பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரில் ஆறு போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன. இதில் ஒரு போட்டியில் பந்து வீச்சாளர்களை மதிநுட்பமாக பயன்படுத்திய செபஸ்டியன் கல்லூரி அணி, 62 ஓட்டங்களால் டி மெசனொட் கல்லூரியை வீழ்த்தியுள்ளதுடன் ஏனைய ஐந்து போட்டிகளும் சமநிலையில் நிறைவுற்றுள்ளன.

புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி

கந்தானை டி மெசனொட் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பித்த இப்போட்டியில், முதல் நாளின் ஆட்ட நேர நிறைவின்போது, தமது இரண்டாவது இன்னிங்சினை ஏற்கனவே ஆரம்பித்த மொரட்டுவ செபஸ்டியன் கல்லூரி அணியினர் 74 ஓட்டங்களினை 3 விக்கெட்டுக்களை இழந்து பெற்றிருந்தனர்.

பின்னர், இன்றைய ஆட்டத்தினை  தொடர்ந்த அவர்கள், 47.5 ஓவர்களில் 194 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து இரண்டாவது இன்னிங்சினை நிறைவு செய்துகொண்டனர். செபஸ்டியன் கல்லூரிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்த தருஷ பெர்னாந்து 60 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த தேஷான் பெர்னாந்து அபாரமாக செயற்பட்டு 28 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை டி மெசனொட் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து, வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 213 ஓட்டங்களினை பெறுவதற்கு ஆடுகளம் விரைந்து, தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த டி மெசனொட் கல்லூரி அணி , ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய போதும் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்ததன் காரணமாக, இந்த இன்னிங்சில் 151 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இதனால் தமது கடைசிப் போட்டியில் ஜோசப் கல்லூரியிடம் தோல்வியினை சந்தித்திருந்த புனித செபஸ்டியன் கல்லூரி 62 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுக்கொண்டு இப்போட்டியுடன் புத்துணர்ச்சி அடைந்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில், டி மெசனொட் கல்லூரிக்காக அதிகபட்சமாக, நிஷேல பெரேரா மாத்திரம் 35 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டார். செபஸ்டியன் கல்லூரியின் வெற்றிக்கு வித்திட்டிருந்த வினுஜ ரணசிங்க 55 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 139 (32.2), தஷிக் பெரேரா 60*, அஷர் வர்ணகுலசூரிய 32, தினேத் பெர்னாந்து 6/20

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 120 (31), மிதில கீத் 39*, நாமுஷ்க டிசில்வா 8/42

புனித செபஸ்டியன் கல்லலூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 194 (47.5), தருஷ பெர்னாந்து 64, நுவனிந்து பெர்னாந்து 38, தேஷான் பெர்னாந்து 6/28

டி மெசனொட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 151 (35.2), நிஷேல பெரேரா 35, ரோஷித செனவிரத்ன 27, வினுஜ ரணசிங்க 6/55

போட்டி முடிவு – புனித செபஸ்டியன் கல்லூரி அணி 62 ஓட்டங்களினால் வெற்றி


ஆனந்த கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

நேற்று ஆனந்த கல்லூரி மைதானத்தில் ஆரம்பாகியிருந்த இப்போட்டியில், இன்றைய நாளில்  5 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றிருந்தவாறு இன்றைய ஆட்டத்தினை தொடர்ந்த ஆனந்த கல்லூரி அணி, 58.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களினை பெற்றிருந்த போது தமது முதல் இன்னிங்சினை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

துடுப்பாட்டத்தில் நேற்று 73 ஓட்டங்களை கவிந்து கிம்ஹான பெற்ற வேளையில், இன்று கவிஷ்க அஞ்சுல 52 ஓட்டங்களினை ஆனந்த கல்லூரிக்காக பெற்றுக்கொடுத்தார். நேற்று பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த முஹம்மட் அமீன் இன்று புனித பேதுரு கல்லூரிக்காக ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றிய நிலையில், ரவிந்து சில்வா, சதுர ஒபேசேகர ஆகியோரும் அவர்களது கல்லூரிக்காக தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், 27 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த புனித பேதுரு கல்லூரி அணியினர், சந்துஷ் குணதிலக்க பெற்றுக்கொண்ட 60 ஓட்டங்களின் துணையுடன், 4 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களினை பெற்றிருந்த போது, இன்றைய போட்டியின் ஆட்டநேரம் நிறைவிற்கு வர, இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

நேற்றைய நாளில் தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடியிருந்த புனித பேதுரு கல்லூரி அணி, 182 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 182 (61.3), சலித் பெர்னாந்து 77, ரன்மித் ஜயசேன 45, சுப்புன் வரகொட 3/28, திலிப ஜயலத் 3/50

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 209/9d (58.1), கவிந்து கிம்ஹான 73, கவிஷ்க அஞ்சுல 52, முஹம்மட் அமீன் 4/58, ரவிந்து சில்வா 2/46, சத்துர ஒபயசேகர 2/67

புனித பேதுரு கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 194/4 (69), சந்துஷ் குணத்திலக்க 60, அனிஷ்க பெரேரா 35

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. ஆனந்த கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி

இப்போட்டியில், 3 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களை பெற்றிருந்தவாறு தமது முதல் இன்னிங்சினை இன்று தொடர்ந்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரி அணி, துடுப்பாட்டத்தில் தடுமாறி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக  விஹான் குணசேகர 35 ஓட்டங்களினைப் பெற்றார். பந்து வீச்சில், நேற்று துடுப்பாட்டத்தில் அசத்திய திலான் நிமேஷ் 3 விக்கெட்டுக்களை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை விளையாட ஆடுகளம் நுழைந்துகொண்ட, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியினர், எதிரணி பந்து வீசசாளர் தசுன் திமாஷின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் திண்டாடினார்.

இதனால், முதல் இன்னிங்சில் 266 ஓட்டங்கள் வரை பெற்றிருந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி, இந்த இன்னிங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களுடன் தமது இரண்டாவது இன்னிங்சினை நிறுத்தியது. அவ்வணிக்காக, இந்த இன்னிங்சில் ஏனைய வீரர்கள் 30 ஓட்டங்களுக்கும் குறைவாக ஆட்டமிழந்திருந்த வேளையில் சனோஜ் தர்சிக்க மாத்திரம் ஒரளவு போராடி 31 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்து வீச்சில் டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் தசுன் திமாஷ வெறும் 20 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருந்தார்

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 205 ஓட்டங்களினை பெற பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி அணி 94 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

இதனால் இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பந்து வீச்சில் திலான் நிமேஷ், சந்தீப்ப கஃமல், சவிந்து சஷங்க ஆகியோர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிக்காக தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 266/9d (60.4), திலான் நிமேஷ்  111, அவிந்து கனேஷ் 48, திலங்க மதுரங்க 42, தொரின் பிட்டிகல 3/43, முதித லக்ஷன் 3/79

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 166 (54.4), விஹான் குணசேகர 35, மெத்சித் ஜயமன்ன 29, திலான் நிமேஷ் 3/56

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 106/9d (31.1), சனோஜ் தர்சிக்க 31, தசுன் திமாஷ 5/20

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 94/7 (35), கலான ஹெட்டியாரச்சி 20*, சந்தீப்ப கஃமல் 2/07, சவிந்து சஷங்க 2/20, திலான் நிமேஷ் 2/40

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி


றோயல் கல்லூரி எதிர் புனித அந்தோனியர் கல்லூரி

இன்றைய இரண்டாவது நாளில் 95 ஓட்டங்களிற்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த கண்டி அந்தோனியர் கல்லூரி, சுனேர ஜயசிங்க விளாசிய 86 ஓட்டங்களுடனும், தீக்ஷ குனசிங்க பெற்றுக்கொண்ட 60 ஓட்டங்களுடனும் தமது முதல் இன்னிங்சுக்காக, 74.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில், றோயல் கல்லூரிக்காக இலங்கை கனிஷ்ட அணிக்காக விளையாடும் வலது கை சுழற்பந்து வீச்சாளர், ஹிமேஷ் ராமநாயக்க 31 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், 51 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த றோயல் கல்லூரி அணி, இன்றைய ஆட்ட நேர நிறைவு வரை பசிந்து சூரியபவ அரைச்சதம் கடந்து பெற்றுக்கொண்ட 70 ஓட்டங்கள் மற்றும் கவிந்து மதுரங்க பெற்ற அரைச்சதம் (54) ஆகியவற்றின் துணையுடன், 56 ஓவர்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களினை பெற்றிருந்தது.

இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. பந்து வீச்சில் விராஜித ஜயசிங்க, சந்தருவன் தர்மரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

நேற்று கண்டி அந்தோனியர் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் துடுப்பாட்டத்தில் தளம்பலிணை வெளிப்படுத்தியிருந்த றோயல் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 190 ஓட்டங்களினை குவித்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 190(56.3), கவிந்து மதுரசிங்க 32, பசிந்து சூரியபண்டார 30, தேவிந்து சேனாரத்ன 33, சந்தருவன் தர்மரத்ன 4/57, விராஜித ஜயசிங்க 3/35

புனித அந்தோனியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 241 (74.2), சுனேர ஜயசிங்க 86, தீக்ஷ குனசிங்க 60, ஹிமேஷ் ராமநாயக்க 5/31, மனுல பெரேரா 3/51

றோயல் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 237/5 (56), பசிந்து சூரிய பண்டார 70, கவிந்து மதரசிங்க 54, ஹெலித்த விதனாகே 48, விராஜித ஜயசிங்க 2/33

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. புனித அந்தோனியர் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித ஜோசப் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி

இப்போட்டியில் 57 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்தவாறு வெஸ்லி கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்தது. இன்றைய துடுப்பாட்டத்தில் தனியொருவராக இருந்து முழுத் திறமையினையும் வெளிப்படுத்தியிருந்த திலின பெரேரா சதம் கடந்து 160 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார்.

அவ்வணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 324 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது. பந்து வீச்சில், புனித ஜோசப் கல்லூரியின் லக்ஷன் கமகே, 5 விக்கெட்டுக்களையும் ஜோசப் கல்லூரியின் தலைவர் ஹரீன் கூரே 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

பின்னர், முதலாம் இன்னிங்சில் 268 ஓட்டங்களினை பெற்றிருந்த ஜோசப் கல்லூரி அணி) தமது இரண்டாவது இன்னிங்சினை 56 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஆரம்பித்தது.

அவ்வணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்து 48 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை இழந்து, வெஸ்லி  கல்லூரியின் பக்கம் போட்டி சாய்ந்திருந்தபோது இன்றைய போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது.

இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. இரண்டாவது இன்னிங்சின் பந்து  வீச்சில் ஜோசப் கல்லூரியை நிலைகுலையச் செய்திருந்த ருச்சிக்க தங்கல 3 விக்கெட்டுக்களையும், சகுந்த லியனகே 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்): 268/9d (72.5), ஜெஹான் பெர்னாந்துப்பிள்ளை 60, பஹன் பெரேரா 51, நிப்புன் சுமனசிங்க 56, தினேத் மதுரவெல 42, மொவின் சுபசிங்க 3/55, சகுந்த லியனகே 3/67

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 324 (102.2), திலின பெரேரா 160, மொவின் சுபசிங்க 38, அனுஜ அக்மிமன 37, லக்ஷன் கமகே 5/93, ஹரீன் கூரே 3/61

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 48/6 (14), நிப்புன் சுமனசிங்க 25*, ருச்சிக்க தங்கல 3/15, சகுந்த லியனகே 2/15

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. வெஸ்லி கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி எதிர் புனித ஏன்ஸ் கல்லூரி

மூன்று விக்கெட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சினை போட்டியின் இரண்டாவது நாளான இன்று தொடர்ந்த குருநாகல் புனித ஏன்ஸ் கல்லூரி அணியினர், 38.5 ஓவர்களில் 132 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று சுருண்டு கொண்டனர்.

மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த அவ்வணியில் ஒரு வீரர் கூட முப்பது ஓட்டங்களையேனும் தாண்டவில்லை. ரன்தீர ரணசிங்க மாத்திரம் 29 ஓட்டங்களினை ஓரளவு போராடி பெற்றிருந்தார். பந்து வீச்சில், இன்று சிறப்பாக செயற்பட்ட விஷால் சில்வா, 35 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை புனித அந்தோனியர் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், 44 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தவாறு தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த புனித அந்தோனியர் கல்லூரி அணியினர், 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் நிறைவடைந்தது.

இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. போட்டி நிறைவடையும் போது 33 ஓட்டங்களுடன் அந்தோனியர் கல்லூரியின் யசிந்து ரவீஷ களத்தில் நின்றிருந்தார். பந்து வீச்சில் கவிந்து எதிரிசிங்க 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

முன்னதாக ஆடியிருந்த புனித அந்தோனியர் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 176 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியர் கல்லூரி முதல் இன்னிங்ஸ்): 176 (75.4), அவிஷ்க தரிந்து 63, ஜோயெல் பின்டோ 39, பியுமல் சிங்கவன்ஷ 4/47, புபுது கனேகம 4/65

புனித ஏன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 132 (38.5), ரண்தீர ரணசிங்க  29, விஷால் சில்வா 5/35

புனித அந்தோனியர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 130/7 (38.5), யசிந்து ரவீஷ 33*, கவிந்து ரணசிங்க 4/33

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. புனித அந்தோனியர் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி