இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் சிங்கர் நிறுவனத்தின் அனுசரனையோடு நடாத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில், அனுலா வித்தியாலத்தினை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இந்த வருடத்திற்கான சம்பியன் பட்டத்தை தேவபதிராஜ மகளிர் கல்லூரி அணி சுவீகரித்துக்கொண்டது.

இத்தொடரில் முன்னர் இடம்பெற்ற போட்டிகளின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில், நுகேகொடை அனுலா வித்தியாலயமும், ரத்கம தேவபதிராஜ கல்லூரியும் கிணத்திற்கான இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தன.

வெஸ்லி கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய அணிக்கு 30 ஓவர்களை கொண்ட இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நடப்புச் சம்பியன் தேவபதிராஜ கல்லூரியின் அணித்தலைவி சத்யா சந்திப்பனி, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அனுலா வித்தியாலயத்திற்கு வழங்கியிருந்தார்.

Photos: U19 Singer Sri Lanka Schools Girls Cricket Tournament 2016/17 | Final

Photos of the U19 Singer Sri Lanka Schools Girls Cricket Tournament 2016/17 | Final

அதன்படி களமிறங்கிய அனுலா கல்லூரி, எதிரணியின் கடினமான பந்து வீச்சு காரணமாக மந்த கதியிலேயே ஓட்டங்களைக் குவித்தது. இறுதியில் அவ்வணி 30 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 109 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அணிக்காக அதிகபட்சமாக ஜனதி அனலி ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு, பந்து வீச்சில் தெலிசியா சத்துரங்கி 18 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்தார்.

பின்னர், இலகு வெற்றி இலக்கான 110 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தேவபதிராஜ கல்லூரி அணி, 18.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கினை கடந்து போட்டியில் வெற்றி பெற்றது.

எனவே, சென்ற வருடம் போன்று இம்முறையும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மகளிர் அணிகளின் சம்பியன் பட்டத்தினை அவ்வணி கைப்பற்றியுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

அனுலா வித்தியாலயம்: 109/5 (30) ஜனதி அனலி 40*, அமாஷ தில்ஷானி 27, தெலிசியா சத்துரங்கி 2/18

தேவபதிராஜ கல்லூரி: 110/2 (18.2) பரமி மஹின்சல 27, கவீஷா தில்ஹாரி 23*

போட்டி முடிவு – தேவபதிராஜ கல்லூரி 8 விக்கெட்டுக்களால் வெற்றி


மூன்றாவது இடத்திற்கான PLAYOFF போட்டி

அதே மைதானத்தில் நடந்து முடிந்த இத்தொடரின் மூன்றாவது இடத்திற்கான அணியினை தெரிவு செய்யும் போட்டியில், கண்டி (கட்டுகஸ்தோட்டை) புனித அந்தோனியர் மகளிர் கல்லூரியும், ஒக்கம்பிட்டிய விஜயபாகு மகா வித்தியாலய அணியும் மோதிக்கொண்டன.

T-20 போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விஜயபாகு மகா வித்தியாலய அணியின் தலைவி இஷன்க மதுஷானி, முதலில் புனித அந்தோனியர் கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதனையடுத்து தனது ஆட்டத்தினை ஆரம்பித்த அந்தோனியர் கல்லூரி அணி, அணித்தலைவி சந்துனி நிஷன்சல ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச் சதத்துடன் (55) ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 112 ஓட்டங்களை 20 ஓவர்கள் நிறைவில் பெற்றுக்கொண்டது.

பின்னர், இந்த வெற்றியலக்கினை அடைவதற்கு போராடிய விஜயபாகு மகா வித்தியாலய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 110 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்று மேலதிக இரண்டு ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.

துடுப்பாட்டத்தில் இறுதி வரை போராடிய விஜயபாகு கல்லூரி அணியின் தலைவி ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும், பந்து வீச்சில் சத்ய தசநாயக்க இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியர் மகளிர் கல்லூரி: 112/1 (20) சந்துனி நிஷன்சல 55*, சச்சினி ஜயரத்ன 27*

விஜயபாகு மகா வித்தியாலயம்: 110/7 (20) இஷன்க மதுசானி 24*, சத்ய தஷநாயக்க 2/25

போட்டி முடிவு புனித அந்தோனியர் மகளிர் கல்லூரி 2 ஓட்டங்களால் வெற்றி