மடவளை மதீனா மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணிகளுக்கு வெற்றி

273

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழ் டிவிசன் 3 பாடசாலைகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் 2 போட்டிகள் இன்று நிறைவுற்றதுடன், டிவிஷன் ஒன்றுக்கான ஒரு காலிறுதிப் போட்டியும் இடம்பெற்றது. 

இந்துக் கல்லூரி, கொழும்பு எதிர் மதீனா மத்திய கல்லூரி, மடவளை

தெஹிவளை S DE S மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் மதீனா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி அணி 35.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. பிரவீன் குமார் 41 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ஹாரித் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பின்னர், 133 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மதீனா மத்திய கல்லூரி அணி 25.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது. MSM சஹில் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் அனுசன் ராஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

இந்துக் கல்லூரி, கொழும்பு – 132/10 (35.1) பிரவீன் குமார் 41, ஹரேந்திர பிரசாத் 20. ஹாரித் 3/15, MSM. மும்ஷிப் 2/13, AJM. அஜ்மல் 2/17, பசால் 2/18.

மதீனா மத்திய கல்லூரி, மடவளை – 135/4 (25.1) MSM. சஹில் 52*. அனுசன் ராஜ் 2/31

யாழ் மத்திய கல்லூரி எதிர் மயூரபாத மத்திய கல்லூரி, நாரம்மல  

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று இடம்பெற்ற இப்போட்டியில் சொந்த மைதானத் தரப்பினர் 167 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மயூரபாத அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி அவ்வணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக இயலரசன் 92 ஓட்டங்களையும் கௌதமன் 63 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மயூரபாத கல்லூரியின் சாமர குமார மற்றும் பியுமால் ஜயரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

296 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மயூரபாத கல்லூரி அணி 44 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தொல்வியைத் தளுவியது. சாமர குமார 22 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுக்களையும் இஹலரசன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் – 295/9 (50)  இயலரசன் 92, கௌதமன் 63, நிஷான் 43. பியுமால் ஜயரத்ன 2/30, சமார குமார 2/36.

மயூரபாத மத்திய கல்லூரி, நாரம்மல – 128/10 (44) சாமர குமார 22. வியாஸ்காந்த் 3/30, இயலரசன் 2/09.

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழ் டிவிசன் 1 பாடசாலைகளுக்கிடையிலான 2 நாள் டெஸ்ட் போட்டித்தொடரின் ஒரு காலிறுதிப் போட்டி இன்று நிறைவுற்றது.

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை

தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்றது. நிபுன் சுமனசிங்ஹ 93 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் பிரவீன் ஜயவிக்கிரம 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் புனித செபஸ்டியன்ல6 கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட்டினை இழந்து 22 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 360/10 (97.3) நிபுன் சுமனசிங்ஹ 93, சச்சின்த ரவீந்து 57. பிரவீன் ஜயவிக்கிரம 4/86, தருஷ பெர்னாண்டோ 2/30.

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 22/1 (07)