விமானப்படைக்கு எதிராக வித்தை காண்பித்த இளம் ரினௌன் காலிறுதியில்

463

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றில் விமானப்படை அணிக்கு எதிரான போட்டியை 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட ரினௌன் விளையாட்டுக் கழகம் தொடரின் காலிறுதி சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

தொடரின் முன்னைய சுற்றில் ரினௌன் வீரர்கள் கிறிஸ்டல் பெலஸ் அணியினரை 2-1 என்ற கோல்கள் கணக்கிலும், விமானப்படை வீரர்கள் புளு ஸ்டார் அணியினரை 1-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி கொண்டனர்.

இந்நிலையில் இன்றைய மோதல் சுகததாஸ அரங்கில் மாலை 6 மணிக்கு மின்னொளியின் கீழ் ஆரம்பமானது.

  • ரினௌன் முதல் பதினொருவர்

மொஹமட் ரிஸ்னி, ராஷிக் றிஷாட் (கோல் காப்பாளர்), ஹகீம் காமில், ஜூட் சுமன், திமுது பிரியதர்ஷன, மொஹமட் முஜீப், மொஹமட் ரியால், டிலான் மதுசங்க, மரியதாஸ் நிதர்சன், மொஹமட் அர்ஷாட், திலீப் பீரிஸ்

  • விமானப்படை முதல் பதினொருவர்

நிபுன பன்டார, ருவன் அருனசிறி (கோல் காப்பாளர்), லக்மால் குனசிங்க, ரொஹான் பெர்னாண்டோ, நுவன் வெல்கமகே, கவிது இஷான், ஜீவன்த பெர்னாண்டோ, DK துமித, சுமேத பெர்னாண்டோ, ஷானக விஜேசேன, ஹர்ஷ பெர்னாண்டோ

ஆட்டம் ஆரம்பமாகி முதல் நிடத்திலேயே ரினௌன் வீரர் அர்ஷாட் விமானப்படை அணியின் பெனால்டி எல்லையில் வைத்து அவ்வணி வீரர்களால் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார். இதனால் கிடைத்த பெனால்டியை திலீப் பீரிஸ் கோலாக்கி ரினௌன் அணியை ஆரம்பத்திலேயே முன்னிலைப்படுத்தினார்

12ஆவது நிமிடத்தில் விமானப்படை வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது உள்ளனுப்பப்பட்ட பந்து தடுக்கப்பட, மீண்டும் கவிது இஷான் கோல் நோக்கி அடித்த பந்து கோல் கம்பத்தின் மேல் பகுதியில் பட்டவாறு வெளியேறியது.

25 நிமிடங்கள் கடந்த நிலையில் துமித ஒரு திசையில் இருந்து கோல் நோக்கி செலுத்திய பந்தை ராசிக் றிஷாட் பிடிக்கும்பொழுது பந்து கைநழுவியது. எனினும், மற்றொரு வீரர் வருவதற்குள் றிஷாட் பந்தைப் பற்றினார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் கவிது இஷான் மத்திய களத்தில் இருந்து பந்தை பெற்று, பெனால்டி எல்லைவரை எடுத்து வந்து கோல் நோக்கி உதைந்தபோது, றிஷாட் மீண்டும் பந்தைப் பிடித்தார்.

37ஆவது நிமிடத்தில் விமானப்படை எல்லையில் பந்தைப் பெற்ற டிலான் மதுசங்க, முன்னோக்கிச் சென்று பெனால்டி எல்லையில் இருந்து கோலுக்குள் செலுத்திய பந்து ருவன் அறுனசிறியின் தடுப்பினால் திசை மாறி, கோலை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

42ஆவது நிமிடத்தில் விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின்போது, முதலில் அனுப்பப்பட்ட பந்தை றிஷாட் தட்டி வெளியேற்ற, மீண்டும் அடுத்தடுத்து கோல் நோக்கி அடித்த பந்துகளை ரினௌன் பின்கள வீரர்கள் தடுத்து வெளியேற்றினர்.

எனினும், அடுத்த இரண்டு நிமிடங்களில் விமானப்படை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டிலீப் பீரிஸ் பந்தைப் பெற்று எதிரணியின் கோலுக்குள் செலுத்திய பந்து ருவன் அருனசிறியின் உடம்பில் பட, விமானப்படை அணியின் பின்கள வீரர் அதனை சிறந்த முறையில் வெளியேற்றவில்லை. எனவே, மீண்டும் பந்தைப் பெற்ற திலீப் பந்தை இலகுவாக கோலுக்குள் செலுத்தி இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

முதல் பாதி: விமானப்படை வி. 0 – 2 ரினௌன் வி.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்தில் கவிது இஷான் எதிரணியின் எல்லையின் வலது புறத்தில் பந்தைப் பெற்று, பெனால்டி எல்லை வரை அதனை எடுத்துச் சென்று உள்ளே செலுத்தியபோது கோலுக்கு அண்மையில் இருந்த துமித பந்தை கோலுக்குள் தட்டிவிட, மிகவும் இலகுவான வாய்ப்பின்போது பந்து கம்பங்களைவிட உயர்ந்து வெளியே சென்றது.

53 நிமிடங்கள் கடந்த நிலையில் கவிது இஷான் வேகமாக பந்தைப் பெற்று முன்னேறி, நிபுன பன்டாரவுக்கு வழங்க, நிபுன பந்தை கோலுக்குள் செலுத்தினார். எனினும், அது ஓப் சைட் கோல் என சைகை காண்பிக்கப்பட்டது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்கள் கடந்த நிலையில், மீண்டும் எதிரணியின் பெனால்டி எல்லையில் பந்தைப் பெற்ற கவிது, பின்கள வீரரிடமிருந்து தன்னை தனிமைப்படுத்தி கோலுக்குள் செலுத்திய பந்தை றிஷாட் தடுக்க, மீண்டும் ரிஸ்னி பந்தை அங்கிருந்து வெளியேற்றினார்.

மீண்டும் 79ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியின் ஒரு எல்லையில் இருந்து பந்தைப் பெற்ற டிலான் மதுசங்க, எதிரணியின் கோல் எல்லைவரை பந்தை எடுத்து வந்து, ருவன் அருனசிறி தடுக்க வந்த இறுதி தருணத்தில் திலீப் பீரிசிற்கு பரிமாற்றம் செய்ய, திலீப் கம்பங்களுக்குள் பந்தை செலுத்தி தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

அடுத்த 5 நிமிடங்களுக்குள் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற டிலான் மதுசங்க பந்தை பெனால்டி எல்லைவரை எடுத்துச் சென்று அணிக்கான நான்காவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் இறுதி நிமிடங்களில் மீண்டும் இரு அணி வீரர்களும் தமது அடுத்த கோலுக்கான முயற்சியை மேற்கொண்ட பொழுதும் அவை பயனற்றுப் போக, இளம் வீரரகளைக் கொண்ட ரினௌன் அணியினர் 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.

முழு நேரம்: விமானப்படை வி. 0 – 4 ரினௌன் வி.

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – டிலீப் பீரிஸ் (ரினௌன் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

ரினௌன் வி.க – திலீப் பீரிஸ் 2’, 44 & 79’, டிலான் மதுசங்க 83’  

மஞ்சள் அட்டை

விமானப்படை வி.க – ஷானக விஜேசேன 40’

ரினௌன் வி.க – மொஹமட் ரிஸ்னி 56’, திமுது பிரியதர்ஷன 64’,