புனித சில்வஸ்டர், மலியதேவ கல்லூரி அணிகளுக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

507
U19 Schools Cricket

தற்பொழுது விறுவிறுப்பாக இடம்பெற்றுக்கொண்டுள்ள பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிரிக்கெட் போட்டித்தொடரில் இன்று நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளும் சமநிலையில் நிறைவுற்றன. இன்று ஆரம்பமாகிய மற்றைய போட்டிகளில் முதலாம் நாள் ஆட்ட நிறைவின் போது, தோமியர் மற்றும் திரித்துவ கல்லூரி அணிகள் வலுப்பெற்றுள்ளன

மொரட்டுவ வித்தியாலயம் எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி

போட்டியின் இன்றைய இரண்டாவது நாளில் 4 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றிருந்தவாறு ஆட்டத்தை  தொடர்ந்த புனித சில்வெஸ்டர் கல்லூரி அணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களினை பெற்றிருந்த போது தங்களது முதல் இன்னிங்சிற்குரிய ஆட்டத்தினை நிறுத்துவதாக அறிவித்தது.

நிம்சர அபரகல்ல 62 ஓட்டங்களினை சில்வெஸ்டர் கல்லூரிக்காக நிதானமாக ஆடி பெற்றுக்கொடுத்திருந்தார். சில்வெஸ்டர் கல்லூரியில் பறிபோன 8 விக்கெட்டுக்களில் 5 விக்கெட்டுக்களை செஹாத ஷொய்ஸா பதம் பார்த்திருந்தார்.  

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த மொரட்டுவ கல்லூரி அணி, நிதனமாக ஆடி 5 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களினை குவித்திருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

இரண்டாவது இன்னிங்சில் மொரட்டுவ கல்லூரிக்காக அதிகப்படியாக நிஷான் பெர்னாந்து 43 ஓட்டங்களினை சேர்த்திருந்த வேளையில், ஜனகாந்த ராஜபக்ஷ 19 ஓட்டங்களினை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை சில்வெஸ்டர் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

நேற்று மொரட்டுவ கல்லூரியில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், மொரட்டுவ கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சில் 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சுருண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மொரட்டுவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 88 (35.5) – துலக்ஷ பீரிஸ் 24*, துஷித் டி சொய்ஸா 4/25, கனிஷ்க ஜயசேகர 3/21

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 133/4 (57), கவிந்து பெரேரா 45, சஷிக ரேமொண்ட்  42,  செஹாத ஷொய்ஸா 3/20

புனித சில்வெஸ்டர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 230/8d (86), நிம்சர அபரகல 62, கவிந்து பெரேரா 45, சஷிக ரெமோன்ட் 42, செஹாத ஷொய்ஸா 5/55

மொரட்டுவ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 166/5 (68), நிஷான் பெர்னாந்து 43, செஹாத ஷொய்ஸா 31, ஜனகான்த ராஜபக்ஷ 3/19

போட்டி முடிவுபோட்டி சமநிலையில் நிறைவுற்றது. புனித சில்வெஸ்டர் கல்லூரி அணிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


மஹிந்த கல்லூரி எதிர் குருநாகல் மலியதேவ கல்லூரி

நேற்று குருநாகல் மலியதேவ கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் மோதிய இரண்டு அணிகளும், மோசமான துடுப்பாட்டம் காரணமாக நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போதே தமது முதல் இன்னிங்ஸ்களை (மஹிந்த கல்லூரி – 82,  மலியதேவ கல்லூரி – 88) முடித்துக்கொண்டிருந்தன.

இதனையடுத்து, ஒரு விக்கெட்டினை இழந்து 24 ஓட்டங்களுடன் இன்றைய ஆட்டத்தினை தொடர்ந்த மஹிந்த கல்லூரி அணி, 79.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களினை தமது இரண்டாவது இன்னிங்சிற்காக பெற்றுக்கொண்டது. மற்றைய வீரர்கள் எவரும் 30 ஓட்டங்களையேனும் தாண்டாத நிலையில், கவிந்து எதிரிவீர 35 ஓட்டங்களினை இந்த இன்னிங்சில் பெற்றார். பந்து வீச்சில் மனேல்க தர்மசேன மலியதேவ கல்லூரிக்காக 3 விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார்.

பின்னர், 187 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி, 5 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களினை பெற்றிருந்த போது இன்றைய இறுதி நாள் ஆட்டத்தின் நேரம் முடிவுக்கு வந்தது.

இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. துடுப்பாட்டத்தில், முதித பிரேமதாச 42 ஓட்டங்களினை மலியதேவ கல்லூரிக்காக பெற்றுக்கொடுத்த வேளையில் நிப்புன் மலிங்க, குஷான் ரன்தீப ஆகியோர் மஹிந்த கல்லூரிக்காக தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 82 (41.2), மனேல்க தர்மதாச 3/10, தினஞ்சய பிரேமரத்ன 3/26, கவீன் பண்டார 3/11

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 88 (33.1), கவிந்து எதிரிவீர 4/22, கெவின் கொத்திகொட 3/07

மஹிந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 192 (79.3), கவிந்து எதிரிவீர 35, நவோத் பரணவிதான 29, கெவின் கொத்திகொட 27, மனேல்க தர்மதாச 3/29, தமித்த சில்வா 3/54

மலியதேவ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 124/5 (32), முதித பிரேமதாச 42, நிப்புன் மலிங்க 2/16, குஷான் ரன்தீப 2/25

போட்டி முடிவுபோட்டி சமநிலையில் நிறைவுற்றது. மலியதேவ கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித தோமியர் கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

இன்று SSC மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நாலந்த கல்லூரியின் அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை புனித தோமியர் கல்லூரிக்கே வழங்கினார்.

இதன்படி, துடுப்பெடுத்தாடிய அவ்வணி, நன்றாக ஆடி அரைச்சதம் கடந்திருந்த ரொமேஷ் நல்லப்பெரும(73), தினுர குணவர்தன(63) ஆகியோரின் ஓட்ட உதவியுடன் தமது முதல் இன்னிங்சிற்காக, 74 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 263 ஓட்டங்களினை பெற்றிருந்தது.

பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்டிருந்த நாலந்த கல்லூரியின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் லக்ஷித ரசன்ஜன 76 ஓட்டங்களை கொடுத்து தோமியர் கல்லூரியின் 6 விக்கெட்டுக்களை தன்வசமாக்கியிருந்தார்.

பின்னர், துடுப்பெடுத்தாடிய நாலந்த கல்லூரி இன்றைய ஆட்ட நிறைவு வரை, 3 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களினை பெற்றிருந்தது. லக்ஷித ரசன்ஜன 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி: 263 (74), ரொமேஷ் நல்லப்பெரும 73, தினுர குணவர்த்தன 63, மந்தில விஜேரத்தன 31, லக்ஷித ரசன்ஜன 6/76

நாலந்த கல்லூரி: 76/3 (24), லக்ஷித ரசன்ஜன 47*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.


றிச்மன்ட் கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி, கண்டி

காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருக்கும் குழு A இற்கான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற றிச்மண்ட் கல்லூரி அணியின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, களமிறங்கிய றிச்மண்ட் கல்லூரி அணியில்  சமிகர ஹேகவகே (57), அவிந்து தீக்ஷன (56) ஆகிய வீரர்கள் அரைச்சதம் கடந்தனர். இவர்களோடு மற்றைய வீரர்களும் அணியின் ஓட்டங்களை அதிகரிப்பதற்கு ஓரளவு பங்களிப்பினை வழங்க, அவ்வணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில், விமுக்தி நெத்துமல் 5 விக்கெட்டுக்களை திரித்துவ கல்லூரியின் சார்பாக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய திரித்துவ கல்லூரி அணி, ஹாலித்த ஜயசூரிய பெற்ற  39 ஓட்டங்களின் துணையுடன் இன்றைய ஆட்ட நிறைவின் போது ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 92 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

றிச்மண்ட் கல்லூரி: 223 (67.5), சமிகர ஹேவகே 57, அவிந்து தீக்ஷன 56, விமுக்தி நெத்துமல் 5/55, சனோகீத் சண்முகநாதன் 2/53

திரித்துவ கல்லூரி: 92/1 (25), ஹசிந்த ஜயசூரிய 39, கலன டி ஷொய்ஸா 36*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்