தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு வீரர்கள்

தெற்காசிய கனிஷ;ட மெய்வல்லுனரில் வட,கிழக்கு வீரர்களுக்கு வெற்றி

1059

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று (06) நிறைவுக்கு வந்த 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாகேந்திரம் உதயவானி பெண்களுக்கான ஈட்டி எறிதலிலும், வட மாகாணத்தைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாள் போட்டிகள் மைதான நிகழ்ச்சிகளுடன் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றிய நாகேந்திரம் உதயவானி (39.12 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

எனினும், குறித்த போட்டியில் இந்திய வீராங்கனை சன்ஜனா பலோதியா (48.08 மீற்றர்) புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், இலங்கையின் டி.எம்.ஐ ஹசன்தி (40.80 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற நாகேந்திரம் உதயவானி, 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தமிழ் பேசுகின்ற ஒரேயொரு வீராங்கனையாக இடம்பெற்றிருந்தார்.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரின் முதல் நாளில் இலங்கை 5 தங்கப் பதக்கங்கள்

முன்னதாக கடந்தவாரம் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் (34.92 மீற்றர்ர) 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட உதயவானி,  அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டியிலும் பங்குபற்றி (37.00 மீற்றர்) 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல் போட்டிகளில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட உதயவானி, முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகணத்தின் அனுபவமிக்க பயிற்சியாளரும், திருகோணமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான எஸ். விஜயனீதன் மற்றும் 2007இல் கொழும்பில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான கே.எம் ஹாரிஸின் வழிகாட்டலுடன் கடந்த 6 மாதங்களாக பல்வேறு கஷ்டத்துக்கும், இன்னல்களுக்கும் மத்தியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்த உதயவானி, சர்வதேச மட்டத்தில் தான் பங்குபற்றிய முதல் போட்டியிலேயே சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

தனது வெற்றி குறித்து உதயவானி ஆனந்த கண்ணீருடன் எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவிக்கையில், ”நான் இவ்வளவு தூரம் வருவதற்கு எனது பாடசாலையின் பயிற்றுவிப்பாளர் தினேஷ் குமார் ஆசிரியரே முக்கிய காரணம். நான் பாடசாலையில் வலைப்பந்தாட்டம், எல்லே போன்ற போட்டிகளில் விளையாடி வருகின்றேன். ஆனால் எனக்கு ஈட்டி எறிதல் போட்டிகளில் பயிற்சியளித்து இந்த நிலைக்கு தினேஷ் குமார் ஆசியர்தான் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து விஜயனீதன், ஹாரிஸ் மற்றும் சுரேஷ் ஆசிரியர்களிடம் நான் தொடர்ந்து பயிற்சிகளைப் பெற்றேன். அதன் பிரதிபலனாக இன்று நடைபெற்ற போட்டியில் எனக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. நான் பதக்கமொன்றை பெற்றுக் கொள்வேன் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் குறிப்பாக எனது பெற்றோர்களும் என்னுடன் இருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன் என கண்ணீர் மல்க” உதயவானி தெரிவித்தார்.

அத்துடன், ”எனக்கு இங்கு வருவதற்கு உதவி செய்த திருகோணமலை மெய்வல்லுனர் சங்கத்துக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இறுதியாக நான் நிச்சயம் அடுத்துவரும் ஒருசில மாதங்களில் நடைபெறவுள்ள அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவிலும் போட்டி சாதனையை முறியடிப்பேன். அந்தப் போட்டியிலாவது எனது அப்பா மைதானத்துக்கு வந்து எனது திறமையை பார்ப்பார்” என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதேநேரம், போட்டியின் பிறகு உதயவானியின் பயிற்றுவிப்பாளரான எஸ். விஜயனீதன் எமது இணையத்தளத்துக்கு கருத்து வெளியிடுகையில்,  ”உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கனிஷ்ட மெய்வல்லுனர், ஆசிய தகுதிகாண் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட உதயவானி, இன்று நடைபெற்ற போட்டியில் தனது சிறந்து தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றார். உண்மையில் அவர் 40 மீற்றர் தூரத்தை தாண்டுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் காலில் ஏற்பட்ட உபாதையினால் அவரால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனது. எனவே அடுத்து நடைபெறவுள்ள அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் இலங்கை சாதனையை உதயவானி நிச்சயம் முறியடிப்பார்” என நம்பியிருக்கின்றோம் என்றார்.

கிந்துஷனின் போராட்டத்துக்கு வெற்றி

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டி இலங்கை ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பை கொடுத்திருந்தது. இப்போட்டியில் பங்குபற்றியிருந்த இந்திய வீரர்களான அஜய் குமார் பிந்த் (15 நிமிடங்கள் 08.40 செக்.), குர்ப்பிரீத் (15 நிமிடங்கள் 32.53 செக்.) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

எனினும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இலங்கையின் கிந்துஷனுக்கும், நேபாளத்தின் நரேஷ் புதாவுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது. குறித்த இரு வீரர்களும் கடைசி சுற்றின் இறுதி 100 மீற்றர் தூரத்தை விட்டுக்கொடுக்கமால் சரிசமமாக ஓடியிருந்ததுடன், வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் மைதானத்தில் இருந்த இலங்கை ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், போட்டியின் எல்லைக் கோட்டை ஒரே நிமிடங்களில் குறித்த இரண்டு வீரர்களும் நிறைவுசெய்தாலும், 0.08 மில்லி செக்கன் வித்தியாசத்தில் இலங்கையின் கிந்துஷனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இதன்படி, குறித்த போட்டியை 16 நிமிடங்கள் 18.43 செக்கன்களில் நிறைவு செய்து கிந்துஷன் 3ஆவது இடத்தையும், 16 நிமிடங்கள் 18.51 செக்கன்களில் நிறைவு செய்த நேபாள வீரர் நரேஷ் புதா 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன், கடந்த வாரம் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் போட்டியை 33 நிமிடங்கள் 56.87 செக்கன்களிலும், 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள் 56.10 செக்கன்களிலும் நிறைவு செய்து தங்கப் பதக்கங்களை வென்றதுடன், தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரிற்கும் தெரிவாகினார்.

எனவே, கிந்துஷனின் இந்த வெற்றியானது தெற்காசிய போட்டியொன்றில் முதல் தடவையாக சுவட்டு நிகழ்ச்சியொன்றுக்காக வவுனியா மாவட்டத்துக்கும், வட மாகாணத்துக்கும் கிடைத்த முதல் வெற்றியாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.

800 மீற்றரில் அரவிந்தனுக்கு 4ஆவது இடம்

3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாமில் இடம்பெற்றிருந்த பதுளையைச் சேர்ந்த சந்திரகுமார் அரவிந்தன், ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியை ஒரு நிமிடம் 55.26 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த அரவிந்தன், குறித்த போட்டியை ஒரு நிமிடம் 53.46 செக்கன்களில் நிறைவுசெய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் அவருடைய சிறந்த காலத்தை பதிவு செய்ய முடியாமல் போனது.

2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டத்தில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அரவிந்தன், அன்று முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர், ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் தேசிய இளையோர் விளையாட்டு விழாக்களில் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளார்.

தட்டெறிதலில் பிரகாஷ்ராஜுக்கு 4ஆவது இடம்

3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாமில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு தமிழ் பேசும் வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் போட்டிகளின் முதல் நாளான நேற்று (05) நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குபற்றிய யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிகாஷ்ராஜ் (44.11 மீற்றர்) தனது சிறந்த தூரத்தைப் பதிவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் தட்டெறிதல் மற்றும் சம்மட்டி எறிதல் உள்ளிட்ட எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிகாஷ்ராஜ், அண்மையில் நிறைவுக்கு வந்த 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் (39.73 மீற்றர்) புதிய போட்டி சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்டு, 42.50 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் யாழ். ஹார்ட்லி கல்லூரிக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவரும், 2013 முதல் அக்கல்லூரியின் எறிதல் நிகழ்ச்சிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்ற ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவரான ஹரிஹரனின் பயிற்றுவிப்பின் கீழ் அண்மைக்காலமாக பல வெற்றிகளைப் பெற்று வருகின்ற பிரகாஷ்ராஜ், தான் பங்குபற்றிய முதலாவது சர்வதேசப் போட்டியில் சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து வட மாகாணத்துக்கும் கௌவரத்தைப் பெற்றுக்கொடுத்தார்.