வேகப் பந்துவீச்சில் மிரட்டி சாதித்துக் காட்டிய சமிந்த வாஸ்

384
Getty Image

உலகக் கிண்ண அரங்கில் தனது வேகப் பந்துவீச்சு மந்திரத்தால் எதிரணிகளை திணறடித்தவர் தான் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரர் சமிந்த வாஸ். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய அவர், வெறுமனே 6 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றியிருந்தார்.

உலகக் கிண்ணத்திலிருந்து தவறவிடப்பட்ட முன்னணி பதினொருவர்

கிரிக்கெட் வீரர்களின் மிகப் பெரிய கனவு…

அதன்பிறகு, 1999ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற ஏழாவது உலகக் கிண்ணத்தில் 5 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சமிந்த வாஸ், 2003ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியுடனான லீக் ஆட்டத்தின் போது முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை (ஹெட்ரிக்) கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். அத்துடன். குறித்த தொடரில் அதிக விக்கெட்டுகளை (23) வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டார்.

8ஆவது உலகக் கிண்ணத் தொடர் முதல்தடவையாக ஆபிரிக்கா கண்டத்தில் நடைபெற்றது. இதில் 14 அணிகள் பங்கேற்றிருந்ததுடன், பி குழுவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி, முதல் சுற்று லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து, பங்களாதேஷ், கனடா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்ததுடன், தென்னாபிரிக்கா அணியுடனான போட்டி டக்வர்த் லூவிஸ் முறைப்படி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

அத்துடன், கத்துக்குட்டி அணிகளில் ஒன்றான கென்யாவுடன் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வியை சந்திருந்தது.  

எனினும், இந்தத் தொடரில் இலங்கை அணிக்காக பந்துவீச்சில் அசத்தியிருந்த சமிந்த வாஸ், பங்களாதேஷ் அணியுடனான 10ஆவது லீக் ஆட்டத்தில் ஹெட்ரிக் சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

உலகக் கிண்ண வரலாற்றை பேசும் ஹெட்ரிக்-விக்கெட்டுகள்!

சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும்…

இதன்படி, களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு தனது அபார பந்து வீச்சின் மூலம் மிரட்டிய சமிந்த வாஸ், முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

Getty Image

முதல் பந்தில் ஹனான் சர்கார் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, இரண்டாவது பந்தில் அனுபவமிக்க வீரரான மொஹமட் அஷ்ரபுல் சமிந்த வாஸிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து நான்காவது இலக்க வீரராகக் களமிறங்கிய ஹெசனுல் ஹக் மூன்றாவது பந்தில் மஹேல ஜயவர்தனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, சமிந்த வாஸ் ஹெட்ரிக்கினை கைப்பற்றினார். எனினும், குறித்த ஓவரில் ஐந்தாவது பந்தில் சன்வார் ஹொசைனையும் எல்பியூ முறையில் அவர் ஆட்டமிழக்கச் செய்து முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சியைக் கொடுத்தார்.

இதன்மூலம், உலகக் கிண்ண வரலாற்றிலும், சர்வதேச ஒருநாள் போட்டிகள் வரலாற்றிலும் போட்டியின் முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளைக் (ஹெட்ரிக்) கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.

அத்துடன், ஒருநாள் போட்டியில் முதல் மூன்று பந்துகளில் ஹெட்ரிக் விக்கெட் எடுத்த சாதனையை இன்றுவரை எந்தவொரு வீரரும் முறியடிக்கவில்லை என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எதிர்பார்க்காத முடிவுகளை காட்டக்கூடிய இலங்கை அணிக்கு ஒற்றுமை தேவை – சமிந்த வாஸ்

இலங்கை அணியின் முன்னாள்…

இலங்கை அணியின் இடதுகை மித வேகப் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ், இலங்கை அணிக்காக நான்கு (1996–2007) உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும், தனது 37ஆவது வயது வரை உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்த சமிந்த வாஸ், 2011ஆம் ஆண்டு இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய துணைக் கண்டங்களில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மாற்று வீரர்களில் ஒருவராக இடம்பிடித்தார். எனினும், அவருக்கு அந்தத் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

எனவே, வேகப் பந்துவீச்சில் உலகின் முன்னணி வீரராக வலம்வந்த வாஸ், இதுவரை 31 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்ததுடன், உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.  

இதேநேரம், பங்களாதேஷ்  அணியுடன் நடைபெற்ற குறித்த லீக் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த  அணி, 31.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணிக்காக ஆலோக் கபில் 32 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் சமிந்த வாஸ் 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், முத்தையா முரளிதரன் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

124 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மார்வன் அத்தபத்து (69) மற்றும் சனத் ஜயசூரியா (55) ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் விக்கெட் இழப்பின்றி 126 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. போட்டியின் ஆட்டநாயகனாக சமிந்த வாஸ் தெரிவாகியிருந்தார்.

எதுஎவ்வாறாயினும், பி குழுவில் முதலிடத்தைப் பெற்று சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெற்ற இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் வெற்றி கொண்டாலும், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளிடம் தோல்வியைத் தழுவி அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.

இதனிடையே, 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுகளையும், 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய சமிந்த வாஸ், இலங்கை அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முறையே 3ஆவது மற்றும் 2ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

எனினும், 2009ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தொடர்ந்து உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி வந்தார். அத்துடன், 2010ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் கவுண்டி அணியான நொதர்ம்ப்டன்ஷெயார் கழகத்துக்காக டி-20 போட்டிகளில் களமிறங்கியிருந்த சமிந்த வாஸ், அந்த கழகத்துக்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி ஒருசில அரைச் சதங்களையும் குவித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட்…

அத்துடன், மிட்ல்ஸ்செக்ஸ், ஹேம்ப்ஷெயார் மற்றும் வோர்சஸ்டெர்ஷெயார் கவுண்டி கழகங்களுக்காகவும் அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 2012ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது நியூசிலாந்து அணியின் உதவி வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராகச் செயற்பட்ட சமிந்த வாஸ், 2013ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2015ஆம் ஆண்டு பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், 2017ஆம் ஆண்டு முதல் மீண்டும் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதுடன், தற்போது இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, கிரிக்கெட் அரங்கில் இலங்கை அணியின் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த சமிந்த வாஸ், இலங்கை அணிக்கு கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்த முக்கிய வீரர் என்றால் மிகையாகாது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<