நாங்கள் உலகின் முன்னணி அணியாக மாறுவோம் – திமுத் கருணாரத்ன

1184

இலங்கை அணியில் சங்கக்கார, மஹேல உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடிய காலகட்டத்தில் நாங்கள் உலகின் சிறந்த அணியாக இருந்தோம். பொதுவாக நல்ல காலங்கள் வருவதைப் போல கெட்ட காலமும் வரும். எங்களுக்கு எந்த நாளும் வெற்றிபெற முடியாது. எனவே நாங்கள் எப்போதும் இந்த இடத்தில் இருக்க மாட்டோம். மிக விரைவில் உலகின் முன்னணி அணியாக நாங்கள் முன்னேற்றம் காண்போம் என இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று (06) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை எளிதில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது.

ரோஹித்தின் சாதனை சதத்துடன் இந்தியாவுக்கு இலகு வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு………..

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி ஏற்கனவே அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்த நிலையில், இந்தியாவுடனான கடைசி லீக் போட்டியிலும் தோல்வியைத் தழுவி 6ஆவது இடத்துடன் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், இரண்டரை மாதங்களுக்கு முன் புதிய ஒருநாள் தலைமையைப் பெற்று இங்கிலாந்துக்கு வருகை தந்த இலங்கை அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் 9 லீக் ஆட்டங்களில் விளையாடி 3இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

எனவே உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணியிடம் கூட வெற்றி பெறாது என எதிர்வுகூறப்பட்ட இலங்கை அணி, இன்று திமுத் கருணாரத்னவின் தலைமையில் 3 போட்டிகளில் வெற்றியீட்டி ஒரு கௌரவமான இடத்தைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பவுள்ளது.

அந்த வகையில், தனிப்பட்ட முறையில் தனது தலைமைத்துவம் மற்றும் இந்தத் தொடர் முழுவதும் இலங்கை அணி விளையாடியிருந்த விதம் குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திமுத் கருத்து வெளியிடுகையில்,

“இலங்கையில் இருந்து புறப்பட்டு வரும் முன் நாங்கள் இம்முறை உலகக் கிண்ணத்தில் பிரகாசிப்போமா என எவரும் நினைத்து இருக்கமாட்டார்கள். நாங்கள் இவ்வாறு 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொள்வோமா அல்லது குறைந்த பட்சம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெறுவோமா என கனவிலும் எதிர்பார்த்திக்க மாட்டார்கள். அவ்வாறான மனநிலை தான் நாங்கள் இங்கு வரும்போது இருந்தது.

எனவே, நாங்கள் இங்கு வந்த பிறகு ஒருசில பகுதிகளில் சிறப்பாக செய்தோம். சில இடங்களில் தவறுகள் இழைத்தோம். தேவையான நேரத்தில் முக்கியமான போட்டிகளை வெற்றி கொண்டோம். ஒரு அணியாக குறிப்பிட்ட சில நாட்களில் எங்களால் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது. எனினும், ஒருசில நாட்களில் பந்துவீச்சாளர்களும், மற்றைய நாட்களில் துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

எனவே அவ்வாறான ஏற்ற இறக்கங்களுடன் தான் நாங்கள் விளையாடினோம். அவ்வாறு பார்க்கும் போது எம்மைவிட ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த, தரவரிசையில் முன்னிலையில் இருந்த அணிகளுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது.

அதேபோல, இரண்டு போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன. ஒருவேளை அந்தப் போட்டி நடைபெற்றிருந்தால் எம்மால் வெற்றியையோ அல்லது தோல்வியை சந்தித்து இருக்கலாம். ஆனாலும், அந்த 2 போட்டிகளிலும் நாங்கள் விளையாடியிருந்தால் எம்மால் வெற்றி பெற்று இருக்கலாம் என நம்புகிறேன். அந்த அணிகளைப் பார்க்கும் போது நாங்கள் சிறப்பாக விளையாடிய அணிகளுடன் அவர்கள் சிறப்பாக விளையாடியிருக்கவில்லை.

எனவே தனிப்பட்ட முறையில் இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் செயல்பாடு குறித்து அதன் அடைவு மட்டம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். முதலில் நடைபெற்ற ஓரிரெண்டு போட்டிகளில் துடுப்பாட்டத்தில் நாங்கள் பிரகாசிக்கத் தவறினாலும், அதன்பிறகு தென்னாபிரிக்காவுடனான போட்டியைத் தவிர நாங்கள் சிறப்பாக விளையாடி வந்தோம். மொத்தத்தில் நிறைய நல்ல விடயங்களை இம்முறை உலக்க கிண்ணத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடிந்தது. எனவே அந்த நன்மைகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

அதேபோல, ஒருநாள் அணியின் தலைமைப் பதவி 2 மாதங்களுக்கு முன்னர் தான் எனக்கு வழங்கப்பட்டது. இதற்காக அணியில் உள்ள சிரேஷ்ட வீரர்கள் முதல் பலர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். எனவே எமக்கு அரையிறுதிக்கு தகுதிபெற முடியாவிட்டாலும் நாங்கள் இந்தத் தொடரை சிறந்த முறையில் நிறைவுக்கு கொண்டு வந்தோம் என நான் நம்புகிறேன்.

இதேநேரம், அண்மைக்காலமாக அஞ்செலோ மெதிவ்ஸுக்கு எதிர்பார்த்தளவு பிரகாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மாறிவிட்டார். எனவே எதிர்வரும் காலங்களில் மெதிவ்ஸின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும். அவ்வாறு தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு திமுத் கருத்து வெளியிடுகையில்,

“இந்தத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் அஞ்செலோ மெதிவ்ஸ் திறமைகளை வெளிப்படுத்த மாட்டார் என பெரும்பாலானோர் தெரிவித்திருந்த போது நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறினாலும், அவருடைய அனுபவத்தை நிச்சயம் அணிக்காக வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கும், குறிப்பாக அவரிடமும் இருந்தது. இறுதியில் அவர் முழு அணிக்கும் நிரூபித்துக் காட்டினார்.

அதிலும் இவ்வாறான ஆடுகளங்களில் அழுத்தங்களுக்கு மத்தியில் எவ்வாறு ஓட்டங்களைக் குவிக்க முடியும் என்பதை அவர் செய்து காட்டினார். அந்த அனுபவத்தை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இவ்வாறான போட்டித் தொடர்களில் நிச்சயம் அனுபவம் கைகொடுக்கும் என்பதை நாங்கள் அறிந்து வைத்தோம். எனவே எதிர்வரும் காலங்களில் அஞ்செலோ மெதிவ்ஸ் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். அவர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறார். அத்துடன், அவருடைய உபாதை குணமாகியுள்ளதால் இன்னும் சில நாட்களில் அவர் மீண்டும் பந்துவீசுவார். உண்மையில் இலங்கை அணியில் இருக்கின்ற ஒரு பெறுமதிக்க வீரர்களில் மெதிவ்ஸும் ஒருவர். மாலிங்க ஓய்வு பெற்ற பிறகு அணியில் இருக்கின்ற ஒரேயொரு அனுபவமிக்க வீரர் அவர் தான். எனவே, அவர் நிச்சயம் எதிர்வரும் காலங்களில் இலங்கை அணிக்காக விளையாடுவான் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இதேநேரம், இலங்கை அணியின் நட்சத்தி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க தொடர்பில் திமுத் கருத்து வெளியிடுகையில்,

இனிவரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் அவரை (மாலிங்க) இழக்கும். ஒவ்வொரு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் அவர் ஒரு அற்புதமான பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். ஒவ்வொருவரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அவருக்கான சிறந்ததொரு பிரியாவிடைய எம்மால் கொடுக்க முடியாமல் போனது. எனவே இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் அவருக்கான சிறந்ததொரு பிரியாவிடையப் பெற்றுக் கொடுப்போம்.

அதேபோல மாலிங்கவின் இடத்தை நிரப்புவதற்கு இளம் வீரர்களுக்கான தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது” என குறிப்பிட்டார்.

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி பிரகாசிக்குமா என ஆரம்பத்திலே பல எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், அந்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்த இலங்கை அரையிறுதிக்குத் தகுதி பெறாவிட்டாலும், 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெறும் என பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த இலங்கை அணியின் ரசிகர்களுக்கு திமுத் கருணாரத்ன கூறுகையில்,

சங்கக்கார, மஹேல ஆகியோர் விளையாடியது போது எம்மிடம் சிறந்த அணியொன்று இருந்தது. அப்போது நாங்கள் சிறந்த அணியாக இருந்தோம். பொதுவாக நல்ல காலங்கள் வருவதைப் போல கெட்ட காலமும் வரும். எங்களுக்கு எந்த நாளும் வெற்றிபெற முடியாது. ஆனால் தோல்விகளையும் சந்திக்க நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். இலங்கை அணிக்கு எங்கேயோ ஒரு இடத்தில் தவறு இடம்பெற்றுள்ளது. அதன் காரணமாகவே நாங்கள் இந்த இடத்தில் உள்ளோம்.

ஒரு அணியாக பார்க்கின்ற போது மற்றைய அணிகளைவிட எமது அணியில் தான் அனுபவம் குறைந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். நான் ஏற்கனவே கூறியது போல எமது வீரர்கள் வெளிநாட்டு போட்டித் தொடர்களுக்குச் சென்று விளையாடி அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறான போட்டிகளில் விளையாடினால் தான் எமக்கு மற்ற அணியில் உள்ள வீரர்களுடன் விளையாடுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.

உதாரணமாக இசுரு உதானவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் இதற்குமுன் தொடர்ச்சியாக ஒருநாள் அணியில் இடம்பெற்று விளையாடி வந்த வீரர் அல்ல. ஆனாலும் அவர் வெளிநாட்டு டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனுபவங்களைப் பெற்றுக் கொண்ட காரணத்தினால் தான் இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடர் மற்றும் இம்முறை உலகக் கிண்ண இலங்கை அணியிலும் இடம்பிடித்தார். அதேபோல, நிறைய வீரர்கள் எம்மிடம் உள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி வருகின்ற வீரர்களை மாத்திரம் அணியில் இடம்பெறச் செய்வது தொடர்பில் இனிவரும் காலங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கின்ற நடைமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

எனவே எமது கிரிக்கெட் ரசிகர்களுக்கு எம்மீது நம்பிகை இருந்தது. எனினும், நாங்கள் கீழே விழுந்திருக்கின்ற போது கைகொடுத்து உதவுகின்றவர்கள் தான் எமக்கு வேண்டும். உதாரணமாக இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றது. இதனால் அவர்களை ஊக்கப்படுத்த ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தருகின்றனர்.

எனினும், அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தாத அணியாக இருந்து மிகவும் மோசமாக விளையாடியிருந்தால் இங்கு வருகை தந்த ரசிகர்ள் பாதி பேர் திரும்பிப் போனால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும். எனவே நாங்கள் வெற்றிபெறும் போதும், தோல்வியைத் தழுவும் போது எமது ரசிகர்களின் முழு ஒத்துழைப்பும், ஆசிர்வாதமும் எமக்கு தேவைப்படுகிறது. நாங்கள் எப்போதும் இந்த இடத்தில் இருக்க மாட்டோம். மிக விரைவில் உறுதியாக ஒரு அணியாக நாங்கள் முன்னேற்றம் காண்போம். இதற்கு சிறிது காலம் தேவைப்படும்.

ஆனாலும், அந்த இடத்திற்குச் செல்ல நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதற்குத் தேவையான அடித்தாளத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக நாங்கள் மாறுவோம்” என அவர் குறிப்பிட்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<