இலங்கையுடனான டி20 சர்வதேச குழாமுக்கு திரும்பிய அண்ட்ரூ ரசல்

70
Getty Images

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 14 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் தேர்வுக்குழு தலைவர் ரோஜர் ஹார்பரினால் நேற்று (22) பெயரிடப்பட்டுள்ளது. 

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் குறித்த சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடரான 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்காக தற்போது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தங்களது குழாத்தினை வெளியிட்டுள்ளது.  

வனிந்து ஹசரங்கவின் அபாரத்தால் இலங்கைக்கு த்ரில் வெற்றி

கொழும்பு SSC மைதானத்தில்……

வெளியிடப்பட்டுள்ள குழாத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் மேற்கிந்திய தீவுகள் டி20 அணியினை சகலதுறை வீரர் கிரண் பொல்லார்ட் வழிநடத்தவுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி சகலதுறை வீரரான 31 வயதுடைய அண்ட்ரூ ரசல் கடந்த உலகக்கிண்ண தொடரின் போது உபாதை காரணமாக இடைநடுவில் வெளியேறியிருந்தார். 

அதன் பின்னர் உபாதையிலிருந்து மீண்டாலும் கூட அவரால் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற முடியவில்லை. இந்நிலையில் அண்மையில் நிறைவுக்குவந்த பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் பிரகாசித்ததன் மூலம் தற்போது மிக நீண்ட இடைவெளியின் பின்னர் மேற்கிந்திய தீவுகள் டி20 குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அண்ட்ரூ ரசல் டி20 சர்வதேச போட்டியொன்றில் இறுதியாக 2018 ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷ் அணியுடன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) மேற்கிந்திய தீவுகளின் ஜமேய்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக பாரிய ஆபத்துக்கள் இன்றி தப்பித்த 23 வயதுடைய இளம் வேகப்பந்துவீச்சாளரான ஒஷேன் தோமஸ் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடருக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்துள்ள ஒஷேன் தோமஸ் இலங்கை அணியுடனான டி20 சர்வதேச தொடருக்கான குழாமில் இடம்பெற்றுள்ளார். இவர் இறுதியாக கடந்த ஆகஸ்ட்டில் இந்திய அணியுடன் டி20 சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார். 

மேலும் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 சர்வதேச தொடரின் போது உபாதைக்குள்ளான பந்துவீச்சு சகலதுறை வீரர் பெபியன் அலன் உபாதையிலிருந்து குணமடைந்து ஒருநாள் குழாமில் இடம்பெற்றதுடன் தற்போது டி20 குழாமிலும் இடம்பெற்றுள்ளார்.

அத்துடன் அதே தொடரில் உபாதைக்குள்ளாகி, குறித்த உபாதையிலிருந்து குணமடைந்து மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் இடம்பெற்று, நேற்று (22) நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் சதமடித்து அசத்திய விக்கெட்காப்பு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷேய் ஹோப் தற்போது மேற்கிந்திய தீவுகள் டி20 குழாமிற்கும் திரும்பியுள்ளார்.

இதேவேளை உடற்தகுதி பிரச்சினை காரணமாக இலங்கை அணியுடனான ஒருநாள் தொடருக்கான குழாமில் தவறவிடப்பட்ட இளம் துடுப்பாட்ட வீரர் ஷிம்ரொன் ஹெட்மெயர் தற்போது உடற்தகுதி தேர்வில் சித்தியடைந்து இலங்கை அணியுடனான டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்றுள்ளார்.

படுதோல்வியடைந்த தென்னாபிரிக்க அணிக்கு ஐ.சி.சி அபராதம் விதிப்பு

சுற்றுலா அவுஸ்திரேலியா……

மேற்கிந்திய தீவுகள் அணி இறுதியாக அயர்லாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடியிருந்தது. அண்ட்ரூ ரசல், ஒஷேன் தோமஸ், பெபியன் அலன் மற்றும் ஷேய் ஹோப் ஆகியோரின் மீள்வருகையினால் குறித்த அயர்லாந்து தொடரில் விளையாடிய எவின் லூவிஸ், கெரி பியர், ஷேர்பைன் ருதர்போர்ட் மற்றும் ரொமாரியோ ஷேபர்ட் ஆகிய வீரர்கள் டி20 குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட இடைவெளியின் பின்னர் அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற டி20 சர்வதேச தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடிய 400 இற்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சகலதுறை வீரர் டுவைன் பிராவே தொடர்ந்தும் மேற்கிந்திய தீவுகள் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார். மேலும் ஒருநாள் குழாமில் இடம்பெறாத வேகப்பந்துவீச்சாளர் கெஷ்ரிக் வில்லியம்ஸ் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான லெண்டில் சிம்மண்ஸ் ஆகியோர் புதிதாக டி20 குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டி20 சர்வதேச போட்டியானது மார்ச் 4 மற்றும் 6ஆம் திகதிகள் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. 

ஹெட்ரிக் விக்கெட் சாதனையுடன் அபார வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

சுற்றுலா அவுஸ்திரேலிய……

மேற்கிந்திய தீவுகளின் 14 பேர் அடங்கிய டி20 சர்வதேச குழாம்

கிரண் பொல்லார்ட் (அணித்தலைவர்), பெபியன் அலன், டுவைன் ப்ராவோ, ஷெல்டன் கொட்ரல், ஷிம்ரொன் ஹெட்மெயர், ஷேய் ஹோப், ப்ரெண்டன் கிங், நிக்கொலஸ் பூரண், ரொவ்மன் பவல், அண்ட்ரூ ரசல், லெண்டில் சிம்மண்ஸ், ஒஷேன் தோமஸ், ஹெய்டன் வோல்ஸ், கெஷ்ரிக் வில்லியம்ஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<