தோல்வியுறாமல் முன்னேறும் இலங்கை இளம் கிரிக்கெட் அணி

69

நடைபெற்று முடிந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரின் போட்டி ஒன்றில் இலங்கையின் இளம் வீரர்கள் 130 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளனர். 

கரீபியன் தீவுகள் சென்றுள்ள இலங்கையின் கனிஷ்ட கிரிக்கெட் அணி அங்கே மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றுடன் முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. அதன்படி, இந்த தொடரின் 6ஆவது போட்டியாக இலங்கை, மேற்கிந்திய தீவுகள் இடையிலான போட்டி என்டிகுவா நகரில் நேற்று (14) ஆரம்பமாகியது.

பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கைத்தரப்பு சார்பில் அணித்தலைவர் நிப்புன் தனஞ்சய மற்றும் ரவிந்து ரஸன்த ஆகியோர் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு இளம் இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் நிப்புன் தனன்ஞய 98 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேநேரம், ரவிந்து ரஸன்த 43 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் மெத்திவ் போர்டே 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அவினாஷ் மஹாபிர்சிங்க் 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 235 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகளின் இளம் கிரிக்கெட் அணி 104 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பாக கெவ்லோன் அன்டர்சன் பெற்ற 25 ஓட்டங்களே அவரது தரப்பில் வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்களாக மாறியது.

மறுமுனையில் இலங்கை அணிக்காக மிகவும் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்த கவிந்து நதீஷான் வெறும் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, திலும் சுதீர 3 விக்கெட்டுக்களைச் சுருட்டி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.

இப்போட்டி வெற்றியுடன் தொடரில் 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ள இலங்கை இளம் கிரிக்கெட் அணி தாம் பங்குபற்றிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவாறு தொடரில் முன்னேறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 234/9 (50) நிப்புன் தனன்ஞய 91(98)*, ரவிந்து ரஸன்த 43(59), மெத்திவ் போர்டே 31/4(10), அவினாஷ் மஹாபிர்சிங்க் 42/2(10)

மேற்கிந்திய தீவுகள் – 104 (34.4) கெவ்லோன் அன்டர்சன் 25(41), கவிந்து நதீஷான் 17/4(6.4), திலும் சுதீர 10/3(6)

 முடிவு – இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 130 ஓட்டங்களால் வெற்றி