கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்பம் முதல் உலகின் அதிரடி கிரிக்கெட் அணியாகவும், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தமான அணியாகவும் விளங்குகின்ற மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் அரங்கில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது.  இன்று இவ்வணி கத்துக்குட்டி அணிகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவி வருகின்றமை கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியன் பட்டத்தை வென்ற பிறகு அவ்வணியின் சிரேஷ்ட வீரர்களான டெரன் சமி, டுவைன் பிராவோ, கிறிஸ் கெய்ல், கிரென் பொல்லார்ட், மார்லன் சாமுவேல்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் டேவ் கெமரூன் உள்ளிட்ட அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை படுமோசமாக விமர்சித்தனர்.

உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் வாய்ப்பினை பறிகொடுத்த இலங்கை

கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த..

இதில் குறிப்பாக, அந்நாட்டு வீரர்களின் சம்பள நிலுவை தொடர்பிலும் இவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து அவர்களை அதிரடியாக நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்நாட்டு கிரிக்கெட் சபை தன்னிச்சையாக செயற்பட்டதால் அவ்வணி 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கடந்த 2 வருடங்களில் பின்னடைவை சந்தித்து வந்தது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதிபெறுவதிலும் சந்தேகம் நிலவியது.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் அணிகள் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி தினம் செப்டம்பர் 30 ஆகும். குறிப்பிட்ட அந்தத் திகதியில் உலகக் கிண்ணத்தினை நடாத்தும் நாடான இங்கிலாந்தோடு சேர்த்து ஒருநாள் தரவரிசையில் முதல் 7 இடங்களிற்குள் உள்ள அணிகள் நேரடியாக உலகக் கிண்ணத்தில் விளையாட நேரடியாகத் தகுதி பெறும்.

ஆனால் 2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் தடுமாறி தரவரிசையில் முறையே 8ஆவது மற்றும் 9ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இறுதி அணியாக உலகக் கிண்ண வாய்ப்பினை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் அணி எது என்பது தொடர்பில் பலத்த போட்டி நிலவியது.

முன்னதாக கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான இலங்கை அணி, 2019 உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்யும் வாய்ப்பை அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 5 – 0 என்று பெற்றுக்கொண்ட தோல்வியின் மூலம் இழந்தது.

எனவே, மேற்கிந்திய தீவுகள் அணி தாம் விளையாடவுள்ள அடுத்த ஐந்து ஒருநாள் போட்டிகளில் கட்டாயம் நான்கில் வெற்றிபெற்றால் மாத்திரமே தரவரிசையில் இலங்கையை பின்தள்ளி உலகக் கிண்ணத்திற்கு தசம புள்ளிகள் கணக்கில் தகுதி பெறும்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி இழந்தபோதிலும், ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிரிக்கெட் உலகில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தியது. நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத நிலையிலும், வலுவான இங்கிலாந்து அணியை மேற்கிந்தியத் தீவுகள் வென்றதை கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள்.

டெஸ்ட் தொடரையடுத்து, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த போட்டிகள் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டாலும் அல்லது அவ்வணி குறைந்த பட்சம் 4 போட்டிகளில் வெற்றிபெற தவறும் பட்சத்திலும் அது இலங்கை அணிக்கு சாதகமாக அமையவுள்ளதுடன், இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிடும்.

பாடசாலை கிரிக்கெட் வியூகத்தில் மஹேல, சிதத் வெத்தமுனி, திலின கன்தம்பி

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக சந்தித்து வருகின்ற தொடர்..

அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் விளையாட வேண்டும். இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும்.

இதில், கடந்த சில மாதங்களுக்கு முன் டெஸ்ட் வரம் பெற்ற வளர்ந்து வரும் அணியாக கருதப்படுகின்ற அயர்லாந்து அணிக்கும், தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ஒற்றை ஒருநாள் போட்டி இன்று பெல்பாஸ்ட்டில் நடைபெறவிருந்தது. எனினும், சீரற்ற காலநிலை காரணமாக குறித்த போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டதால் மேற்கிந்திய தீவுகளின் உலகக் கிண்ண நேரடிக் கனவு இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றால் மாத்திரமே அவ்வணி உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றுக்கொள்ளும். அது போன்றே தற்பொழுதுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியிலேனும் தோல்வியடைய முடியாத நிலையில் உள்ளது.

கிரிக்கெட் உலகின் முன்னனி நாடுகளாக வலம் வந்து சாதனைகள் பல படைத்த இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு நாடுகளிலிருந்து 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணி நேரடியாக தகுதிபெறும் வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், ஒருநாள் தரப்படுத்தலில் 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டு உலகக் கிண்ண நேரடிக் கனவை நனவாக்கிக்கொள்ளவுள்ள கடைசி அணியை இன்னும் 2 வாரங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்துகொள்ளலாம்.

ஒருநாள் அணியில் மீண்டும் 3 நட்சத்திர வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் போட்டியில் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகிய வீரர்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளமை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

அந்த அணியைப் பொறுத்தவரை உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்கள் மட்டுமே, சர்வதேச போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் ஐ.பி.எல் போன்ற வு-20 போட்டிகளில் பங்கேற்கச் செல்வதால் உள்ளூர் தொடர்களை நட்சத்திர வீரர்கள் புறக்கணித்து வந்தனர். இதனால் அவர்கள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இதற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை மன்னிப்பு வழங்கியதால், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடருக்குப் பிறகு முதற்தடவையாக கிறிஸ் கெய்ல் விளையாடவுள்ளார்.

பாபர் அசாமின் அதிரடியுடன் உலக பதினொருவர் அணியை வீழ்த்திய பாகிஸ்தான்

நடைபெற்று முடிந்திருக்கும் உலக பதினொருவர் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு..

கிறிஸ் கெய்லைப் போலவே மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகியோரும் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளனர். அவர்களின் வருகையும் அணிக்கு பலம் சேர்க்கும் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தேர்வுக்குழு தலைவர் கோர்ட்னி பிரவுனி கூறும்போது, ‘கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் ஆகிய இருவரையும் மீண்டும் அணிக்கு வரவேற்கிறோம். அவர்களின் வருகை அணியின் துடுப்பாட்ட வரிசையை வலுப்படுத்தும். மற்ற வீரர்களுக்கும் அவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும்’ என்றார்.

இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில்,  இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் மாத்திரம் தான் மேற்கிந்திய தீவுகள் அணியால் உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற முடியும். இந்த சூழ்நிலையில் கிறிஸ் கெய்ல் அணியில் இருப்பது, உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெற உதவியாக இருக்கும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 37 வயதுடைய அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 2 வருடங்களுக்குப் பிறகு களம் இறங்குகிறமை முக்கிய விடயமாகும்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெய்ல், இறுதியாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் அவ்வணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். 37 வயதான கிறிஸ் கெய்ல், இதுவரை 269 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,221 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோசமான துடுப்பாட்டம், உபாதைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இடையில் சிறிது காலம் அவர் விளையாடாமல் இருந்தார். பின்னர், இவ்வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று கலக்கினார். இதனால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் தான் மிக ஆபத்தான துடுப்பாட்ட வீரர் என்பதை நிரூபித்தார்.

ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்துவந்த அவர், கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற வு-20 உலகக் கிண்ண அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர், கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற இந்திய அணியுடனான T-20 போட்டியில் கிறிஸ் கெய்ல் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்

எந்தவொரு விளையாட்டிலும் தலைமைத்துவம் என்பது இலகுவான விடயமல்ல..

இந்நிலையில் 2 வருட இடைவெளியின் பிறகு மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடுவது பற்றி கிறிஸ் கெய்ல் கருத்து வெளியிடுகையில், ‘நான் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட விரும்புகிறேன். கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தீர்ந்து வருகின்றன. இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்’ என்றார்.

இதேவேளை, அவ்வணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான மார்லன் சாமுவேல்ஸும் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் இறுதியாக 2016இல் இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கெதிரான முத்தரப்பு தொடரில் விளையாடியிருந்தார்.

கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் இருவரும் இங்கிலாந்துடன் நடைபெறவுள்ள 2ஆவது ஒருநாள் போட்டியின்போது முறையே தமது 38ஆவது மற்றும் 36ஆவது பிறந்த தினங்களைக் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உபாதையில் இருந்து குணமடைந்து அண்மையில் நிறைவடைந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான டுவைன் பிராவோ, 100 சதவீதம் உடற்தகுதி பெறாத காரணத்தால் ஒருநாள் அணியில் இணைக்கப்படவில்லை. அதேபோல், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்ற சுனில் நரைனும் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. எனினும், கடந்த வருடம் ஜுலை மாதம் இறுதியாக மேற்கிந்திய அணிகளுக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான ஜெரம் டெய்லருக்கு மீண்டும் ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம்

சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷோ, மிகுயெல் கம்மின்ஸ், கிறிஸ் கெய்ல், ஜேசன் ஹோல்டர் (தலைவர்),  கைல் ஹோப்,  ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், எவின் லெவிஸ்,  ஜேசன் மொஹமட், அஷ்லே நர்ஸ்,  ரோவ்மன் பவேல்,  மார்லன் சாமுவேல்ஸ், ஜெரம் டெய்லர், கெஸ்ரிக் வில்லியம்ஸ்