்ள அடுத்த மோதல்கள்  

சொலிட் விளையாட்டுக் கழகம், விமானப்படை விளையாட்டுக் கழகம், கொழும்பு கால்பந்துக் கழகம்

 கொழும்பு கால்பந்துக் கழகம்

கொழும்பு கால்பந்துக் கழகத்தைப் பொறுத்தவரை நடப்புச் சம்பியனாக மாத்திரமன்றி, கடந்த இரண்டு முறையும் தொடர்ச்சியாக DCL சம்பியன் கிண்ணத்தை வென்ற அணியாகவும் உள்ளது.

பலம் கொண்ட வீரர்கள் குழாமை வைத்திருக்கும் அவர்கள் களுத்துறையில் இடம்பெற்ற சுபர் சன் அணியுடனான போட்டியில் மாத்திரம் 2-0 என அதிர்ச்சி தோல்வியடைந்தனர். குறித்த போட்டியில் கொழும்பு அணிக்கு எதிரான இரண்டு கோல்களையும் அவ்வணியின் முன்னாள் வீரர் அபீஸ் ஒலெய்மி பெற்றமை முக்கிய அம்சமாகும்.

எவ்வாறாயினும், களுத்துறை வெர்ணன் பெர்ணான்டோ மைதானத்தில் கொழும்பு அணியின் வெற்றிப் பதிவுகள் மிகவும் மோசமாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டி வெற்றி சமநிலை தோல்வி பெ.கோ எ.பெ.கோ கோ. வித் புள்ளி
13 9 3 1 42 10 32 30

பெ.கோ – பெற்ற கோல்கள்  | எ.பெ.கோ – எதிரணி பெற்ற கோல்கள் 

கோ. வித் – கோல் வித்தியாசம்

இவர்கள் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 9 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் 3 சமநிலையான முடிவுகளுடன் புள்ளிப் பட்டியலில் 30 புள்ளிகளைப் பெற்று ரினௌன் அணியைப் பின்தொடர்ந்து செல்லும் அணியாக உள்ளது. எனினும், கோல் வித்தியாசத்தைப் பார்க்கும்பொழுது இவர்கள் ரினௌன் அணியை விட அதிக கோல் வித்தியாசத்தைக் கொண்டுள்ளனர். (கொழும்பு – 32, ரினௌன் – 26)

இம்முறை கொழும்பு அணியைப் பொறுத்தவரை முதல் பதினொருவர் மற்றும் உதிரி வீரர்கள் என அனைவரும் அனுபவம் மற்றும் திறமைமிக்க வீரர்களாகவே உள்ளனர்.

டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் முதல் முறை கொழும்பு அணிக்காக விளையாடும் முன்னாள் ரினௌன் வீரர்களான பஸால், பசுல் ரஹ்மான், சௌண்டர்ஸ் அணியின் முன்னாள் வீரர் டிலான் கௌஷல்ய, சொலிட் அணியின் முன்னாள் வீரர் டுன்டே, ஷலன சமீர மற்றும் கோல் காப்பாளர் கவீஷ் என பல வீரர்கள் மொஹமட் ரூமியின் பயிற்றுவிப்புடன் புது அனுபவத்தைப் பெற்று விளையாடுகின்றனர்.

அது போன்றே, கொழும்பு அணியின் நிரந்தரத் தூண்களாக உள்ள அபீல் மொஹமட், சர்வான் ஜோஹர், நிரான் கனிஷ்க, மொமாஸ் யாபோ மற்றும் அணித் தலைவர் ரௌமி மொஹிடீன் போன்றோர் புதிய இணைப்புகளுடன் தமது வழமையான ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு கால்பந்துக் கழகம்

இவ்வாறான பலமான குழாமுடன் உள்ள கொழும்பு அணி இம்முறையும் சம்பியன் கிண்ணத்தை வென்று ஹெட்ரிக் சாதனை படைக்க, அடுத்து வரும் 4 போட்டிகளையும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இதில் அவர்கள் ரினௌன் விளையாட்டுக் கழகத்தையே இறுதி வாரத்தில் எதிர்கொள்ளவுள்ளனர்.

அதற்கு முன்னைய போட்டிகளிலும் ரினௌன் அணியினரைப் போன்றே கொழும்பு அணியினரும் பலம் பொருந்திய அணியினரையே எதிர்கொள்ளவுள்ளனர். எனினும் இவர்களுக்கு மேலும் நான்கு போட்டிகள் எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரினௌன் அணி அடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெறும் பட்சத்தில், கொழும்பு அணியினரும் தொடர் வெற்றிகளைப் பெறும் அதேவேளை, இறுதி வாரத்தில் இடம்பெறும் தீர்மானமிக்க ரினௌன் அணியுடனான போட்டியை வெற்றி கொண்டால் மாத்திரமே நடப்புச் சம்பியனுக்கு மூன்றாவது முறையாகவும் கிண்ணத்தைக் கைப்பற்ற முடியுமாக இருக்கும்.

பணிப்பகிஷ்கரிப்பில் கால்பந்து நடுவர்கள்?

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL), தமக்கான போட்டிக் கொடுப்பனவுகளை வழங்காததனை…

எனினும், ரினௌன் அணி இறுதி வாரத்திற்கு முன்னர் ஒரு தோல்வியை சந்தித்தால், கொழும்பு வீரர்கள் அடுத்துவரும் அனைத்துப் போட்டிகளையும் வென்று, ரினௌன் அணியுடனான போட்டியை சமப்படுத்தினால், இரு அணிகளினதும் கோல் வித்தியாசத்திலேயே வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

கொழும்பு அணிக்கு உள்ள அடுத்த போட்டிகள்

விமானப்படை விளையாட்டுக் கழகம், நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம், இராணுவப்படை விளையாட்டுக் கழகம், ரினௌன் விளையாட்டுக் கழகம்

எவ்வாறிருப்பினும், இறுதி வாரம் இடம்பெறவுள்ள ரினௌன் – கொழும்பு அணிகளுக்கு இடையிலான மோதல் அனைவரது எதிர்பார்ப்பையும் கொண்ட போட்டியாக அமையவுள்ளது.

எனினும், அடுத்து வரும் போட்டிகளில் ரினௌன் அல்லது கொழும்பு என ஏதாவது ஒரு அணி தொடர் தோல்விகளை சந்தித்தால், அது அடுத்த அணிக்கு கிண்ணத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரப்படுத்தலில் 3ஆம் (விமானப்படை), 4ஆம் (நிவ் யங்ஸ்), 5ஆம் (சுபர் சன்) இடங்களில் இருக்கும் அணிகள் அடுத்து வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெற்றாலும் அவர்களுக்கு கிண்ணத்தை வெல்ல முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

இம்முறை டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் கிண்ணத்தை வெல்லும் அணி எது? உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள் ?