தென்னாபிரிக்காவுடன் நடைபெற்று முடிந்த T-20 போட்டித் தொடர் மற்றும் தற்பொழுது நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து, தன்னுடைய அற்புதமான மற்றும் ஆக்ரோஷமான பந்து வீச்சின் மூலம் தென்னாபிரிக்க அணியினை மேலும் பலமடையச் செய்யும் முக்கிய வீரராக இம்ரான் தாஹிர் இருந்து வருகின்றார்.

தீர்மானம் மிக்க, விறுவிறுப்பான T-20 தொடரை இறுதி நேரத்தில் இலங்கை அணி வென்ற போதிலும், குறித்த தொடரில் இம்ரான் தஹிரின் பந்து வீச்சுக்கு இலங்கை வீரர்கள் தடுமாறியதை காணக்கூடியதாக இருந்தது.

தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்ற முதல் போட்டியில் 126 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல 19 பந்துகளுக்கு 43 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 16 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தனர். இந்நிலையில், அவ்விரு விக்கெட்டுகளையும் ஒரே ஓவருக்குள் வீழ்த்தி இலங்கை அணியின் தோல்விக்கான திருப்புமுனையை ஏற்படுத்தினார் தாஹிர்.

இலகு வெற்றியை சுவீகரித்த தென்னாபிரிக்கா

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான 5 ஒருநாள் சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில்…

அத்துடன் 3 போட்டிகளைக் கொண்ட குறித்த T-20 தொடரில் அவர் மொத்தமாக 55 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை (சராசரி – 9.16%) வீழ்த்தியிருந்தார். இதில் சிறந்த பரிதியாக 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பதம் பார்த்தார்.

மேலும் இறுதியாக நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில், 62 ஓட்டங்களை பெற்றிருந்த குசல் மென்டிஸ் உள்ளடங்கலாக, மத்தியகள துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த தாஹிர், மொத்தமாக 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென்னாபிரிக்க அணி, 94 பந்துகள் எஞ்சியிருக்க 8 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு, இலங்கைக்கு எதிரான ஐந்தாவது மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்வதற்கு இவர் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

யார் இந்த தாஹிர்?

மொகமட் இம்ரான் தாஹிர் என்ற முழுப் பெயரைக் கொண்ட இவர், பாகிஸ்தான் தலைநகரும் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் உள்ள லாகூரில் பிறந்தவராவார்.  

ஒரு காலத்தில், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் இடம்பெற்றிருந்த அவர், பின்னர் குறிப்பிட்ட சில சுற்றுப் பயணங்களுக்காக பாகிஸ்தான் A அணிக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எவ்வாறெனினும், அதிகளவான சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களை கொண்டிருந்த பாகிஸ்தான் தேசிய அணியில் கடின போட்டியின் மத்தியில் தனக்கென்று சிறப்பிடம் பிடிப்பதற்கு அவருக்கு முடியாமல் போனது.  

Imran Tahirஅதன் பின்னர், இங்கிலாந்து நாட்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். எனினும் கூடிய நாட்கள் அங்கிருக்கவில்லை. அங்கிருந்து தென்னாபிரிக்க சென்ற அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த தனது மனைவியை கண்டு கொண்டதோடு அங்கேயே நிரந்தரமாக குடியேறினார். அங்கு அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. பல்லாண்டு காலமாக சிறந்த சுழல் பந்து வீச்சளார்களை கொண்டிராத தென்னாபிரிக்க அணி சிறந்த சுழல் பந்து வீச்சாளார் ஒருவரை எதிர்பார்த்திருந்தது.

இங்கிலாந்து மண்ணில் அனுபவம் கொண்ட இம்ரான் தாஹிர், இங்கிலாந்து அணிக்கெதிரான தொடருக்காக தென்னாபிரிக்க அணிக்கு தெரிவு செய்யப்பட்டார். எனினும், பின்னர் அவரது குடியேற்றம் தொடர்பான சட்ட ரீதியான குளறுபடிகள் காணப்பட்டதால் அணியில் இருந்து அவர் நீக்கி விடப்பட்டார். எனினும், 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சட்ட ரீதியான குடியேற்றத் தகுதியைப் பெற்றுக்கொண்டவுடன் இந்தியாவுடனான 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடருக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அதில் ஒரு போட்டியிலும் அவரால் பங்குபற்ற முடியவில்லை.

அப்போதைய அணித் தலைவர் கிரேம் ஸ்மித் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆசிய நாடுகளில் நடைபெறவிருந்த உலக கிண்ணப் போட்டிகளில் எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு ஆயுதமாக தாஹிரை வைத்திருக்க விரும்பினார்.

அதேபோன்று, ஸ்மித்தின் எதிர்பார்ப்பை மெய்ப்பிக்கும் வகையில் உலக கிண்ணத்தின் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தனது அறிமுக போட்டியில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரதும் கவனத்தை ஈர்த்தார். அத்துடன் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தாஹிரின் சர்வதேசப் போட்டி விபரம்  

போட்டிகள் பந்துகள் ஓட்டங்கள் விக்கெட்டுகள் சிறந்த பந்து வீச்சு சாராசரி
டெஸ்ட் 20 3925 2294 57 5/32 40.24%
ஒருநாள் 65 3417 2628 114 7/45 29.9%
T-20 30 672 716 49 4/21 13.7%


அதன்
பின்னர் குறித்த ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அவர், பின்னர் தென்னாபிரிக்க அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டார். ஒரு சில போட்டிகளில் திறமைகளை வெளிபடுத்த தவறியமையினால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தாலும் 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் முதல் தடவையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், குறித்த போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியையும் தேடிக் கொடுத்தார்.

பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண T-20 போட்டிகளில் நெதர்லாந்து அணியுடனான விறுவிறுப்பான போட்டியில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது வாழ்நாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சினைப் பதிவு செய்தார். அப்போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதையும் தாஹிர் பெற்றுகொண்டார்.

அதே நேரம், குறித்த போட்டித் தொடரில் 5 போட்டிகளில் பங்குபற்றி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரில் கூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளராக பதிவானார்.

இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டில் ஆட்ட நிர்ணய சதி?

இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் (SLC) நடாத்தப்படும் பிரீமியர் லீக் தொடரின் B மட்ட…

பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியுடனான காலிறுதிப் போட்டியில், துடுப்பாட்ட ஜாம்பவான் மஹேல ஜெயவர்தன உள்ளிட்ட நான்கு வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாபிரிக்க அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். தனது சிறந்த பங்களிப்பினால் அப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தாஹிர் வென்றிருந்தார்.

மேலும் சில சாதனைகள்

*தென்னாபிரிக்க அணிக்காக உலக கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (29 விக்கெட்டுகள்) வீழ்த்திய ஒரே சுழல் பந்து வீச்சாளர்.

*தென்னாபிரிக்க அணி சார்பாக முதன் முதலாக ஒருநாள் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்.

*குறைந்த போட்டிகளில் (58) விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்.

மற்றும் பல சாதனைகளை புரிந்துள்ள இம்ரான் தஹிர், தென்னாபிரிக்க அணியின் பல வெற்றிகளுக்கு பக்க பலமாகவும், திருப்பு முனைகளை ஏற்படுத்தியவராகவும் உள்ளார் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. எனினும், இவ்வாறான சிறந்த வீரர்களை கொண்ட வலிமைமிக்க தென்னாபிரிக்க அணியை அவர்களது சொந்த மண்ணில் T-20 தொடரில் வெற்றியீட்டிய ஆசிய நாடுகளில் முதல் அணியாக இலங்கை அணி உள்ளது.

எனவே, எவ்வாறான அழுத்தங்கள் இருந்தாலும்  தென்னாபிரிக்காவுக்கு எதிராக செயற்பட்டு, வெற்றிகளைப் பெறக்கூடிய தகுதியும், வலிமையும் இலங்கை வீரர்களிடம் உள்ளது. எனினும் அதற்காக இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சமாளிக்க வேண்டிய ஒரு முக்கிய வீரராக இம்ரான் தாஹிர் உள்ளார்.

எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டிகளை நோக்காக கொண்டு இத்தொடரில் இலங்கையின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை அவர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் தமது திறமைகளை வௌிப்படுத்தி இருப்பைத் தக்க வைப்பதா? அல்லது வேறு வீரர்களுக்கு இடமளிப்பதா என்ற தீர்மானம் இளம் வீரர்களின் கைகளில் உள்ளது.