சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பிரிவு 1 (டிவிசன் 1) கிரிக்கெட் தொடரின் 2 போட்டிகள் இன்று நிறைவுற்றதோடு மேலும் ஒரு போட்டி ஆரம்பமானது.

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரஷ்மண்ட் கல்லூரி சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் வென்றது.

இளைஞர் ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

மலேசியாவில் நடைபெறவுள்ள ”இளைஞர்…

இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மாசோக கல்லூரி அணி 57 ஓட்டங்களுக்கே சுருண்ட நிலையில், நேற்று முதல் நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ரிச்மண்ட் கல்லூரி 364 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதன்போது இலங்கை இளையோர் தேசிய அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் 158 ஓட்டங்களையும், தனன்ஜய லக்ஷான் 54 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று போட்டி ஆரம்பிக்க முன்னரே தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொண்ட ரிச்மண்ட் கல்லூரி தர்மாசோகாவை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட அழைத்தது.

இதன்படி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 307 ஓட்டங்களை பெற வேண்டிய நெருக்கடியோடே தர்மாசோக கல்லூரி இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. முதல் இன்னிங்சுடன் ஒப்பிடுகையில் அந்த அணி நின்றுபிடித்து ஆடியபோதும், அவ்வணிக்கு ஆட்ட நேரம் முடியும்வரை தனது விக்கெட்டுகளை காத்துக்கொள்ள முடியவில்லை.

இறுதியில் தர்மாசோக கல்லூரி 68.4 ஓவர்களில் 249 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அந்த அணி சார்பில் ரவின்து ரஷன்த (66) மாத்திரம் அரைச்சதம் பெற்றார்.  

ரிச்மண்ட் கல்லூரிக்காக முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை விழ்த்திய திலும் சுதீர இரண்டாவது இன்னிங்ஸிலும் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். சதுன் மெண்டிஸ் 72 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பறித்தார்.

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 57 (22.3) – திலும் சுதீர 3/11, தனஞ்சய லக்ஷான் 3/23

ரிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 364/5d (64) – கமிந்து மெண்டிஸ் 158, தனஞ்சய லக்ஷான் 54, கசுன் தாரக 41, ஆதித்ய சிறிவர்தன 41, தவீஷ அபிஷேக் 33, சஞ்சன மென்டிஸ் 2/81

தர்மாசோக கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 249 (68.4) – ரவிது ரஷன்த 66, திமுத் டில்ஷான் 47, நிமேஷ் மெண்டிஸ் 42, சதுன் மெண்டிஸ் 4/72, திலும் சதீர 3/55,

முடிவு: ரிச்மண்ட் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் வெற்றி


புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை

பல்லேகலை சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் புனித சில்வெஸ்டர் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று அதற்கான புள்ளிகளை தட்டிச் சென்றபோதும் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

இலங்கையின் வெற்றி வேட்கை ஒரு நாள் போட்டிகளிலும் தொடருமா?

ஆசியாவின் கிரிக்கெட் சகோதரர்களாகக்…

நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய சில்வெஸ்டர் அணி தனது முதல் இன்னிங்சுக்காக 239 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாவது நாளான இன்று டி மெசனொட் கல்லூரி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. எனினும் எதிரணி பந்துவீச்சாளர் நிம்சர அதரகல்ல அதிரடி பந்துவீச்சை வெளிக்காட்ட டி மெசனொட் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 54.5 ஓவர்களில் 192 ஓட்டங்களுக்கே சுருண்டது.

கிரிஷான் சன்ஜுல ஒரு ஓட்டத்தால் அரைச் சதத்தை தவறவிட்டு அரங்கு திரும்பினார். நிம்ன பெர்னாண்டோ 41 ஓட்டங்களை பெற்றார்.

சில்வெஸ்டர் கல்லூரி சார்பில் நிம்சர அதரகல்ல 57 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, மன்மோஹ்ன் சவித்ரன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 47 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற சில்வெஸ்டர் கல்லூரி இன்று கடைசி நேரத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. அவ்வணி ஆட்ட நேர முடிவின்போது 14 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 66 ஓட்டங்களை பெற்றது.  

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 239 (68.1) – நிம்சர அத்தனகல்ல 44, மனோஹரன் பவித்ரன் 42, பசன் ஹெட்டியாரச்சி 30, மன்ஜித் ராஜபக்ஷ 25, கசுன் எதிரிவீர 22, ரோமல் மெனுக 5/72, கிரிஷான் சஞ்சுல 2/19

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 192 (54.5) – கிரிஷான் சன்ஜுல 49, நிம்ன பெர்னாண்டோ 41, நதுன் டில்ஷான் 32, நிம்சர அதரகல்ல 5/57, மன்மோஹ்ன் சவித்ரன் 3/59  

புனித சில்வெஸ்டர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 66/1 (14) – கசுன் எதிரிதிலக 22*, கவின்து ஹீர்த் 23*

முடிவு: போட்டி சமநிலையில் முடிவு


பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா எதிர் புதிய அந்தோனியார் கல்லூரி, கண்டி

கண்டியில் இன்று ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித அந்தோனியார் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி நிதானமாக ஆடி ஓட்டங்களை பெற்றது.

எனினும் சீரற்ற காலநிலை முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தை வீணாக்கியது. எனவே, 22.4 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட முதல் நாளில் பண்டாரநாயக்க கல்லூரி 83 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. மாதவ சத்சர 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 83/3 (22.4) – மாதவ சத்சர 41*