புனித பத்திரிசியார் – அல் அக்ஸா மோதல் சமனிலை: றோயலுக்கு முதல் வெற்றி

209

18 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்று பாடசாலை கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.  இதில் விறுவிறுப்பான மேலும் 3 ஆட்டங்கள் இந்த வாரம் இடம்பெற்றன.

கிண்ணியா அல்அக்ஸா கல்லூரி எதிர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி

எழிலரங்கு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்று முடிந்த கிண்ணியா அல்அக்ஸா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிகள் இடையிலான இந்தப் போட்டி 1-1 என்கிற கோல்கள் கணக்கில் சமநிலை அடைந்திருந்தது.

தடுமாற்றம் கண்ட புனித பேதுரு கல்லூரியை வென்றது கிண்ணியா அல் அக்ஸா

கொழும்பு, புனித பேதுரு கல்லூரி மைதானத்தில்..

கொழும்பு புனித பேதுரு கல்லூரிக்கெதிராக 4-3 என்கிற கோல்கள் வித்தியாசத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் இந்தப் பருவகாலத்தினை ஆரம்பித்த கிண்ணியா அல்அக்ஸா கல்லூரி அணி, அதே மாதிரியான வெற்றியொன்றினை பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்போடு யாழ்ப்பாண வீரர்களுடன் களம் கண்டிருந்தது.

மறுமுனையில் விருந்தினர்களாக கிண்ணியாவுக்கு வந்து இப்போட்டியின் மூலம் இந்தப் பருவகாலத்தினை ஆரம்பிக்கும், யாழ்ப்பாண புனித பத்திரிசியார் கல்லூரியும் நல்ல முடிவுகளை எதிர்பார்த்து களமிறங்கியிருந்தது.

போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் இரண்டு அணிகளும் சமபலத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். முதல் கோலினைப் பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் இரு அணிகளும் ஈடுபட்ட போதிலும் போட்டியின் முதல் அரைப்பாதி நிறைவுவரை எந்த அணியினாலும் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல் போயிருந்தது.

முதல் பாதி: அல்-அக்ஸா கல்லூரி 0 – 0 புனித பத்திரிசியார் கல்லூரி

விறுவிறுப்பாக ஆரம்பித்த ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் முதல் கோலினை எந்த அணி பெறும் என்கிற கேள்வி எழுந்த நிலையில், போட்டியின் முதல் கோலினை 66 ஆவது நிமிடத்தில் P. சம்சோன் யாழ் அணிக்காக அதனைப் பெற்றுத்தந்தார்.

முதல் கோலுடன் உற்சாகமடைந்த பத்திரிசியார் கல்லூரி அணி தமது பின்களத்தினை பலப்படுத்தி, எதிரணி கோல்கள் பெறுவதை தடுக்க அரண் அமைத்தது. இதனால், தொடர்ந்த ஆட்டத்தில் அல்அக்ஸா கல்லூரியினால் கோலொன்றினைப் பெற்று ஆட்டத்தினை சமநிலைப்படுத்துவது கடினமாக இருந்தது.

முதல் பாதி அபாரத்தினால் ஹமீட் அல் ஹுஸைனியை வீழ்த்திய கிண்ணியா மத்தி

கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரிக்கு..

இதேவேளை, யாழ். வீரர்களுக்கும் மேலதிக கோலொன்றினை பெற முடியவில்லை. இப்படியாக முன்னேறிய ஆட்டத்தின் மேலதிக நிமிடங்களில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அல்அக்ஸா கல்லூரிக்காக பெரோஸ் கோலொன்றினைப் பெற்றுக் கொடுத்தார். இந்த கோலின் துணையோடு கிண்ணியா வீரர்கள் ஆட்டத்தினை சமநிலைப்படுத்தினர்.

முழு நேரம்: அல்-அக்ஸா கல்லூரி 1 – 1 புனித பத்திரிசியார் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி P.  சம்சோன் 66′

அல்அக்ஸா கல்லூரி ANA. பெரோஸ் 98′

மஞ்சள் அட்டைகள்

புனித பத்திரிசியார் கல்லூரி – A. சரோண் 17′, P. சம்சோன் 17′

அல்அக்ஸா கல்லூரி A.S.M. பஹாத், F. பஷால் மொஹமட் 20′


றோயல் கல்லூரி எதிர் திருச் சிலுவை கல்லூரி

கொழும்பு றோயல் கல்லூரியின் கால்பந்து அரங்கில் இடம்பெற்ற இந்த ஆட்டமானது அக்கல்லூரி தமது புதிய பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமியின் வழிநடாத்தலின் கீழ் ஆடும் முதலாவது பிரிவு ஒன்று போட்டியாக அமைந்தது.

கடந்த காலங்களில் அவ்வளவு பிரகாசிக்காத இந்த அணி, ரூமியின் குறுகிய கால பயிற்றுவிப்பின் பின்னரே தமது முதல் ஆட்டத்தில் களுத்தறை திருச்சிலுவை கல்லூரியினரை எதிர்கொண்டனர்.

இந்தப் போட்டியில் பல இளம் வீரர்களை முதல் பதினொருவர் அணியில் இணைத்து ஆடிய றோயல் கல்லூரியானது 1-0 என்கிற கோல்கள் கணக்கில் போட்டியை வெற்றி கொண்டு தொடரை ஆரம்பித்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் G.K. தனன்ஞயவினால்  பெறப்பட்ட கோலே றோயல் கல்லூரியின் வெற்றிக்கான மற்றும் போட்டியின் ஒரே கோலாக அமைந்தது.

தமது முன்னிலையுடன் இரண்டாவது பாதியை ஆரம்பித்த றோயல் வீரர்கள் சிறந்த பின்களத் தடுப்பு மற்றும் கோல் காப்பாளரின் சிறந்த செயற்பாடு என்பவற்றினால் களுத்தறை வீரர்களின் கோல் முயற்சிகளை தடுத்தனர்.

முழு நேரம்: றோயல் கல்லூரி 1-0 திருச் சிலுவை கல்லூரி

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி

நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் சொந்த மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியினை 1-0 என்கிற கோல் கணக்கில் மாரிஸ் ஸ்டெல்லா அணி தோற்கடித்திருந்தது.

போட்டியின் முதல் அரைப்பாதியில் எந்த அணிகளினாலும் கோல்கள் பெறமுடியவில்லை. எனினும், இரண்டாம் பாதியில் A.S. மாரவிங்க மாரிஸ் ஸ்டெல்லா அணிக்காக ஒரு கோலினைப் போட்டு தனது தரப்பினை வெற்றி அடையச் செய்தார்.

முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 1 – 0 கிங்ஸ்வூட் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி A.S. மாரவிங்க 76′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<