தீக்ஷன் குணசிங்கவின் சதத்தோடு வலுவடைந்திருக்கும் அந்தோனியார் கல்லூரி

163

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (12) மூன்று போட்டிகள் முடிவடைந்தது.

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

உயனவத்த மைதானத்தில் நிறைவடைந்த இப்போட்டியில் புனித தோமியர் கல்லூரி அணி 6 விக்கெட்டுக்களால் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியை வீழ்த்தியது.

போட்டியின் முதல் நாள் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்த காரணத்தினால் முதல் நாளிலேயே பெனடிக்ட் கல்லூரி (101), தோமியர் கல்லூரி (131) ஆகியவை தத்தமது முதல் இன்னிங்சுகளை நிறைவு செய்திருந்தன. பின்னர் இரண்டாம் இன்னிங்சில் மீண்டும் துடுப்பாடிய பெனடிக்ட் கல்லூரி முதல் நாள் நிறைவில் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் இரண்டாம் நாளில் தமது துடுப்பாட்டத்தை தொடர்ந்த பெனடிக்ட் அணி வீரர்கள் 97 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். இதனால் 68 ஓட்டங்களே தோமியர் கல்லூரிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலகு வெற்றி இலக்கை 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து தோமியர் கல்லூரி அடைந்தது.

சச்சித் பத்திரணவின் அதிரடி சதத்தால் CCC வலுவான நிலையில்

லஹிரு தில்ஷான் மொத்தமாக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி தோமியர் கல்லூரியின் வெற்றியில் பிரதான பங்கு வகித்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 101 (35.3) – லஹிரு தில்ஷான் 3/21, தினேத் சித்தார 3/21

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 131 (48.1) – ஹிரந்த லக்ஷான் 33, ஜேசன் சார்ள்ஸ் 6/53

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 97 (42. 3) – அஷேன் சில்வா 26, றயான் செல்சிங்கர் 21, லஹிரு தில்ஷான் 4/30, சச்சிர ரஷ்மிக்க 3/26

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 69/4 (23.4)

முடிவு – புனித தோமியர் கல்லூரி 6 விக்கெட்டுகளால் வெற்றி


மஹிந்த கல்லூரி, காலி எதிர் புனித சில்வஸ்டர் கல்லூரி, கண்டி

காலி மஹிந்த கல்லூரி இந்தப் போட்டியில் கண்டி சில்வஸ்டர் கல்லூரி அணியை இன்னிங்ஸ் மற்றும் 35 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது.

மஹிந்த கல்லூரியின் சொந்த மைதானத்தில் நேற்று (11) தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பாடிய மைதானச் சொந்தக்காரர்களின் அபாரமான முதல் இன்னிங்சை (307) அடுத்து தம்முடைய முதல் இன்னிங்சில் துடுப்பாடிய சில்வஸ்டர் கல்லூரியினர், அவர்களின் முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்களையே சேர்த்தனர். எடுக்கப்பட்ட ஓட்டங்கள் போதாது என்பதனால் மீண்டும் பலோவ் ஒன் (Follow on) முறையில் துடுப்பாடிய அவர்களுக்கு 134 ஓட்டங்களையே இரண்டாம் இன்னிங்சில் சேர்க்க முடிந்தது.

இதனால் 35 ஓட்டங்களால் இன்னிங்ஸ் தோல்வியை சில்வஸ்டர் கல்லூரி தழுவியது. பசன் பெத்தன்கொட 6 விக்கெட்டுக்களை இரண்டாம் இன்னிங்சில் மஹிந்த கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 307/4d (69.4) – நவோத் பரணவிதான 104, வினுர துல்ஷார 85, ரெஷான் கவிந்த 54*, உசிந்து யெஷங்க 2/56

புனித சில்வஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 138 (64.5) – மனோகரன் பவித்ரன் 38, சுபனு ராஜபக்ஷ 3/17

புனித சில்வஸ்டர் கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 134 (75.1) – பசன் பெத்தன்கொட 6/40

முடிவு – மஹிந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 35 ஓட்டங்களால் வெற்றி


ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ எதிர் புனித மரியாள் கல்லூரி, கேகாலை

கட்டுனேரிய செபஸ்டியன் மைதானத்தில் நிறைவுற்ற இப்போட்டியில் வெண்ணப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி வீரர்கள் 29 ஓட்டங்களால் புனித மரியாள் கல்லூரியை தோற்கடித்தனர்.

ஜோசப் வாஸ் (168), புனித மரியாள் (126) ஆகிய கல்லூரிகளின் முதல் இன்னிங்சுகளை அடுத்து போட்டியின் இரண்டாம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த ஜோசப் வாஸ் கல்லூரி அணியினர் வெறும் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனால் போட்டியின் வெற்றி இலக்காக சவால் குறைந்த 139 ஓட்டங்களே மரியாள் வீரர்களுக்கு தேவைப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் ஜோசப் வாஸ் அணியின் அபாரப்பந்து வீச்சினால் 109 ஓட்டங்களை மாத்திரமே குவித்து போட்டியில் தோல்வியடைந்தனர்.

மதீஷ பெரேராவின் சதத்தின் உதவியுடன் வலுவான ஆரம்பத்தைப் பெற்றுள்ள களுத்துறை அணி

சஷான் தினேத் 5 விக்கெட்டுக்களை இந்த இன்னிங்சில் கைப்பற்றி ஜோசப் வாஸ் கல்லூரியின் வெற்றியை ஊர்ஜிதம் செய்திருந்தார்.

இஷான் வீரசூரிய மரியாள் கல்லூரிக்காக 11 விக்கெட்டுக்களை இரண்டு இன்னிங்சுகளிலும் சாய்த்த போதிலும் அவரால் தனது தரப்பை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல முடியாமல் போயிருந்தது.

போட்டியின் சுருக்கம்

ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 168 (44.5) – திலான் பிரதீப்த 41, இஷான் வீரசூரிய 6/40

புனித மரியாள் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 126 (57.2) – சஞ்சீவ ரஞ்சித் 37, அகாஷ் மலிஷ்க 5/31

புனித மரியாள் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 96 (35.2) – இஷான் வீரசூரிய 5/38

புனித மரியாள் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 109 (40.1) – சுஜித் குமார 32, சஷான் தினேத் 5/23, தனுஷ்க நிரஞ்சன 4/36

முடிவு – ஜோசப் வாஸ் கல்லூரி 29 ஓட்டங்களால் வெற்றி


தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி

கண்டி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பாடசாலை அணிகள் மோதிய இந்தப் போட்டி புனித அந்தோனியார் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய தர்மராஜ கல்லூரி வீரர்கள் எதிர்பார்த்த ஆரம்பத்தை பெறாமல் 118 ஓட்டங்களுடன் சுருண்டனர். இதற்கு முக்கிய காரணமாகிய புனித அந்தோனியார் கல்லூரி வீரர் நவோத்ய விஜேயகுமார 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர் தங்களது முதல் இன்னிங்சில் ஆடிய அந்தோனியார் கல்லூரி வீரர்களுக்கு முன்னர் பந்துவீச்சில் சிறப்பித்த நவோத்ய விஜேயகுமார அரைச்சதம் கடந்து உதவினார். இவரோடு ஆட்டமிழக்காமல் தீக்ஷன் குணசிங்க சதம் (101*) பெற்ற சதத்துடன் 230 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை புனித அந்தோனியார் கல்லூரி இழந்து காணப்பட்ட போது முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 118 (59.1) – இசுரு தயானன்த 53, தனுக ரத்நாயக 17*, நவோத்ய விஜயகுமார 6/43, ஜனிது ஹிமசர 2/07

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 230/4 (35) – தீக்ஷன் குணசிங்க 101*, நவோத்ய விஜயகுமார 72, தியோன் கவிந்து 44, உபேந்திர வர்னகுலசுரிய 2/37

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்


ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை

கொழும்பின் இரண்டு பாடசாலை அணிகள் மோதிக்கொண்ட குழு D இற்கான இந்தப் போட்டி புனித தோமியர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் இன்று தொடங்கியது.

84 ஓவர்களே வீசப்பட்ட போட்டியின் இன்றைய முதல் நாள் முடிவில் ஆனந்த கல்லூரியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்ட புனித தோமியர் கல்லூரி அணி முதல் இன்னிங்சில் மந்தில விஜேரத்ன (60*), ஷலின் டி மெல் (50) ஆகியோரின் அரைச் சதங்களுடன் 259 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்) – 259/8 (84) – மந்தில விஜேரத்ன 60*, ஷலின் டி மெல் 50, கிஷான் முனசிங்க 48, ஷமால் ஹிரூஷன் 3/24

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்


ஸாஹிரா கல்லூரி, மருதானை எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை

குழு A இற்கான இந்தப் போட்டி கந்தானை டி மெசனொட் கல்லூரியின் சொந்த மைதானத்தில் இன்றைய நாளில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற மைதான சொந்தக்காரர்கள் விருந்தாளிகளுக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை வழங்கினர். இதன் அடிப்படையில் முதலில் துடுப்பாடிய ஸாஹிரா வீரர்கள் தங்களது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தனர். அரவிந்த் ராஜேந்திரன் 48 ஓட்டங்களை அதிகபட்சமாக ஸாஹிராவுக்காக குவிக்க மறுமுனையில் மெசனொட் கல்லூரிப் பந்துவீச்சில் சாலிய ஜூட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இளையோர் உலகக் கிண்ணத்தில் அசத்தவுள்ள இளம் நட்சத்திரங்கள்

இதனையடுத்து தங்களது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த டி மெசனொட் வீரர்கள் போட்டியின் முதல் நாள் முடிவில் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றனர்.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி, மருதானை (முதல் இன்னிங்ஸ்) – 202 (81.1) – அரவிந்த் ராஜேந்திரன் 48, மொஹமட் றிசாத் 33, சாலிய ஜூட் 3/71, நிகில கீத் 2/34

டி மெச்னொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 16/1 (5)

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.


புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் றோயல் கல்லூரி, கொழும்பு

SSC மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற றோயல் கல்லூரி வீரர்கள் புனித ஜோசப் கல்லூரிக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை வழங்கினர்.

இதன்படி முதல் இன்னிங்சில் துடுப்பாடிய ஜோசப் கல்லூரி அணிக்கு 178 ஓட்டங்களையே முதல் இன்னிங்சில் பெறமுடிந்தது. நிப்புன் சுமணசிங்க அதிகபட்சமாக 48 ஓட்டங்களை புனித ஜோசப் கல்லூரிக்காக பெற்றிருந்தார். பந்துவீச்சில் மனுல பெரேரா 6 விக்கெட்டுக்களை றோயல் கல்லூரிக்காக வீழ்த்தினார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சில் ஆடிய றோயல் கல்லூரி 93 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து நல்ல நிலையில் காணப்பட்டிருந்த போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 178 (49.2) – நிப்புன் சுமணசிங்க 48, துனித் வெல்லால்கே 47, மனுல பெரேரா 6/26, சரல குணதிலக 2/31

றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 93/3 (30) – பாக்ய திசாநாயக்க 41, பசிந்து சூரியபண்டார 34*

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்