உலக பதினொருவர் அணியை இலகுவாக வென்ற உலக சம்பியன் மேற்கிந்திய தீவுகள்

2896
Image Courtesy - ICC

உலக பதினொருவர் அணியுடனான T20 போட்டியில் உலக சம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணி 72 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது. இதில் அனைத்து துறைகளிலும் சோபிக்க தவறிய ஷஹீட் அப்ரிடி தலைமையிலான உலக பதினொருவர் அணியில் இலங்கையின் சகலதுறை வீரர் திசர பெரேரா மாத்திரமே துடுப்பாட்டத்தில் சோபித்து அதிரடியாக அரைச்சதம் ஒன்றை எட்டினார்.

எட்டு மாதங்களுக்கு முன் கரீபியன் தீவுகளை தாக்கிய இரட்டை புயலால் சேதமடைந்த ஐந்து மைதானங்களை புனரமைப்பதற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே லண்டன் லோட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (31) இந்த போட்டி நடைபெற்றது. எனினும் இந்த போட்டிக்கு .சி.சி. T20 சர்வதேச அந்தஸ்த்தை வழங்கியதால் ஓய்வு பெற்ற அப்ரிடி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார். இது அவரது 99 ஆவது T20 போட்டியாக இருந்தது.

இங்கிலாந்தின் இயொன் மோர்கன் உபாதை காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியதால் அப்ரிடி உலக அணிக்கு தலைவராகவும் செயற்பட்டார்.

இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற உலகப் பதினொருவர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

எனினும் T20 போட்டிகளில் வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பம் தொட்டே அதிரடி காட்ட ஆரம்பித்தது. அந்த அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பந்துகளை விளாசுவதற்கு தடுமாறியபோது மறுமுனையில் இருந்த எவின் லுவிஸ் பந்தை பௌண்டரிகளுக்கு விரட்டினார்.

கெயில் 28 பந்துகளில் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றபோதும் லுவிஸ் 26 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 58 ஓட்டங்களை பெற்று அதிரடி ஆரம்பத்தை பெற்றுக் கொடுக்க உதவினார்.

மத்திய வரிசையில் மார்லன் சாமுவேல்ஸ் 22 பந்துகளில் 43 ஓட்டங்களையும், விக்கெட் காப்பாளர் டினேஷ் ராம்டின் 25 பந்துகளில் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் விளாசினார். கடைசி நேரத்தில் அன்ட்ரே ரஸல் 10 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களை குவித்தார்.

ஊக்கமருந்து பயன்படுத்திய சர்ச்சையில் போட்டித் தடைக்கு உள்ளான ரஸல் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆடிய முதல் சர்வதேச போட்டியாக இது இருந்தது.

இந்த அதிரடி ஆட்டங்கள் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது உலக பதினொருவர் அணிக்காக அப்ரிடி ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல்போனது. முடிவடைந்த .பி.எல். தொடரில் சோபித்த ஆப்கானின் பதின்ம வயது சுழல் வீரர் ரஷீத் கான் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். திசர பெரேரா 2 ஓவர்கள் மாத்திரம் பந்துவீசி விக்கெட் இன்றி 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.

இந்நிலையில் சவாலான இலங்கை எட்டும் நோக்கில் பதிலெடுத்தாட களமிறங்கிய உலக பதினொருவர் அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளும் ஒற்றை இலக்கத்துடனேயே வெளியேறின. இதனால் 8 ஓட்டங்களுக்கே அந்த அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இந்நிலையில் ஆறாவது வரிசையில் வந்த திசர பெரேரா ஒருமுனையில் அபாரமாக துடுப்பெடுத்தாடி உலக அணியின் வெற்றிக்கு முயன்றபோதும் மறுமுனை விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோயின.

திசரவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஆட முயன்ற சொஹைப் மலிக் 12 ஓட்டங்களுடனேயே வெளியேறினார். காலில் உபாதை காரணமாக நடக்க முடியாமல் இருந்த அப்ரிடிக்கு ஓடுவதற்கு உதவியாளர் ஒருவரை வழங்க .சி.சி. விதிகளை தளர்த்தியதோடு மேற்கிந்திய தீவுகள் அணி அதற்கு இணக்கம் வெளியிட்டது.

எனினும் களமிறங்கிய அப்ரிடி பௌண்டரி ஒன்றை விளாசியபோதும் அவரால் 11 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இந்நிலையில் வேகமாக ஆடிவந்த திசர பெரேராவும் அட்டமிழக்க உலகப் பதினொருவர் அணியின் கடைசி எதிர்பார்ப்பும் சிதைந்தது.

T20 சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது அரைச்சதத்தை பெற்ற திசர பெரேரா 37 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 61 ஓட்டங்களை பெற்றார்.

எனினும் உலக பதினொருவர் அணி 16.4 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன்போது மேற்கிந்திய தீவுகள் சார்பில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப வீரராக அதிரடி ஓட்டங்களை பெற்ற எவின் லுவிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

நிதி சேகரிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த போட்டியை கண்டுகளிக்க 15,000 வரையான ரசிகர்கள் கூடியிருந்தனர். பரபரப்பான போட்டியாக இந்த ஆட்டம் இருக்காத போதும் போட்டித் தன்மையோடே நடைபெற்றது. அரங்கில் கூடியிருந்த ரசிகர்களிடம் கொண்டாட்ட சுபாவம் இருந்து வந்தது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய திவுகள் – 199/4 (20) – எவின் லுவிஸ் 58, டினேஷ் ராம்டின் 44*, மார்லன் சாமுவேல்ஸ் 43, கிரிக்கெட் அன்ட்ரே ரஸல் 21*, ரஷீத் கான் 2/48, ஷஹிட் அப்ரிடி 1/34,

உலக பதினொருவர் – 127 (16.4) – திசர பெரேரா 61, கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3/42, சாமுவேல் பத்ரி 2/4, அன்ட்ரே ரசல் 2/25   

முடிவு மேற்கிந்திய தீவுகள் 72 ஓட்டங்களால் வெற்றி