சமநிலையில் முடிந்த இளைஞர் டெஸ்ட் போட்டித்தொடர்

234
Sri Lanka U19s vs South Africa U19s

பல்லேகெல்ல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி மற்றும் தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இளைஞர் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட சுற்றுப் போட்டித்தொடரும் சமநிலை கண்டது.

நேற்று இரண்டாவது நாளின் முடிவில் இலங்கை அணி 33 ஓட்டங்கள் பின்தங்கி இருந்த வேளையில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இன்று ஆரம்பித்த மூன்றாவது நாள் ஆட்டத்தின் போதும் இலங்கை அணி வீரர்கள் பெரிதாக சோபிக்க முடியாமல் போனது. தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் அணி இறுதி நாளில் 81 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரிகார்டோ வன்கொன்சாலஸ் மற்றும் ஜோஷுவா வன் ஹீர்டன் இருவரும் ஆரம்ப இணைப்பாட்டமாக 81 ஓட்டங்களைப் பெற்று அணியை பலப்படுத்தினர். முதல் இன்னிங்ஸில் சிறப்பாகப் பந்து வீசிய பிரவீன் ஜெயவிக்ரம ரிகார்டோ வன்கொன்சாலஸ்ஸை 48 ஓட்டங்கள்  பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழக்கச் செய்தார். மேலும் சிறப்பாகப் பந்து வீசிய பிரவீன் ஜெஸ் கிறிஸ்டியன்சனின் விக்கட்டை அவர் 18 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் பதம் பார்த்தார்.

ஜோஷுவா வன் ஹீர்டன் சுற்றுப் போட்டித்தொடரின் ஐந்தாவது நாற்பதுக்கு மேற்பட்ட ஓட்டங்களை பதிவு செய்தார். 188 பந்துகளை முகம் கொடுத்து 78 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் அவர் ஜெஹான் டேனியலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். புனித செபாஸ்டியன் கல்லூரியைச் சேர்ந்த பிரவீன் ஜெயவிக்ரம அவரது போட்டியின் ஆறாவது விக்கட்டாக ரெய்னார்ட் வன் டொன்டரின் விக்கட்டைக் கைப்பற்றினார்.

போட்டியின் ஆரம்பத்தில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் அணி 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 295 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி 262 ஓட்டங்களுக்கு தனது அனைத்து விக்கட்டுகளையும் பறிகொடுத்தது.

இப் போட்டிக்கு முன்பதாக சரவணமுத்து ஓவல் மைதானம் மற்றும் வெலகெதர மைதானங்களில் நடைபெற்ற இரண்டு போட்டிகளும் சமநிலையில் முடிவுற்றன.

இரு அணிகளும் கொழும்பில் நடக்கும் மூன்று போட்டிகள் கொண்ட இளைஞர் ஒரு நாள் சுற்றுப் போட்டித்தொடரில் சந்திக்கவுள்ளன. போட்டித்தொடரின் முதல் போட்டி ஜூலை மாதம் 9ம் திகதி சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நடைபெறும்.

தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் – 84.1 ஓவர்களில் 295/8 ஓட்டங்கள். ரிகார்டோ வன்கொன்சாலஸ் 56, ஜோஷுவா வன் ஹீர்டன் 22, ரெய்னார்ட் வன் டொன்டர் 48, வியான் முல்டர் 66, ஜெஸ் கிறிஸ்டியன்சன் 67, ஜெஹான் டேனியல் 3/53, பிரவீன் ஜெயவிக்ரம 3/95.

இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் – 94 ஓவர்களில் 262. அவிஷ்க பெர்னாண்டோ 55, ஹசித போயாகொட 79*, அஷேன் பண்டார 43, விஷாட் ரந்திக 24, வியான் முல்டர் 4/28, வில்லியம் செந்தின் 3/59, ஜேட் டி க்ளெர்க் 2/69.

தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் (2வது இன்னிங்ஸ்) – 81 ஓவர்களில் 201/4. ஜோஷுவாவன்ஹீர்டன் 78, ரிகார்டோவன்கொன்சாலஸ் 48, வியான்முல்டர் 21*, பிரவீன்ஜெயவிக்ரம 3/50.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்