இலங்கை கிரிக்கெட் (SLC) உள்நாட்டு போட்டிகளில் 2016/17 இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 15 பந்துவீச்சாளர்களில் 14 பேர் சுழல்பந்து வீச்சாளர்களாவர். அண்மைய உள்ளுர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மலிந்த புஷ்பகுமார மற்றும் லக்ஷான் சந்தகன், இந்தியாவுக்கு எதிரான பல்லேகல டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி கொடுக்க உதவினர்.

“பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினர். குறிப்பாக சுழல்பந்து வீச்சாளர்கள். முதல்நாளில் இந்திய அணியை எம்மால் 320 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்தது. சுழல்பந்து வீச்சாளர்கள் தொடர்பில் உண்மையிலேயே நான் திருப்தி அடைகிறேன். இறுதி நேரத்தில் விஷ்வ இரண்டு சுற்று ஓவர்களையும் வீசிய முறையும் நன்றாக இருந்தது” என்று இலங்கை வேகப்பந்து பயிற்சியாளர் சமிந்த வாஸ் முதல் நாள் ஆட்டத்தின் பின் குறிப்பிட்டார்.

இந்திய துடுப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் அழுத்தம் கொடுத்த இலங்கை

15 வயதுக்கு உட்பட்ட அணி தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட வயது மட்ட போட்டிகளின் முதல் 10 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசவேண்டும் என்று கட்டாயமாக்கி இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் (SLSCA) அண்மைய ஆண்டுகளில் புதிய விதிமுறை ஒன்றை அறிமுகம் செய்தது. இலங்கை கிரிக்கெட்டும் இதே விதிமுறையை 23 வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் அமுல்படுத்தியது. எனினும் உள்நாட்டு போட்டிகளில் இவ்வாறு வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

“முதல்தர கிரிக்கெட் செயற்படும் முறை பற்றி எம்மால் திருப்தி அடைய முடியாதிருக்கின்றது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவுவதாக முதல்தர கிரிக்கெட்டை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. முதல்தர கிரிக்கெட்டுக்கு என்ன ஆனது என்பது பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். எவ்வளவு பேசினாலும் இந்த விடயத்தில் முன்னேற்றம் காணமுடியாது. எமது கிரிக்கெட்டை மேம்படுத்த விரும்பினால் எம்மிடம் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எமது கிரிக்கெட்டுக்கு நன்மையை செய்ய விரும்பினால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பொருத்தமான ஆடுகளங்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்தால் இப்போதை விடவும் எமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்படுவார்கள்” என்று வாஸ் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.

ஆடுகள தயாரிப்பாளர்கள் போட்டி ஆரம்பிக்கப்படும் முன்னர் புற்களை குறைக்கும் வரை போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் அதிக புற்கள் இருந்தன. இலங்கையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஒன்றாக பல்லேகல ஆடுகளம் இருந்தபோதும் பகல்போசன இடைவேளைக்கு பின்னர் அங்கு பந்து சுழல ஆரம்பித்தது. “ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு அதிகம் சாதகம் கொண்டதாக உள்ளது. பந்து எப்படி செயற்படுகிறது துடுப்பாட்ட வீரர்கள் எப்படி ஓட்டங்களை குவிக்கிறார்கள் என்பதை நாம் முதல் ஒருசில மணி நேரங்களில் கண்டோம். இது தனித்துவமான ஒரு கண்டி ஆடுகளம்” என்றார் வாஸ்.

அண்மைய காலத்தில் இலங்கை அணியின் போட்டித் திட்டங்களுக்கு இடையூறாக போட்டிகளுக்கு இடையில் வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்திற்கு உள்ளாகின்றனர். இது உடற்தகுதி பிரச்சினையா அல்லது உறுதியற்ற நிலையா? என்று இலங்கையில் தோன்றிய மிகச்சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான வாஸிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி தொடுத்தனர்.    

“உண்மையில் இது ஒரு வித்தியாசமான உடல் அமைப்பாகும். ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்ற வகையில்- இப்போதைய சில இளைஞர்கள் போன்றே நானும் வலை பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் என வெவ்வேறு முறைகளில் பந்துவீசியே சமாளித்தேன். அவர்களது உடல் அமைப்பு பற்றி தெரிந்து கொண்டு வித்தியாசமான வழிகளில் அணுகினாலேயே அவர்களை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்” என்று வாஸ் குறிப்பிட்டார். வாஸ் தனது 15 வருடகால கிரிக்கெட் வாழ்வில் 750 இற்கும் அதிகமான சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டிலும் நிற பேதமா? தமிழக வீரர் அபினவ் முகுந்த் வேதனை

தற்போதைய டெஸ்ட் தொடரின்போதும் அதிக அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் சுரங்க லக்மால் உபாதைகளுக்கு உள்ளானதால் பலம் கொண்ட இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி போதிய அனுபவம் இல்லாத இளைஞர்களான லஹிரு குமார (8 டெஸ்டுகள்) மற்றும் விஷ்வ பெர்னாண்டோ (2 டெஸ்டுகள்) ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடனேயே களமிறங்கியுள்ளது. இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்ற நிலையிலேயே பல்லேகல டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

போட்டியின் முதல் ஒரு மணி நேரத்தில் வழக்கம் போல் பந்து வீசிய குமார மற்றும் பெர்னாண்டோ ஷிகர் தவான் மற்றும் கே.எல். ராகுலுக்கு தமது நிலையை தக்கவைத்துக் கொள்ள உதவினர். எனினும் முதல்நாள் ஆட்டத்தின் இறுதி நேரத்தில் இந்த இருவரும் குறிப்பிடும்படியாக சிறப்பாக பந்துவீசினார்கள். இருவரும் முதல் நாளில் மொத்தமாக 34 ஓவர்கள் வீசி 135 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த நிலையில் பெர்னாண்டோவினால் மாத்திரமே ஒரு விக்கெட்டை வீழ்த்த முடிந்தது.

“அவர்கள் மேலும் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எமது முதல்தர கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு தமது திறமையை வெளிக்காட்ட போதுமான முதல்தர அனுபவம் கிடைப்பதில்லை. எந்த ஒரு நாட்டின் வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்துக் கொண்டாலும் 20-25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்னரே அவர்கள் சிறந்த முறையில் பந்துவீச தொடங்குவார்கள். விஷ்வ மற்றும் லஹிரு குமாரவிடம் இருந்து எம்மால் திடீரென்று அதிகம் எதிர்பார்க்க முடியாது. என்றாலும் தம்மை முன்னேற்றிக்கொள்ளும் மனநிலையை அவர்கள் வளர்க்க வேண்டும். அவர்களுக்கு அதிக பயிற்சி மற்றும் அதிக போட்டிகள் தேவை. அந்த போட்டி அனுபவம் மட்டுமே அவர்களை வளர்க்கும்” என்று வாஸ் சுட்டிக்காட்டினார்.