இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் நடாத்தப்பட்டுவரும், 23 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின், நான்கு போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன.

வட மாகாண அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கிய அசித்த பெர்னாந்து

வட மேல் மாகாணம் எதிர் வட மாகாணம்

நேற்று புளும்பல்ட் மைதானத்தில் ஆரம்பித்திருந்த இந்த போட்டியின் இரண்டாம் நாளான இன்று, தமது இரண்டாவது இன்னிங்சை முதல் நாளிலேயே ஆரம்பித்திருந்த வடமேல் மாகாண அணி, மினோத் பானுக்க விளாசிய அபார சதத்துடன் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

வடமேல் மாகாண அணி சார்பாக மினோத் பானுக்க, மொத்தமாக 115 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு லியோ பிரான்சிஸ்கோ தனது அணிக்காக 52 ஓட்டங்களை விளாசியிருந்தார். இதேவேளை, கபில்ராஜ் வட மாகாண அணிக்காக இரண்டு விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார்.

இதனால் வட மாகாண அணிக்கு வெற்றி இலக்காக 252 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைப் பெறுவதற்கு, துடுப்பாடிய அவ்வணி அரவிந்த அகுருகொட மற்றும் தரிந்து ரத்னநாயக்க ஆகியோரின் அபார பந்துவீச்சினால், 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது. இது வடமாகாணம் தொடரில் பெற்ற மூன்றாவது தொடர் தோல்வியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

வட மாகாண அணிக்காக அதிகபட்சமாக, துலாஜ் ரணதுங்க மற்றும் G. ரதீஷன் ஆகியோர் தலா 30 ஓட்டங்கள் வீதம் பகிர்ந்து கொண்டனர். பந்து வீச்சில், அசத்தியிருந்த அரவிந்த அகுருகொட 5 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்னநாயக்க 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தொடரில் வடமேல் மாகாண அணியின் இரண்டாவது வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

வடமேல் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (60) – லியோ பிரான்சிஸ்கோ 42, சச்சின் ஜயவர்தன 38, சசித் லக்‌ஷான் 38/6

வட மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 146 (31.3) – பராக்கிரம தென்னக்கோன் 39, அசித்த பெர்னாந்து 6/42

வடமேல் மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 207/3d (45) – மினோத் பானுக்க 115, லியோ பிரான்சிஸ்கோ 52, K. கபில்ராஜ் 2/20

வடமாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 160 (40) – துலாஜ் ரணதுங்க 30, G. ரதீசன் 30, அரவிந்த அகுருகொட 5/33, தரிந்து ரத்னநாயக்க 4/48

போட்டி முடிவு – வடமேல் மாகாண அணி 91 ஓட்டங்களால் வெற்றி.


தென்மாகாணம் எதிர் மேல் மாகாணம் (வடக்கு)

மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நேற்று தொடங்கியிருந்த இப்போட்டியில், நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 105 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் காணப்பட்டிருந்த மேல் மாகாண வடக்கு அணி இன்று தொடர்ந்து துடுப்பாடியது.

மேல் மாகாண அணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய, லக்ஷின ரொட்ரிகோ அரைச்சதம் விளாச சரிவிலிருந்து மீண்டு கொண்ட மேல் மாகாண அணியினர் 65.5 ஓவர்களில் 224 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக்கொண்டனர்.

இலங்கையுடனான முதல் டெஸ்டில் வைரஸ் காய்ச்சலால் ராகுல் நீக்கம்

அணியை மீட்ட ரொட்ரிகோ 69 ஓட்டங்களையும் அவருக்கு கரம்கொடுத்த நிஷான் பீரிஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தென்மாகாண அணியின் பந்து வீச்சில், திஷான் சந்தருவன் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார்.

தொடர்ந்து, தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த தென் மாகாணத்திற்கு முன்னர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட மேல் மாகாண வீரர் நிஷான் பீரிஸ் அதிர்ச்சியளித்தார். இதனால், 111 ஓட்டங்களை மாத்திரமே தென்மாகாண அணி பெற்றுக்கொண்டது.

தென் மாகாண அணியின் துடுப்பாட்டத்தினை திக்கு முக்காடச் செய்த நிஷான் பீரிஸ் 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். தென்மாகாண வீரர்களின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சஜித் சங்கல்ப 23 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார்.

இதனையடுத்து, வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 57 ஓட்டங்களைப் பெறுவதற்கு இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய மேல் மாகாண வடக்கு அணி, விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 19 ஆவது ஓவரில் இலக்கினை அடைந்து 23 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான தொடரில் முதல் வெற்றியை பதித்தது.

போட்டியின் சுருக்கம்

தென் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 169 (59) – மலித் மஹேல 46, ரமேஷ் மெண்டிஸ் 41, நிஷாம் பீரிஸ் 4/38

மேல் மாகாணம் வடக்கு  (முதல் இன்னிங்ஸ்) – 224 (65.5) – லக்ஷின ரொட்ரிகோ 69, நிஷான் பீரிஸ் 56, சஹான் ஆராச்சிகே 24, திஷான் சந்தருவன் 4/38

தென் மாகாணம் (இரண்டாவது  இன்னிங்ஸ்) – 111 (39) – சஜித் சங்கல்ப 23*, நிஷான் பீரிஸ் 5/48

மேல் மாகாணம் வடக்கு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 59/0 (19)

போட்டி முடிவு – மேல் மாகாண வடக்கு அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி

மத்திய மாகாணம் எதிர் வடமத்திய மாகாணம்

அதிக ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த இந்தப்போட்டியில், வடமத்திய மாகாண அணி 240 ஓட்டங்களுடன் போட்டியின் இரண்டாம் நாளான இன்று தமது முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது.

வடமத்திய மாகாண அணியின் துடுப்பாட்டத்தில், அஜித் ராஜபக்ச (66) மற்றும் தினேத் ஹேவதந்திரி (56) ஆகியோர் அரைச்சதம் பெற்றிருந்தனர். அத்தோடு, மத்திய மாகாண அணி சார்பாக சரித் சுதராக 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சில் நிமேஷ குணசிங்க பெற்றசதத்தின் துணையோடு வலுப்பெற்றிருந்த மத்திய மாகாண அணியினர், தமது இரண்டாவது இன்னிங்சில், 213 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டனர்.

மத்திய மாகாணத்திற்காக இம்முறை, ரவீன் சேயர் சதம் (107) கடந்து சிறப்பு துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தார். ஹேலகமல் நாணயக்காரவினால் மூன்று விக்கெட்டுகள் வட மாகாண அணி சார்பாக கைப்பற்றப்பட்டிருந்ததது.

மத்திய மாகாண அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் சார்பாக வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 306 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடியிருந்த வடமத்திய மாகாண அணி, போட்டியின் ஆட்ட நேர நிறைவின் போது, 9 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்ததால் போட்டி சமநிலை அடைந்தது.

இந்த இன்னிங்சிற்காக சிறப்பு பந்துவீச்சினை வெளிக்காட்டியிருந்த மொஹமட் சிராஸ் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தோடு, சரித் சுதாரக, வனிந்து ஹஸரங்க மற்றும் லக்‌ஷான் பெர்னாந்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 332/7d (59) – நிமேஷ குணசிங்க 113, வனிந்து ஹஸரங்க 54, திலான் ஜயலத் 52, தனுக்க தாபரே 38, ஷாலுக்க சில்வா 2/77, சந்தீப்ப செவ்மிந்த 2/52

வடமத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 240 (63.3) – அஜித் ராஜபக்ச 66, தினேத்ஹேவதந்திரி 56, சரித் சுதாரக 4/37

மத்திய மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 213/9d (39.3) – ரவின் சேயர் 107, ஹெலக்மல் நாணயக்கார 3/9,  கசுன் வீரங்க 2/41, ஜகத் ராஜபக்ச 2/60

வடமத்திய மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 127/9 (42) – தினேத் ஹேவதந்திரி 27, மொஹமட் சிராஸ் 3/26, சரித் சுதராக 2/12, வனிந்து ஹஸரங்க 2/40

போட்டி முடிவு – போட்டி சமநிலை முடிவடைந்தது. மத்திய மாகாணம் முதல் இன்னிங்ஸ் வெற்றி


ஊவா மாகாணம் எதிர் மேல் மாகாணம் தெற்கு

பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றிருந்த இந்தப் போட்டியில் இரண்டாம் நாளில், மேல் மாகாண தெற்கு அணியினர் முதல் நாளில் 53 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களுடன்  காணப்பட்டிருந்தவாறு தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டனர்.

இதனால், இன்றைய நாள் ஊவா மாகாண அணியினரின் இரண்டாம் இன்னிங்சோடு ஆரம்பமானது. முதல் இன்னிங்சில் 94 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற ஊவா மாகாண அணிக்கு, இரண்டாம் இன்னிங்சில்  லிசுல லக்‌ஷான் அரைச்சதம் கடந்து 81 ஓட்டங்களுடன் வலுவூட்டியிருந்தார். எனினும், சந்தகன் பத்திரன பந்துவீச்சில் மிரட்ட 213 ஓட்டங்களுடன் சுருண்ட ஊவா மாகாண அணியானது 35 ஓட்டங்களை மாத்திரமே எதிரணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயயித்தது.

இந்த இலகு வெற்றியிலக்கினை 6.2 ஓவர்களில் 35 ஓட்டங்களுடன் எந்தவித விக்கெட்டுகளையும் பறிகொடுக்காது பெற்ற மேல் மாகாண தெற்கு அணி  இத்தொடரில் தமது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து கொண்டது.

மேல் மாகாண அணியின் பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்டிருந்த சந்தகன் பத்திரன 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஊவா மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 94 (44.4) – நவிந்து நிர்மல் 20,  ஹஷான் விமர்ஷக 20*, சந்தகன் பத்திரன 4/29, இலைன் ஹெட்டியராச்சி 2/13, மிஷென் சில்வா 2/17

மேல் மாகாணம் தெற்கு (முதல் இன்னிங்ஸ்) – 273/8d (53) – மலிந்து மதுரங்க 50, மொஹமட் ஜலீல் 46, பிரமோத் மதுவந்த 48*, அஞ்சுல பிரசன்னாஜித் 3/29

ஊவா மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 213 (73.4) – லிசுல லக்‌ஷான் 81, யெஷான் விக்கிரமாரச்சி 33, சந்தகன் பத்திரன 5/81, பிரமோத் மதுவந்த 3/39

மேல் மாகாணம் தெற்கு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 35/0 (6.2) – மின்ஹாஜ் ஜலீல் 25*

போட்டி முடிவு – மேல் மாகாண தெற்கு அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி