ஆப்கானிஸ்தானுடான போட்டி அழுத்தங்களைக் கொடுக்கும் – மெதிவ்ஸ்

1291

ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டி சவால்மிக்கதாக இருக்கும் எனவும், ஆசிய கிண்ணத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமாயின், அந்த அணியுடன் இன்று (17) நடைபெறவுள்ள தீர்மானமிக்க போட்டியில் அனைத்து வீரர்களும் சகலதுறையிலும் பிரகாசிப்பது அவசியமாகும் எனவும் இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை ஏற்படுத்தும் போட்டியாகவும் இது அமையும் என அவர் தெரிவித்தார்.

கட்டாய வெற்றிக்காக ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை அணி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று (15) ஆரம்பமாகிய 14…

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்றுமுன்தினம் (15) ஆரம்பமாகிய 14ஆவது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த இலங்கை அணி, ஆசியக் கிண்ணத்தில் நிலைத்திருக்க வேண்டும் எனின், இன்று நடைபெறவுள்ள இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் காணப்படுகிறது.  

அடிப்படையில் ஆப்கானிஸ்தானுடனான போட்டிக்கான ஆயத்தம் குறித்து முதல் போட்டியின் பின்னர் வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கும் போதே மெதிவ்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இதொடர்பில் மேலும் கூறுகையில்,

”இந்தப் போட்டி எமக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் நிச்சயம் எமக்கு நிறைய அழுத்தங்களை சந்திக்க வேண்டிவரும். ஆனால் அந்தப் போட்டியை வென்றால் தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்ய முடியும். ஒரு நாள் எமக்கு நன்றாக இருந்தாலும், அடுத்த நாள் மிகவும் மோசமாக இருக்கலாம். ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்த போட்டியில் நிறைய அழுத்தங்களை சந்திக்க வேண்டி வரும் என போட்டி ஆரம்பமாவதற்கு முன் நான் சொல்லியிருந்தேன்.

ஆனால், பங்களாதேஷ் அணியுடனான போட்டியை வெற்றிக்கொண்டு தொடரில் முன்னிலை பெறுவதற்கு நாம் மேற்கொண்ட திட்டங்கள் நிறைவேறாமல் போனது கவலையளிக்கின்றது. நாம் விரைவாக போட்டியின் தன்மைக்கேற்ப விளையாட தயாராக வேண்டும். அத்துடன், அணியில் உள்ள பதினொரு வீரர்களும் தங்களது 100 சதவீத திறமைகளை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என தெரிவித்தார்.

மன்ரோவின் அதிரடியுடன் CPL கிண்ணத்தை வென்றது ட்ரைன்பகோ நைட் ரைடரஸ்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த கரீபியன்…

இதேநேரம், பங்களாதேஷ் அணியுடனான முதல் போட்டியில் சந்தித்த தோல்வி குறித்து மெதிவ்ஸ் கருத்து வெளியிடுகையில்,  

தினேஷ் சந்திமால் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் உபாதைக்குள்ளான காரணத்தால் நாம் அணியில் ஒருசில மாற்றங்களை செய்தோம். அதற்காகவே டில்ருவன் பெரேராவை இறுதி பதினொருவரில் இணைத்துக் கொண்டோம். ஆனால், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

அத்துடன், இந்தப் போட்டியில் எமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எனினும், களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் என்பன மிக மோசமாக காணப்பட்டது. அதன் பின்னர் 262 ஓட்டங்களை நோக்கிய எமது துடுப்பாட்டத்தில் பாரிய சரிவு ஏற்பட்டது. ஓவ்வொரு வீரரரும் நின்று நிலைத்து துடுப்பெடுத்தாடவில்லை.

எனவே ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் மூன்று துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும். ஒரு சிறிய தவறுவிட்டாலும், அது எமது வெற்றிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டுமானால் அனைவரும் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Photo Album – Sri Lanka Team Practices ahead of Afghanistan Match

இந்த நிலையில், முதல் போட்டியில் லசித் மாலிங்கவின் அபார பந்துவீச்சின் உதவியால் முதல் மூன்று விக்கெட்டுக்கள் விரைவில் வீழ்த்தப்பட்டன. எனினும், முஸ்பிகுர் ரஹீமின் பிடியெடுப்பை தவறவிட்டது மற்றும் துடுப்பாட்டத்தில் மோசமாக விளையாடியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மெதிவ்ஸ் பதிலளிக்கையில்,

உண்மையைச் சொல்லப்போனால் லசித் மாலிங்க சிறப்பாக பந்துவீசி அணிக்கு நம்பிக்கை கொடுத்தாலும், களத்தடுப்பில் முக்கிய பிடிகளைத் தவறவிட்டது போட்டியின் போக்கை மாற்றியது. அதேபோல, 260 ஓட்டங்களை இந்த ஆடுகளத்தில் துரத்துவது மிக இலகுவானது. எனினும், எமது வீரர்களின் மோசமான துடுப்பாட்டமும் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அணி டுபாயில் உள்ள .சி.சியின் கிரிக்கெட் பயிற்சி பாடசாலை மைதானத்தில் நேற்றைய தினம் (16) பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது. அத்துடன், தனது முதலாவது குழந்தைக்கு தந்தையான சுழற்பந்துவீச்சாளர் அகில தனன்ஜயவும் நேற்று மாலை நடைபெற்ற பயிற்சி முகாமில் இலங்கை அணியுடன் இணைந்துகொண்டார். எனவே, இன்று அபுதாபியின் ஷெய்க் சய்யத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<