புதிய தொடர்களில் விளையாடவுள்ள இலங்கையின் ஏனைய கிரிக்கெட் அணிகள்

616
Sri-Lanka-A-Cricket

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்திற்கு இன்னும் 12 மாதங்களே எஞ்சியிருக்கின்றன. இந்த உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் விதமாக இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி வருகின்ற நாட்களில் பல்வேறு நாடுகளுடன் பல இருதரப்பு தொடர்களில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.

தேசிய அணி இவ்வாறு மும்முரமாக இருக்கின்ற நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை(SLC) இலங்கையின் ஏனைய  கிரிக்கெட்  அணிகளான  “A”  அணி, இளையோர் அணி (வளர்ந்துவரும் அணி)   மற்றும்  கனிஷ்ட  அணி ஆகியவற்றுக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களை ஏற்பாடு செய்திருக்கின்றது.

திரிமான்னவின் அதிரடி சதத்தினால் கொழும்பு அணிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடத்தும் மாகாண மட்ட ..

2018ஆம் ஆண்டின் முதல் அரைப்பகுதி உள்ளூர் கிரிக்கெட் தொடர்களினாலும், மாகாண கிரிக்கெட் தொடர்களினாலும் நிரப்பட்டிருக்கின்ற காரணத்தினால், 2018ஆம் ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியிலேயே இந்த கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன.  

இலங்கையின் ஏனைய அணிகளுக்கான தொடர்களில் விளையாடவுள்ள வீரர்களை இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வாளர்கள் மாகாண, உள்ளூர் தொடர்களின் மூலம் இனம்காணவுள்ளனர்.

கடந்த ஆண்டு இலங்கை “A” அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது திறமையாக செயற்பட்ட வீரர்களான தனன்ஞய டி சில்வா, ரொஷேன் சில்வா போன்றவர்கள், பின்னர் இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பினைப் பெற்று சிறப்பான பதிவுகளைக் காட்டியிருந்தனர்.

மேலும் லஹிரு குமார, அசித்த பெர்னாந்து மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் இலங்கையின் கனிஷ்ட (19 வயதின் கீழ்ப்பட்ட) அணியில் பிரகாசித்ததும் குசல் மெண்டிஸ், அமில அபொன்சோ மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இலங்கையின் இளையோர் அணியில் விளையாடிய போது ஜொலித்திருந்ததுமே அவர்களை தேசிய அணிக்குள் உள்வாங்க காரணமாக அமைந்தது.  

இப்படியான திறமையுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச வாய்ப்புக்களை வழங்கி அவர்களை தேசிய அணிக்குள் இணைப்பதே இந்த ஏனைய அணிகளுக்கான தொடர்களினை ஏற்பாடு செய்வதன்  அவசியமாக உள்ளது.

திறமை மிக்க வீரர்களை மேலும் இனங்காண்பதற்காக சுற்றுலா பங்களாதேஷ் “A” அணிக்கும் இலங்கை “A” அணிக்கும் அதிகாரப்பூர்வற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளும், ஒரு நாள் போட்டியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மேலும், இலங்கை “A” அணியினை பாகிஸ்தானுக்கு சுற்றுத் தொடர் ஒன்றில் விளையாட அனுப்பவும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையின் வளர்ந்து வரும் அணியும், தென்னாபிரிக்காவின் வளர்ந்து வரும் அணியும் இருதரப்பு தொடர்களில் விளையாடி வருகின்றன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த இருதரப்பு தொடர் இலங்கையில் இந்த ஆண்டு மீண்டும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இலங்கை வளர்ந்து வரும் அணி இந்த ஆண்டின் இறுதியில் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரிலும் பங்கேற்கின்றது. இத்தொடரில், ஆசிய நாடுகளின் எட்டு அணிகள் பங்கெடுக்கின்றன.  

நியூசிலாந்தில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்று முடிந்த 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் பங்கேற்றிருந்த இலங்கையின் கனிஷ்ட அணி புதிய பயிற்சியாளர் ஒருவரின் கீழ், பலமிக்க இந்திய அணியுடனும், பங்களாதேஷ் அணியுடனும் நடைபெறவுள்ள தொடரில் விளையாடவுள்ளதோடு ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ள கனிஷ்ட அணிகளுக்கான ஆசியக் கிண்ணத்திலும் பங்கேற்கின்றது.

மாலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித்…

புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இத் தொடர்களின் மூலம் கடந்த காலங்கள் போன்று மீண்டும் தேசிய கிரிக்கெட் அணிக்கு தகுதியான பல வீரர்கள் இனங்காணப்படுவார்கள் என்பதில் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உறுதியாக நம்பிக்கை கொள்கின்றது.

இலங்கையின் ஏனைய கிரிக்கெட் அணிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தொடர்கள்

கனிஷ்ட அணி
இந்திய கனிஷ்ட அணியின் இலங்கைக்கான சுற்றுப் பயணம்
இலங்கை கனிஷ்ட அணியின் பங்களாதேஷ் சுற்றுப் பயணம்
கனிஷ்ட அணிகளுக்கான ஆசியக் கிண்ணம்

வளர்ந்து வரும் அணி
தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியின் இலங்கைக்கான சுற்றுப் பயணம்
வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கிண்ணம்

“A” அணி
பங்களாதேஷ் “A” அணியின் இலங்கைக்கான சுற்றுப் பயணம்
இலங்கை “A” அணியின் பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணம்

குறிப்பு – வருகின்ற ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள லங்கன் பிரீமியர் லீக் (LPL) போட்டிகளின் போது இலங்கையின் ஏனைய  அணிகள் பங்குபெறுகின்ற தொடர்கள் எதுவும் இடம்பெறாது.