இரண்டு ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட சந்தருவன் : ஜோசப் வாஸ் வலுவான நிலையில்

299
U19 Schools Cricket Roundup 02 - 09th of Jan

2016/17 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இன்று பிரிவு 1க்கான (டிவிசன் 1) இரண்டு நாட்களை கொண்ட ஏழு போட்டிகள் நடைபெற்றன. 

புனித பேதுரு கல்லூரி எதிர் கண்டி தர்மராஜ கல்லூரி

முதல் சுற்றுப் போட்டிகளில் A குழுவில் இடம் பெற்றிருந்த இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மராஜ கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி முதல் இன்னிங்சுக்காக 66.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து  168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய கிஹான் விதாரண  மற்றும் நிவந்த ஹேரத் முறையே 45 மற்றும் 43 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். அதேநேரம் புனித பேதுரு கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய முஹம்மட் அமீன் 58 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி, முதலாம் நாள் ஆட்ட நிறைவின் போது 29 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 79 ஓட்டங்களை பெற்றுள்ளது. சந்துஷ் குணதிலக்க 35 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்துள்ளார்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) : 168 (66.3) – கிஹான் விதாரண 45, நிவந்த ஹேரத் 43, முஹம்மட் அமீன் 6/58, சத்துர ஒபேசேகர 4/51

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) :  79/2 (29) சந்துஷ் குணதிலக்க 35, சுலக்சன பெர்னாண்டோ 27 *


புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் கேகாலை மரியார் கல்லூரி

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித ஜோசப் வாஸ் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, 83.4 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 31௦ ஓட்டங்களை பெற்றிருந்தபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அவ்வணி சார்பாக நேர்த்தியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சந்தருவன் பெர்னாண்டோ 98 ஓட்டங்களை பெற்றிருந்தபோது துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார். எனினும், அவருடன் துடுப்பாடிய யோஹான் பீரிஸ் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை விளாசினார்.

மரியார் கல்லூரி சார்பாக கயான் உடகே 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய போதிலும் ஏனைய பந்து வீச்சாளர்களினால் எவ்விதமான அழுத்தத்தினையும் பிரயோகிக்க முடியவில்லை.

அதனை தொடர்ந்து களமிறங்கிய மரியார் கல்லூரி அணி எவ்வித விக்கெட் இழப்புமின்றி 9 ஓவர்களுக்கு 32 ஓட்டங்களை இன்றைய நாள் ஆட்ட நிறைவின் போது பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் வாஸ் கல்லூரி: 310 / 8d (83.4) – சந்தருவன் பெர்னாண்டோ 98, யோகன் பீரிஸ் 101*, கயான் உடகே 3/63

கேகாலை புனித மரியார் கல்லூரி: 32/0 (9)


மகிந்த கல்லூரி (காலி) எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில்,  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மகிந்த கல்லூரி முதல் இன்னிங்சுக்காக 97 ஓவர்களில்  9 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்களை இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது பெற்றிருந்தது. அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய வினுர ஹிரஞ்சித் 58 ஓட்டங்களைக் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்திருந்தார்.

அதே நேரம் சிறப்பாக பந்து வீசிய மஹேஷ தீக்க்ஷன 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி (காலி) : 226/9 (97) – வினுர ஹிரஞ்சித் 58, கவிந்து எதிரிவீர  42, ரிஷான் கவிந்த 28, மஹேஷ தீக்க்ஷன  3/54, கவீஷ ஜயதிலக்க 2/45

நாளை இப்போட்டிகளின் இறுதி நாளாகும்