பொன் விழாக் கோலம் பூணும் மட்டக்களப்பின் வெபர் கிண்ண கூடைப்பந்து தொடர்

479

கிழக்கு மாகாணத்தின் மீன்பாடும் தேனாடான மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இயேசு சபை துறவிகள் வழங்கிய சேவைகள் இன்றியமையாதவை. ஒரு பக்கத்தில், மக்களை ஆன்மீகப் பாதையில் அழைத்து விழுமியங்களை போதித்த இயேசு சபைத் துறவிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறைக்கும் பல்வேறு விதமான உதவிகளை செய்துள்ளனர்.

வெபர் கிண்ண இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள கம்பஹா, மட்டக்களப்பு அணிகள்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு …

அப்படியாக 1940 களில் இலங்கைக்கு வந்த இயேசு சபை துறவிகளில் ஒருவரான அருட்தந்தை வெபர் அடிகளார் மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டு துறைக்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் பொருட்டு மட்டக்களப்பு மைக்கல்மென் விளையாட்டுக் கழகம் ஒழுங்கு செய்திருந்த வெபர் கிண்ண கூடைப்பந்து தொடர், இம்முறை ஐம்பதாவது ஆண்டில் பொன் விழாக் கோலம் பூணுகின்றது..

ஐம்பதாவது ஆண்டாக இம்முறை இடம்பெறவுள்ள வெபர் கிண்ண கூடைப்பந்து தொடரின் போட்டிகள் யாவும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கில்  இம் மாதம் 21, 22,23 ஆம் திகதிகளில் நடைபெறுகின்றன.

வெபர் அடிகளார்ஒரு அறிமுகம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தடகளப் போட்டிகள் மற்றும் கூடைப்பந்தாட்டம் என்பவற்றின் மூலம் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியதில் விசேட இடம் அருட்தந்தை வெபர் அடிகளாருக்கு கொடுக்கப்படுகின்றது.

1914ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவின் நியூ ஒர்லீன்ஸ் (New Orleans) நகரில், பிறந்த வெபர் அடிகளார் தத்துவவியல், இறையியல் போன்ற கல்விகளில் சிறந்து விளங்கியதுடன் 1946ஆம் ஆண்டு இயேசு சபை துறைவியின் அழைப்பை ஏற்று, 1947ஆம் ஆண்டு இலங்கை வந்தடைந்தார்.

1947 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புனித மைக்கல் கல்லூரியிற்கு வந்து தான் இறந்த 1998ஆம் ஆண்டு வரை இப் பாடசாலைக்காகவே கடமைபுரிந்த வெபர் அடிகளார், வகுப்பறைகளில் கற்பிப்பதோடு நின்றுவிடாது கல்லூரியின் விளையாட்டுத்துறையிலும் அதிக கவனத்தை செலுத்தினார்.

தடகளப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வெபர் அடிகளார், பாடசாலை வீரர்களோடு மட்டுமின்றி சகல மெய்வல்லுனர் வீரர்களையும் பயிற்றுவிப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்.

இது தவிர மட்டக்களப்பிற்கு ஒரு விளையாட்டு மைதானம் பற்றாக்குறை இருந்ததை கண்ட வெபர் அவர்கள், மட்டக்களப்பின் கச்சேரிக்கு அண்மையில்  ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பை ஒரு அடிவரை மண் போட்டு நிரப்பி விளையாட்டு அரங்கு ஒன்றினை அமைக்க முயற்சி செய்தார். அவரை கெளரவிக்கும் விதமாக அம் மைதானம் “வெபர் அரங்கு” என இன்றும் அழைக்கப்படுவதுடன் மட்டக்களப்பின் வீரர்களுக்கு  பிரதான விளையாட்டு மைதானமாகவும் அது விளங்குகின்றது.

உடல் நலிவுற்ற தனது இறுதிக் காலத்தில் கூட கூடைப்பந்தாட்ட போட்டிகளின் காணொளிகள் மூலம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்த வெபர் அடிகளாரது சேவைகளை நினைவுகூறும் விதமாக 1968 ஆம் ஆண்டு “வெபர் கிண்ணம்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூடைப்பந்து தொடர் இம்முறை ஐம்பதாவது ஆண்டில் பொன் விழா காண்கின்றது.

தோல்வியுறாத அணியாக ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை

11 ஆவது முறையாக நடைபெற்று வரும் ஆசிய …

வெபர் அடிகளார் தவிர மட்டக்களப்பு மாவட்டத்தின் கூடைப்பந்து விளையாட்டுக்கு சேவையாற்றிய ஏனைய இயேசு சபைத்துறவிகளாக அருட்தந்தை ஹமில்டன் அடிகளார், றல்ப் ரெய்மன் அடிகளார் மற்றும் இயூஜின் ஹேபர்ட் அடிகளார் ஆகியோர் இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இம்முறைக்கான வெபர் கிண்ண தொடர்

இலங்கைத் தீவில் கூடைப்பந்து விளையாட்டுக்கு பிரபல்யமான கழகங்கள் இடையில் இந்த ஆண்டுக்கான  வெபர் கிண்ணத் தொடர் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தொடரில் ஓல்ட் பென்ஸ் அணி, புனித மைக்கல் கல்லூரி அணி, நீர்கொழும்பு மாகிஸ் அணி, மைக்கல்மென் விளையாட்டுக் கழகம், பொலிஸ் விளையாட்டுக் கழகம், மொரட்டுவ அணி, லக்கி விளையாட்டுக் கழகம் மற்றும் விமானப்படை விளையாட்டுக் கழகம் ஆகிய எட்டு பலம் பொருந்திய அணிகள் கிண்ணத்திற்காக மோதுகின்றன.

எட்டு அணிகளும் A,B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றுப் போட்டிகள் இடம்பெறும், இதனை அடுத்து ஒவ்வொரு குழுக்களிலும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகி அதன் பின்னர் இறுதிப் போட்டி இடம்பெறும்.

தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (23) ஆம் திகதி நடைபெறவுள்ளது. வெபர் கிண்ணத் தொடரின் நடப்புச் சம்பியன்களாக மட்டக்களப்பு அணியினர் காணப்படுகின்றனர்.

கூடைப்பந்து இரசிகர்களுக்கு இம்முறையும் விருந்தாக அமைய எதிர்பார்க்கப்படும் “வெபர் கிண்ணம்” தொடர்பான மேலதிக தகவல்கள், போட்டி முடிவுகள் மற்றும் புகைப்படத் தொகுப்புக்கள் என அனைத்தையும் காண்பதற்கு இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான Thepapare.com உடன் இணைந்திருங்கள்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…