துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோற்றோம் – சர்பராஸ்

172

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் தோல்வியைத் தழுவ நேரிட்டதாக பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய திவுகள்பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (31) நடைபெற்ற உலகக் கிண்ண தொடரின் 2ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் படுமோசமாக துடுப்பாடியிருந்தது. இதனால் அவ்வணி வெறும் 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.

மேற்கிந்திய தீவுகளின் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days…

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சராசரியானதுதான் என பல கிரிக்கெட் விமர்சகர்களும் கூறி இருந்த நிலையில், அந்த அணியிடமே பாகிஸ்தான் தடுமாறியுள்ளது. பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே மோசமாகத் தான் விளையாடி வந்தது. அதனால், அந்த அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் பிரகாசிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே வெறும் 105 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இது துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், பாகிஸ்தான் எப்படியும் நன்றாக விளையாடும் என்று கருதப்பட்டது. ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறி மிகவும் மோசமான தோல்வியொன்றைப் பதிவு செய்தனர். .

இந்த நிலையில், முதலில் பந்துவீசுவது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என நாணய சுழற்சியில் ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தோல்வி குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

“இங்குள்ள சூழ்நிலையில் நாணய சுழற்சியை இழந்தாலும், தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவது கடினமானதாகும். அரை மணி நேரத்துக்கு கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். ஆனால் துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளம் இது. போட்டிக்கு முன் மிகப் பெரிய நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் எமது துடுப்பாட்ட வீரர்கள் தான் சரியாக விளையாடவில்லை.

எனவே, இவ்வாறான தருணங்களில் இங்கு நம்பிக்கையுடன் விளையாட வேண்டியது முக்கியமானதாகும். துடுப்பாட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. மேற்கிந்திய திவுகள் அணியின் வேகப் பந்துவீச்சு சவாலாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஷோட் பிட்ச் (Short Pitch) பந்து வீச்சை நாங்கள் நன்றாக விளையாடவில்லை. இதனால் ஆரம்பத்திலே நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். இன்று எங்களுக்கு மோசமான நாள். எங்கள் அணி சரிவில் இருந்து மீண்டும் வரும் என்று நம்புகிறேன். அதேபோல, மொஹமட் ஆமிரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அது எமக்கு நல்ல அறிகுறியாகும். அதேபோல எமது பந்து வீச்சாளர்களும் இவ்வாறு தான் பந்துவீச வேண்டும்” என்று தெரிவித்தார்.

நியூசிலாந்தை வீழ்த்த முடியும் – திமுத் நம்பிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்…

இதுஇவ்வாறிருக்க, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், போட்டி வர்ணனையாளருளமான ரமீஸ் ராஜா பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து கருத்து வெளியிடுகையில், பாகிஸ்தான் வீரர்களின் துடுப்பாட்டம் மோசமாக இருந்தது. அடுத்து வரும் போட்டிகளில் இவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். உலகக் கிண்ணம் போன்ற பெரிய தொடர்களில் எதிரணியின் ஷோட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள தயாராக வந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை, 1992 உலகக் கிண்ணப் போட்டியிலும் பாகிஸ்தான் அணி பங்குபற்றிய முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. எனினும், குறித்த உலகக் கிண்ணப் போட்டியில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சம்பியனாகத் தெரிவாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி தமது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்வரும் 03ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<