அதிரடி காட்டத் தவறிய அஞ்செலோ மெதிவ்ஸ்

1050
IPL Roundup - 17th of April

.பி.எல் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற விறுவிறுப்பான இரண்டு போட்டிகளில், சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 5 ஓட்டங்களாலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் நான்கு விக்கெட்டுகளினாலும் வெற்றியீட்டியுள்ளன.

இங்கிலாந்து காலநிலைக்கு ஈடுகொடுக்க மலையகத்தில் பயிற்சியில் ஈடுபடும் இலங்கை அணி

பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் எதிர்வரும் ஜூன் மாத ஆரம்பத்தில் இங்கிலாந்து..

சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கிங்ஸ் இலவன் பஞ்சாப்

ஹைதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணித் தலைவர் க்ளேன் மெக்ஸ்வல் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.  

அந்த வகையில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை பதிவு செய்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷிகர் தவான் மற்றும் டேவிட் வோனர் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 25 ஓட்டங்களை பதிவு செய்த நிலையில் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஷகர் தவான் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.

அவரைத் தொடர்ந்து களம் வந்த ஹென்றிக்ஸ் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஒற்றை இலக்கங்களுடன் வெளியேற சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி சற்று தடுமாறியது. எனினும், அதனையடுத்து களமிறங்கிய நமன் ஓஜா மற்றும் டேவிட் வோனர் ஆகியோர் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 60  ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுகொண்டதோடு அணியின் ஒட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.  

எனினும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களினால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ், இந்தப் போட்டியில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

நமன் ஓஜா  34 ஓட்டங்களுக்கும், சிறப்பாக  துடுப்பாடிய டேவிட் வோனர் 54 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் விளாசினர்.

அதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்கு முதலாவது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் முதலாவது பந்திலேயே துடுப்பாட்ட ஜாம்பவான் ஹசிம் அம்லாவை ஓட்டம் எதுவும் இன்றி வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் எவரும் 15 ஓட்டங்களையேனும் தாண்டவில்லை. இயன் மோர்கன் மற்றும் மோஹித் ஷர்மா தவிர்ந்த ஏனையோர் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.  

எனினும், போட்டியின் இறுதி வரை அதிரடியாக துடுப்பாடிய  மனன் வோஹ்ரா 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உள்ளடங்கலாக 95 ஓட்டங்களை விளாசிய போதிலும் ஏனைய வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக, பஞ்சாப் அணி 5 ஓட்டங்களினால் தோல்வியுற்றது.

பலம் மிக்க பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் எதிரணிகள்

விறுவிறுப்பான முறையில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன…

அதேநேரம், சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்த பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், மனன் வோராவின் விக்கெட் உள்ளடங்கலாக  19 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்  

சன்ரைஸஸ் ஹைதராபாத்: 159/6 (20)டேவிட் வோனர் 70, நமன் ஓஜா 34, ஷிகர் தவான் 15, தீபக் ஓடா 12, மோஹித் சர்மா 25/2, அக்ஸ்சார் பட்டேல் 33/2, சந்தீப் ஷர்மா 35/1

கிங்ஸ் இலவன் பஞ்சாப்: 154/10 (19.4)மனன் வோஹ்ரா 95, இயன் மோர்கன் 13, புவனேஸ்வர் குமார் 19/5, ரஷித் கான் 42/2, மொய்சஸ் ஹென்றிக்கஸ் 6/1


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் டெல்லி டேர்டேவில்ஸ்

இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவர் ஸகீர் கான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சஞ்சு சம்சன் மற்றும் பில்லிங்க்ஸ் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.  

எனவே, அவ்வணி வீரர்கள் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களை பெற்றனர். அதிகபட்ச ஓட்டங்களாக சஞ்சு சம்சன் 39 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம், கொல்கத்தா சார்பாக சிறப்பாக பந்து வீசிய நாதன் கல்ட்டர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

பின்னர் 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அணித் தலைவர் கௌதம் கம்பிர் உள்ளடங்கலாக முக்கியமான முதல் மூன்று விக்கெட்டுகளையும் மூன்று ஓவர்களுக்குள் 21 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் இழந்து மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.  

எனினும் அதனை தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டி மற்றும் யூசுப் பதான் ஆகியோர் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 110 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்ட அதேநேரம், அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடத்தினர்.

இறுதி வரை அதிரடியாக துடுப்பாடிய மனிஷ் பாண்டி 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை விளாசினார். போட்டியின் ஆட்ட நாயகனாக 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நாதன் கல்ட்டர் தெரிவு செய்யப்பட்டார்.  

போட்டியின் சுருக்கம்

டெல்லி டேர்டேவில்ஸ்: 168/7 (20)சஞ்சு சம்சன் 39, ரிஷாப் பண்ட் 38, சாம் பில்லிங்க்ஸ் 21, கருண் நாயர் 21, நாதன் கல்ட்டர் 22/3, சுனில் நரைன் 20/1

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 169/6 (19.5) மனிஷ் பாண்டி 69, யூசுப் பதான் 59, கௌதம் கம்பிர் 14, சாகிர் கான் 28/2, பட் கம்மிங்க்ஸ் 39/2, அமித் மிஸ்ரா 26/1

இன்றைய தினம் குஜராத் லயன்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.