இளையோர் உலகக் கிண்ண பிளேட் இறுதிப்போட்டியில் இலங்கை

1473

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 9 ஆம் இடத்துக்கான கோப்பைப் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட இலங்கை இளையோர் அணி, விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்கவின் அபார சதத்தின் உதவியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த 13 ஆம் திகதி முதல் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதில் D பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் மற்றம் பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவி, காலிறுதியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டது.

இந்நிலையில், 9 ஆவது இடத்தை தீர்மானிக்கும் கோப்பை பிரிவிற்கான போட்டிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இதில் கென்யாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஹசித போயகொடவின் சாதனைமிகு சதம் மற்றும் இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பெற்ற இலங்கை இளையோர் அணி, அப்போட்டியில் கென்யாவை 311 ஓட்டங்களால் வெற்றிகொண்டு அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

இதனையடுத்து, இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான கோப்பை பிரிவிற்கான முதலாவது அரையிறுதிப் போட்டி நியூசிலாந்தின் லின்கோன் நகரில் இன்று (25) நடைபெற்றது.

அதிரடி வெற்றியுடன் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

டாக்கா மிர்பூரில் நடைபெற்று முடிந்திருக்கும் (பங்களாதேஷ்..

இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளையோர் அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, முதல் ஓவரின் 4ஆவது பந்தில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் திசரு ரஷ்மிக்க ஜிம்பாப்வே ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வெஸ்லி மதிவிரேவை முதல் ஓவரிலேயே வீழ்த்தி நம்பிக்கை தந்தார்.

இதனையடுத்து 2ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டொனால்ட் ம்ளெம்போ மற்றும் அலிஸ்டெயார் ப்ரோஸ்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர். எனினும் காலி றிச்மண்ட கல்லூரி வீரர் தனஞ்சய லக்‌ஷான், 28 ஓட்டங்களைப் பெற்றிருந்த அலிஸ்டெயார் ப்ரோஸ்ட்டை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

எனினும், ஜிம்பாப்வே அணிக்காக நிதானமாக விளையாடி சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்த வலதுகை துடுப்பாட்ட வீரரான டொனால்ட் ம்ளெம்போ மற்றும் ஜெய்டன் சார்டன்டோர்ப் ஆகியோர் இலங்கை பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு அரைச்சதங்களைப் பெற்று இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்திருந்தனர். இதன்படி, 3ஆவது விக்கெட்டுக்காக இவ்விரு வீரர்களும் சேர்ந்து 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று ஜிம்பாப்வே அணிக்கு நம்பிக்கை கொடுத்திருந்தனர்.

இதில், டொனால்ட் ம்ளெம்போ 104 பந்துகளுக்கு முகங்கொடுத்து 4 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 52 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஹரின் புத்திலவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து திசரு ரஷ்மிக்கவின் பந்துவீச்சில் ஜெய்டன் சார்டன்டோர்ப்பும் 74 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இதன்படி, 50 ஓவர்கள் நிறைவில் அவ்வணி, 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காது விளையாடிய மில்டான் சும்பா 62 ஓட்டங்களையும், அணித்தலைவர் லியெம் ரோச்சி 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் 260 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஜிம்பாப்வே அணியினர் பந்துவீச்சிலும் நெருக்கடி கொடுத்தனர். முன்னதாக கென்ய அணிக்கெதிரான போட்டியில் 191 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்த ஹசித போயகொட ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழக்க, மறுமுனையில் களமிறங்கிய தனஞ்சய  லக்ஷான் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய உபதலைவரான ஜெஹான் டேனியலும் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி 6 ஓவர்களில் 31 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது.

எனினும், 5ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மொரட்டுவ கல்லூரியைச் சேர்ந்த நிஷான் மதுஷ்க மற்றும் நுவனிது பெர்னாந்து ஆகியோர் 143 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

உள்ளூர் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட்டின் நற்செய்தி

2017 மற்றும் 2018 பருவகாலத்துக்கான வருடாந்த..

இதில் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்து துடுப்பாட்டத்தில் வாணவேடிக்கை நிகழ்த்திய விக்கெட் காப்பாளரான நிஷான் மதுஷ்க, 135 பந்துகளுக்கு முகங்கொடுத்து 9 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 109 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொள்ள, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய அஷேன் பண்டார 26 பந்துகளில் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன்போது ஜிம்பாப்வே இளையோர் அணி ஒன்பது பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தாலும், கோசிலாதி நன்ங்குயு மாத்திரம் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இதில் இலங்கை இளையோர் அணிக்காக அதிக ஓட்டங்களைப் பெற்ற நிஷான் மதுஷ்க போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

தொடரின் 9ஆவது இடத்தை தீர்மானிப்பதற்கான கோப்பை பிரிவு 2ஆவது அரையிறுதிப் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் கனடா அணிகளுக்கிடையில் நாளை (26) நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணியை எதிர்த்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 259/4 (50) – ஜெய்டன் சார்டன்டோர்ப் 74, மில்டான் சும்பா 62*, டொனால்ட் ம்ளெம்போ 52, திசரு ரஷ்மிக்க 2/58, தனஞ்சய லக்‌ஷான் 1/13, ஹரின் புத்தில 1/40

இலங்கை – 260/5 (45.3) – நிஷான் மதுஷ்க 109*,  நுவனிது பெர்னாந்து 68, அஷேன் பண்டார 38*, கோசிலாதி நன்ங்குயு 2/49

முடிவு – இலங்கை இளையோர் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி