Skip to main content
அபிவிருத்தி கண்டு வரும் இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு மேலும் பல வாய்ப்பு

அபிவிருத்தி கண்டு வரும் இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு மேலும் பல வாய்ப்பு

Mohammed Rishad
12/07/2017

இந்தியாவின் புவனேஸ்வரில் நடைபெற்று முடிந்த 22ஆவது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றி ஒரு தங்கம் மற்றும் 4 வெள்ளிப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இலங்கை வீர வீராங்கனைகளுக்கு கட்டுனாயக்க விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாட்டை வந்தடைந்த இவ் வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சும், தேசிய மெய்வல்லுனர் சம்மேளன அதிகாரிகளும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டி.எம்.ஆர்.பி திஸாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

22ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

இந்தியாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள காலிங்கா மைதானத்தில் நிறைவடைந்த..

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை நாட்டவர் ஒருவர் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் (நிமாலி லியனாராச்சி - பெண்களுக்கான 800 மீற்றர்). இலங்கையில் உலகதரம் வாய்ந்த எந்தவொரு செயற்கை ஓடுபாதையும் இல்லாத காரணத்தால் இலங்கை வீரர்கள் சுமார் 2 வாரங்களுக்கு முன்னதாகவே மேலதிக பயிற்சிகளுக்காக இந்தியாவிற்குப் பயணமாகியிருந்தனர். இதற்கான அனைத்து நிதி வசதிகளையும் விளையாட்டுத்துறை அமைச்சு பொறுப்பேற்றிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

எனினும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியொன்றுக்காக பயிற்சிகளைப் பெறும் நோக்கில் நேர காலத்துடன் சென்ற முதல் தடவையாக இது விளங்குகின்றது. இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வீரர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொடுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாந்து தெரிவித்தார்.

இந்நிலையில், இம்முறை ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபற்றிய இலங்கை வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சிலும் விசேட வரவேற்பு வழங்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிடுகையில், ”ஆசிய அளவில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள அனைத்து வீர வீராங்கனைகளுக்கும் மிக விரைவில் வெளிநாட்டு பயிற்சியொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

அத்துடன், இந்திய அதிகாரிகளின் தவறான தீர்ப்பினால் ருமேஷிகா ரத்னாயக்க மற்றும் விதூஷா லக்மாலி ஆகியோருக்கு பதக்கங்களை வெல்ல முடியால் போனது கவலையளிக்கின்றது. கடந்த காலங்களைவிட மெய்வல்லுனர் விளையாட்டு முன்னேற்றம் அடைந்துள்ளமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எங்களுடைய அடுத்த இலக்கு அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளாகும். அதற்கு ஆயத்தமாவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராகவுள்ளேன்.

அத்துடன் இன்னும் 2 மாதங்களில் சுகததாஸ மைதான ஓடுபாதையின் வேலைகள் நிறைவடையவுள்ளன. அதன்பிறகு எமது வீரர்கள் எதிர்நோக்கியுள்ள மிக முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவுள்ளது.

இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக 23 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் பெரும்பாலான வீரர்கள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியிருந்த போதிலும், இறுதியில் ஒரு தங்கம் மற்றும் 4 வெள்ளிப் பதக்கங்களை இலங்கை வென்று பதக்கப்பட்டியலில் 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட நிமாலி லியனாராச்சி (2 நி. 05.23 செக்.) அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பின்ஷிப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil
Layout Content
Single Image Layout

About

We are professional and reliable provider since we offer customers the most powerful and beautiful themes. Besides, we always catch the latest technology and adapt to follow world’s new trends to deliver the best themes to the market.