நேபாளத்தில் கிரிக்கெட் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட உபுல் தரங்க

93

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரான உபுல் தரங்க நேபாளத்தில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான எவரெஸ்ட் ப்ரீமியர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமாக வலம்வந்து கொண்டிருக்கின்ற உபுல் தரங்க, அண்மைக்காலமாக தேசிய அணியில் விளையாடாவிட்டாலும் உள்ளூர் கழகமட்டப் போட்டிகள் மற்றும் ஒருசில வெளிநாட்டு டி20 லீக்கில் விளையாடி வருகின்றார்

26 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பருவகாலத்துக்கான…

இந்நிலையில், நேபாளத்தில் எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உள்ளூர் டி20 தொடரான எவரெஸ்ட் ப்ரீமியர் லீக்கில் நடப்புச் சம்பியனான லலித்புர் அணியுடன் தரங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

35 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க, இறுதியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்ததுடன், அதன்பிறகு அபுதாபியில் நடைபெற்ற டி10 தொடர் மற்றும் பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 31 டெஸ்ட், 287 ஒருநாள் மற்றும் 26 டி20 போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள உபுல் தரங்க, முதல்தர டி20 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 18 அரைச் சதங்களுடன் 3,188 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

நேபாளம் கிரிக்கெட் சபையினால் 4ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டித் தொடரானது கத்மண்டுவில் உள்ள டியு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

அத்துடன், ஆறு அணிகள் பங்குபற்றவுள்ள இந்தத் தொடரில் உலகின் முன்னணி டி20 நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், டுவைன் பிராவோ, மொஹமட் ஷசாத், ஹஸீம் அம்லா மற்றும் கெவின் பிரையன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<