மெக்ராத்தை ஆச்சரியப்பட வைத்த விராட் கோஹ்லி

1284
Image Courtesy - BCCI

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இளஞ்சிவப்பு டெஸ்ட் போட்டியின் (Pink day test) ‘ஜேன் மெக்ராத் டே’ என அழைக்கப்படும் நாள் நேற்று (05) சிட்னி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. இதற்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார்.

சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

திசர பெரேராவை பாராட்டும் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள்

நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (03) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகி நேற்று (05) 3ஆவது நாள் நிறைவுக்கு வந்திருக்கின்றது. என்றும் இல்லாதவாறு சற்று வித்தியாசமாக மைதானம் முழுவது இளஞ்சிவப்பு (Pink) நிறத்தினால் சூழப்பட்டிருந்தது.

அநேகமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏன் மைதானம் இவ்வாறு இளஞ்சிவப்பு நிறமாக மாறியிருக்கின்றது என்பது தொடர்பில் ஒரே குழப்பமாக அமைந்திருக்கின்றது.

டெஸ்ட் போட்டிகளில் ‘பாக்சிங் டே’ (Boxing day) டெஸ்ட் போட்டி போலவே இதுவும் ஒன்றாக அமைந்திருக்கின்றது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்பது கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறும் டெஸ்ட் போட்டியே பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படும்.

அது போலவே 2009 ஆம் ஆண்டு முதல், வருடத்தின் முதல்  மாதமான ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியே இளஞ்சிவப்பு டெஸ்ட் (Pink test) என அழைக்கப்படும்.

ஏன் இவ்வாறு அழைக்கப்படுகின்றது..? அதற்கான காரணம் என்ன..?

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிளேன் மெக்ராத்தின் மனைவி ஜேன் லொயூஸ் ஸ்டீல் 2005 ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். அந்நேரத்தில் கிளேன் மெக்ராத்திற்கு ஒரு எண்ணம் தோன்றியது.

அந்த எண்ணத்தின் அடிப்படையில் மார்பக புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான அமைப்பு ஒன்றினை உருவாக்கியிருந்தார்.

உருவாக்கிய குறித்த அமைப்பிற்கு ‘மெக்ராத் பவுண்டேஷன்’ (McGrath Foundation) என பெயர் சூடியிருந்தார். இந்நிலையில் அவரது மனைவியான ஜேன் மெக்ராத் இந்த அமைப்பு உருவாக்கி 3 வருடங்களின் பின்னர், அதாவது 2008 ஜூன் 22 ஆம் திகதி மார்பக புற்றுநோயினாலேயே உயிரிழந்தார். அவர் மரணிக்கும் போது அவருக்கு வயது 42 ஆகும்.

அதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு முதல் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டி இளஞ்சிவப்பு டெஸ்ட் போட்டி என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த டெஸ்ட் போட்டி மூலமாக பெறப்படும் நிதி அனைத்தும் மெக்ராத்தினால் உருவாக்கப்பட்ட குறித்த அமைப்பிற்கும், அவுஸ்திரேலிய நாட்டில் நடைபெறுகின்ற மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மொஹமட் சமாஸின் போராட்டம் வீண்; ஆஸி. இளையோரிடம் மீண்டும் வீழ்ந்த இலங்கை

இது இவ்வாறு இருக்க, இந்த இளஞ்சிவப்பு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளுக்கு ஒரு தனியான சிறப்பு வழங்கப்படுகின்றது. அந்த அடிப்படையில் இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளும் அவ்வாறே அமைந்திருந்தது.

மூன்றாம் நாளில் மைதானத்திற்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களும் இளஞ்சிவப்பு நிறத்தினாலான ஆடைகளை அணிந்து வருவார்கள். மேலும், சிட்னி மைதானத்தில் அமைந்திருக்கின்ற பெண்களுக்காக தனியாக பகுதியானது இன்றைய நாளுக்காக மாத்திரம் மறைந்த மெக்ராத்தின் மனைவியான ஜேன் மெக்ராத்திற்காக ‘ஜேன் மெக்ராத் பார்வையாளர் அரங்கு’ என பெயர் சூடப்பட்டிருந்தது.

Image Courtesy – Fox sports Australia

மேலும், மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற 6 விக்கெட்டுக்கள் உள்ளிட்ட மைதானத்தை சூழ உள்ள அனைத்து பொருட்கள், விளம்பர பலகைகள் போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதற்கு மேலதிகமாக மைதானத்திற்கு வெளியில் இளஞ்சிவப்பு நிறத்தினாலான பெரிய பந்து ஒன்றும் வைக்கப்படும்.

அத்துடன் அன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இரு அணி வீரர்களுக்கும் மெக்ராத்தினால் இளஞ்சிவப்பு நிறத்தினாலான தொப்பியும் வழங்கப்படும். இந்த நாள் முழுக்க ‘ஜேன் மெக்ராத் டே’ என்றே அழைக்கப்படும்.

இந்த இளஞ்சிவப்பு டெஸ்ட் குறித்து மெக்ராத் பவுண்டேஷனின் நிறுவுனரான முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளேன் மெக்ராத் தெரிவிக்கையில்,

”அவுஸ்திரேலியாவை பொருத்த வரையில் பெரும்பாலான பெண்கள் மார்பக புற்றுநோயினாலேயே பாதிக்கப்படுகின்றார்கள். நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 மார்பக புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுகின்றார்கள். 85 வயதில் மரணிக்கும் பெண்களில் எட்டில் ஒருவர் (1/8) மார்பக புற்றுநோயினாலேயே மரணிக்கின்றனர்” என தெவிரித்தார்.

தற்போது நடைபெற்று வரும் இளஞ்சிவப்பு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி மெக்ராத் பவுண்டேஷனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மைதானத்திற்குள் நுழைந்திருந்தார்.

கோஹ்லி துடுப்பெடுத்தாட வரும் போது தன்னுடைய துடுப்பு மட்டை, கைக்கவசம், துடுப்பு மட்டையின் கைபிடி, கால் கவசம் போன்றவற்றை இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றி வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

இலங்கை A அணிக்காக கலக்கிய மொஹமட் சிராஸ்

இந்நிலையில் இதனை அவதானித்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிளேன் மெக்ராத் தெரிவித்ததாவது. ”குறித்த டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒருநாள் இரவு விராட் கோஹ்லி என்னிடம் வந்து, உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்றார். அதுபோலவே அவர் இளஞ்சிவப்பு நிறத்தில் துடுப்பெடுத்தாட வந்தது என்னை நெகிழ வைத்திருந்தது” என தெரிவித்தார்.

  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<