இங்கிலாந்திற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி சாதனை வெற்றி

592
AFP

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே பார்படோஸ் நகரில் இடம்பெற்று முடிந்திருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து வீரர்களை 381 ஓட்டங்களால் அபாரமாக தோற்கடித்துள்ளது.

மேலும், இவ்வெற்றியோடு ஓட்ட ரீதியில் தம்முடைய மூன்றாவது சிறந்த டெஸ்ட் வெற்றியினை பதிவு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, சொந்த மண்ணில் கிடைத்த சிறந்த டெஸ்ட் வெற்றியினையும் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் ஸ்மித்துக்குப் பதிலாக ரஸல் ஒப்பந்தம்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 4ஆவது பருவகால …

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு முதல் கட்டமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் முதல் போட்டியாக அமைந்த இந்த டெஸ்ட் கடந்த புதன்கிழமை (23) ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சிம்ரோன் ஹெட்மேயர் (81), ரொஸ்டன் சேஸ் (54) மற்றும் ஷாய் ஹோப் (57) ஆகியோரது அரைச்சதங்களின் உதவியோடு தமது முதல் இன்னிங்ஸில் 101.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 289 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதேநேரம், இங்கிலாந்து அணிக்காக ஜேம்ஸ் அன்டர்சன் 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.  

இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச்சின் திறமையான செயற்பாட்டினால் வெறும் 77 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணியின் இந்த மோசமான முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களை (17) கீட்டோன் ஜென்னிங்ஸ் பதிவு செய்ய, மேற்கிந்திய தீவுகள் அணியின் கேமர் ரோச் 17 ஓட்டங்களை மட்டும் விட்டுத்தந்து 5 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இதோடு, அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் அல்ஷாரி ஜோசேப் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து 212 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 415 ஓட்டங்களை பெற்றிருந்த போது தமது ஆட்டத்தை இடைநிறுத்தி, இங்கிலாந்து அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக மிகவும் கடினமான 618 ஓட்டங்களை நிர்ணயம் செய்தது.

மேற்கிந்திய தீவுகளின் இரண்டாம் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் இருந்த அதன் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் அவருடைய கன்னி இரட்டைச் சதத்தோடு 202 ஓட்டங்களை குவித்ததுடன், ஷேன் டோவ்ரிச் அவரது 3ஆவது ஒரு நாள் சதத்துடன் 116 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்  மறுமுனையில், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக மொயீன் அலி 3 விக்கெட்டுக்களையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.

இதனை தொடர்ந்து மிகவும் சவாலான வெற்றி இலக்கான 618 ஓட்டங்களை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 80.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 246 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ரோரி பேன்ஸ் மட்டும் அரைச்சதம் ஒன்றுடன் 84 ஓட்டங்களை குவிக்க, ரோஸ்டன் சேஸ் 60 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அவரது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பந்துவீச்சுடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டருக்கு கொடுக்கப்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டி நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் இரு அணிகளும் என்டிகுவாவில் இடம்பெறவுள்ள தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வியாழக்கிழமை (31) மோதுகின்றன.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் (முதல் இன்னிங்ஸ்) – 289 (101.3) சிம்ரோன் ஹெட்மேயர் 81, ஷாய் ஹோப் 57, ரோஸ்டன் சேஸ் 54, ஜேம்ஸ் அன்டர்சன் 46/5, பென் ஸ்டோக்ஸ் 59/4

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 77 (30.2)  கீட்டோன் ஜென்னிங்ஸ் 17, கேமர் ரோச் 17/5, ஜேசன் ஹோல்டர் 15/2, அல்ஷாரி ஜொசேப் 20/2

மேற்கிந்திய தீவுகள் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 415/6 (103.1) ஜேசன் ஹோல்டர் 202*, ஷேன் டோவ்ரிச் 116*, மொயீன் அலி 78/3, பென் ஸ்டோக்ஸ்  81/2

இங்கிலாந்து (இரண்டாம் இன்னிங்ஸ்) – 246 (80.4) ரோரி பேன்ஸ் 84, ரோஸ்டன் சேஸ் 60/8

முடிவு – மேற்கிந்திய தீவுகள் அணி 381 ஓட்டங்களால் வெற்றி