நட்சத்திரங்களுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகும் ‘ஸாஹிரா சுப்பர் 16’

67

13 ஆவது “ஸாஹிரா சுப்பர் 16” கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பலரும் எதிர்பார்க்கும் அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு ஸாஹிரா கல்லூரி தனது கால்பந்து வரலாற்றில் 100 ஆண்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அதன் பெருமையை பறைசாற்றும் வகையிலேயே 13 ஆவது ஸாஹிரா சுப்பர் 16 கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.

இந்த தொடரின் முக்கிய அம்சமாக Cool Planet, The Factory Outlet மற்றும் Bolt Gear நிறுவனங்களின் அனுசரணையில் அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மோதும் பிரபலங்களின் கால்பந்து போட்டி ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை சாஹிரா கல்லூரி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் நட்சத்திரங்கள் அணிக்கு இலங்கை முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன தலைமை வகிப்பதோடு ரொமேஷ் களுவிதாரண, கிரேம் லப்ரோய், சமிந்த வாஸ், உபுல் சந்தன, நுவன் சொய்சா மற்றும் இசுரு உதான ஆகிய வீரர்களும் அணியில் இடம்பெறுகின்றனர்.

அனைத்து நட்சத்திரங்கள் அணி பாடகர் சந்தூஷ் வீரமன் தலைமையில் களமிறங்கவுள்ளதோடு ரக்பி, கால்பந்து, வர்த்தகம், கலை, ஊடகம் என்று பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் அணியில் இடம்பெறுகின்றனர்.

ஸாஹிரா சுப்பர் 16 தொடர் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி 22 ஆம் திகதி முடிவடையவுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக இந்த தொடர் அணிக்கு எழுவர் கொண்ட கால்பந்து தொடராக ஏற்பாடு செய்யப்பட்டபோதும் அதனை சம்பிரதாயமான அணிக்கு பதினொருவர் தொடராக நடாத்துவதற்கு ஏற்பாட்டாளர்களான ஸாஹிரா கல்லூரி முன்னாள் மாணவர் தலைவர் சங்கம் தீர்மானித்துள்ளது. இது வீரர்களுக்கு மேலும் திறமையை வெளிக்காட்டவும் இலங்கையின் இளம் கால்பந்து வீரர்களுக்கு பெறுமதி கொண்டதாகவும் இருக்கும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் கருதுகின்றனர்.

இந்த ஆண்டு தொடரில் ஸாஹிராவின் கடும் போட்டியாளரான ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி, கேட்வே சர்வதேச பாடசாலை (Gateway International School), லைசியம் சர்வதேச பாடசாலை மற்றும் யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

>இறுதி நிமிட கோலினால் ஸாஹிராவை வீழ்த்திய புனித பத்திரிசியார் கல்லூரி<

பங்கேற்கும் 16 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுவதோடு ஒவ்வொரு குழுவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் கிண்ணத்திற்கான அரையிறுதிக்கு தெரிவாகும். ஒவ்வொரு குழுவிலும் இரண்டாவது இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேட் கிண்ணத்திற்கான அரையிறுதிக்கு தகுதி பெறவுள்ளன. அந்தந்த குழுக்களில் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களை பிடிக்கும் அணிகள் போவ்ல் (Bowl) மற்றும் கேடயத்திற்கான அரையிறுதிகளுக்கு தகுதிபெறவுள்ளன.

குழு A இல் கடந்த ஆண்டு சம்பியனான வெஸ்லி கல்லூரியுடன் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி, இசிபதன கல்லூரி மற்றும் நாலந்தா கல்லூரி ஆகியன இடம்பெறுகின்றன. குழு B இல் திரித்துவ கல்லூரி, இந்துக் கல்லூரி, புனித பேதுரு கல்லூரி மற்றும் புனித ஹென்ரியரசர் கல்லூரிகள் விளையாடுகின்றன.

19 வயதுக்கு உட்பட்ட முதலாம் பிரிவின் 2016 ஆண்டு சம்பியனான புனித ஜோசப் கல்லூரி குழு C இல் இடம்பிடித்திருப்பதோடு இந்த குழுவில் புனித பெனடிக்ட் கல்லூரி, ரோயல் கல்லூரி மற்றும் லைசியம் சர்வதேச பாடசாலையும் விளையாடவுள்ளன.

இதில் குழு D பலம் கொண்ட ஒரு குழுவாக உள்ளது. இந்த குழுவில் கால்பந்து ஜாம்பவான்களான போட்டியை நடாத்தும் சாஹிரா கல்லூரி, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மற்றும் டி மெசனொட் கல்லூரிகள் உள்ளன. குழு D இல் நான்காவது அணியாக கேட்வே கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.

குழுநிலை போட்டிகள் ஒரு பாதி, 25 நிமிட நேரங்களை கொண்டதாக இடம்பெறவிருப்பதோடு பிளேட், போவ்ல் மற்றும் கேடய போட்டிகள் ஒரு பாதி, 20 நிமிட நேரத்தை கொண்டதாக நடத்த ஏற்பாடாகியுள்ளது. கிண்ணத்திற்கான அரையிறுதி ஒரு பாதி, 30 நிமிட நேரத்தை கொண்டதாகவும் இறுதிப் போட்டி ஒரு பாதி, 35 நிமிட நேரத்தை கொண்டதாகவும் நடைபெறும்.

குழுக்களில் முதலிடத்தை பெறும் அணிகள் கிண்ணத்திற்கான அரையிறுதிக்கு முன்னேறுவதோடு குழுவில் இரண்டாது இடத்தைப்பிடித்த அணிகள் போவ்ல் அரையிறுதிகளுக்கு நுழையும். கிண்ணத்திற்கான அரையிறுதியில் தோற்கும் அணிகள் பிளேட் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பதோடு போவ்ல் அரையிறுதியில் தோற்கும் அணிகள் கேடய இறுதிப் போட்டியில் விளையாடும்.

இந்த தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக Cool Planet செயற்படுவதோடு தங்க, வெள்ளி மற்றும் வெண்கல அனுசரணையாளர்களாக முறையே The Factory Outlet, Bolt Gear மற்றும் The Traveller நிறுவனங்கள் செயற்படுகின்றன. மேலும் கடந்த ஆண்டைப் போன்றே போட்டியில் பங்கேற்கும் 16 அணிகளுக்கும் 16 வெவ்வேறு அனுசரணையாளர்கள் பங்கேற்கின்றனர்.

குழு A குழு B குழு C குழு D
வெஸ்லி கல்லூரி திரித்துவக் கல்லூரி புனித ஜோசப் கல்லூரி ஸாஹிரா கல்லூரி
ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி இந்துக் கல்லூரி புனித பெனடிக்ட் கல்லூரி மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி
இசிபதன கல்லூரி புனித பேதுரு கல்லூரி ரோயல் கல்லூரி டி மெசனொட் கல்லூரி
நாலந்த கல்லூரி புனித ஹென்ரியரசர் கல்லூரி லைசியம் சர்வதேச பாடசாலை

 

கேட்வே கல்லூரி