எந்தவொரு வெற்றியும் இன்றி மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பும் இலங்கை மகளிர்

62

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும் அந்நாட்டு மகளிர் அணிக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியிலும் 31 ஓட்டங்களால் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் தரப்பு இத்தொடரையும் வைட்வோஷ் செய்தது.

ஏற்கனவே இடம்பெற்ற ஒரு நாள் மற்றும் T-20 என அனைத்துப் போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்திருந்த இலங்கை மங்கையர் அண்டிகுவாவிலுள்ள ஸ்டேன்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியையாவது வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன களம் கண்டது.

இலங்கை மகளிர் அணிக்கெதிரான டி20 தொடரும் மேற்கிந்திய தீவுகள் வசம்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை…

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கியது. இதன்படி அவ்வணி நிரனயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பில் அதிரடியாக ஆடிய டீன்றா டொட்டின் 67 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உள்ளடங்களாக 112 ஓட்டங்களைப் பெற்றமை சிறப்பம்சமாகும். இது தவிர ஹெய்லி மெத்திவ்ஸ் 34 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஏனைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.  

பந்து வீச்சில் இலங்கை அணியின் அமா காஞ்சனா 2 விக்கெட்டுகளையும் சிரிபாளி வீரக்கொடி, ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பின்னர் 160 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போதிலும் நம்பிக்கை தரும் விதத்தில் ஆடிய சசிகலா சிறிவர்தன மற்றும் ரெபேக்கா வேண்டோர்ட் ஆகியோர் இணைப்பாட்டமாக 84 ஓட்டங்களைப் பெற்றனர்.

எனினும் தேவையான ஓட்ட எண்ணிக்கையை விட மீதமுள்ள பந்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்த காரணத்தினால் விக்கெட்டுக்கள் கையிருப்பில் இருந்த போதும் வெற்றி இலக்கினை இலங்கை அணியினால் அடைய முடியவில்லை.

உலகில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்கள்

உலகின் மற்றைய விளையாட்டுக்களை போல கிரிக்கெட் விளையாட்டிலும்…

இலங்கை அணி சார்பில் ரெபேக்கா வேண்டோர்ட் 39 பந்துகளில் 50 ஓட்டங்களையும் சசிகலா சிறிவர்தன 44 பந்துகளில் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.    

சிறப்பாக பந்து வீசிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஹெய்லி மெத்திவ்ஸ் 18 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் ஸ்டெப்னி டெய்லர் 1 விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் டீன்றா டொட்டின் தெரிவு செய்யப்பட்டார். .

இந்த தோல்வியின் மூலம் குறித்த சுற்றுப் பயணத்தில் இடம்பெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 T-20 போட்டிகள் என அனைத்திலும் தோல்வி கண்ட இலங்கை மங்கையர் தொடரில் முழுமையாக இழந்து மற்றொரு மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்துள்ளனர்.

போட்டியின் சுருக்கம்