திரித்துவக் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிகள் முன்னிலையில்

184

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்கு உட்பட்ட சிங்கர் கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

திரித்துவக் கல்லூரி எதிர் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி

சிங்கர் கிரிக்கெட் தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் திரித்துவக் கல்லூரி மற்றும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. திரித்துவக் கல்லூரியானது கடந்த போட்டியில் அபார வெற்றியீட்டியிருந்ததுடன், டி.எஸ். சேனநாயக்க கல்லூரி கடும் முயற்சியின் பின்னர் தோல்வியைத் தவிர்த்திருந்தது.

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றதுடன் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டி.எஸ். சேனநாயக்க கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அவ்வணி சார்பில் தனி ஒருவராக போராடிய அயந்த டி சில்வா 43 ஓட்டங்களை குவித்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். திரித்துவக் கல்லூரி சார்பாக அபாரமாக பந்துவீசிய கவிஷ்க சேனாதீர 32 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பதம்பார்க்க, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆடுகளம் பிரவேசித்த திரித்துவக் கல்லூரி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்று முன்னிலையில் உள்ளது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹசிந்த ஜயசூரிய 63 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ட்ரெவொன் பெர்சிவல் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களை பெற்று களத்திலுள்ளார்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 120 (34.4) – அயந்த டி சில்வா 43, கவிஷ்க சேனாதீர 6/32

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 130/5 (34) – ஹசிந்த ஜயசூரிய 63, ட்ரெவொன் பெர்சிவல் 26*, சந்துன் விக்ரமரத்ன 2/24


புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி

புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அவ்வணியின் இரண்டு வீரர்கள் அரைச்சதம் கடந்து நம்பிக்கையளித்த போதிலும் ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

அதன்படி அவ்வணி 65.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சச்சிந்த மஹிந்தசிங்க ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் அணித் தலைவர் ஜெஹான் டேனியல் 54 ஓட்டங்களைக் குவித்தார். புனித சில்வெஸ்டர் கல்லூரி சார்பில் நதீர பாலசூரிய மற்றும் ஹுசிந்து நிஸ்ஸங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

சேனநாயக்க, வன்டர்சேய், மாலிங்க ஆகியோரின் பந்து வீச்சில் வீழ்ந்த டிமோ

அடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த புனித சில்வெஸ்டர் கல்லூரி லக்ஷான் கமகேவின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் அணியை மீட்டெடுத்த மஞ்சித் ராஜபக்ஷ 39 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அணித் தலைவர் அவிந்து ஹேரத் 27 ஓட்டங்களுடன் களத்திலுள்ளார்.

பந்துவீச்சில் சிறப்பித்த புனித ஜோசப் கல்லூரியின் லக்ஷான் கமகே வெறும் 8 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

புனித சில்வெஸ்டர் கல்லூரியானது இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 186 (65.2) – சச்சிந்த மஹிந்தசிங்க 58*, ஜெஹான் டேனியல் 54, எரான் குணரத்ன 29, நதீர பாலசூரிய 2/26, உசிந்து நிஸ்ஸங்க 2/42

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 72/5 (28) – மஞ்சித் ராஜபக்ஷ 39, அவிந்து ஹேரத் 27*, லக்ஷான் கமகே 4/08


டி மெசனொட் கல்லூரி எதிர் குருகுல கல்லூரி

சிங்கர் கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டியில் கந்தானை டி மெசனொட் கல்லூரி மற்றும் களனி குருகுல கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. கந்தானையில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற குருகுல கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது.

மலிந்து விதுரங்கவின் அரைச்சதம் (58) மற்றும் பெத்தும் மகேஷ் (36), பிருத்வி ருசர (32) ஆகியோரின் சிறந்த பங்களிப்புக்களின் உதவியுடன் குருகுல கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. டி மெசனொட் கல்லூரியின் ரொமால் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் மலித் பெர்னாண்டோ, அசித சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதமும் பதம்பார்த்தனர்.

அடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய டி மெசனொட் கல்லூரி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அற்புதமாக துடுப்பெடுத்தாடி வரும் கிரிஷான் சஞ்சுல ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 210 (64.4) – மலிந்து விதுரங்க 58, பெத்தும் மகேஷ் 36, பிருத்வி ருசர 32, பிரவீன் நிமேஷ் 25, ரொமால் பெர்னாண்டோ 4/71, மலித் பெர்னாண்டோ 3/23, அசித சில்வா 3/37

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 90/4 (19.1) – கிரிஷான் சஞ்சுல 62*, மலிந்து மதுரங்க 2/29

நாளை போட்டிகளின் இரண்டாவதும் இறுதியுமான தினமாகும்.