கலன பெரேராவின் அதிரடிப் பந்து வீச்சினால் தோமியார் கல்லூரி 23 ஓட்டங்களால் வெற்றி!

161

நேற்றைய தினம் கல்கிஸ்ஸ, புனித தோமியார் கல்லூரியில் நடைபெற்ற கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் புனித தோமியார் கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான 25 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட A பிரிவு கிரிக்கெட் போட்டியில், கலன பெரேராவின் அதிரடிப் பந்து வீச்சின் மூலம் புனித தோமியார் கல்லூரி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு றோயல் கல்லூரி அணித் தலைவர், புனித தோமியார் கல்லூரியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தார். அந்த வகையில் களமிறங்கிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மொஹமட் இசாக் மற்றும் ஷாலின் டி மெல் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 25 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

ஷாலின் டி மெல் 12 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஹரிந்துவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். எனினும் அதனை தொடர்ந்து களமிறங்கிய சிதார ஹப்புஹின்ன அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 37 பந்துகளை எதிர்கொண்ட அவர், நான்கு பௌண்டரிகள் உள்ளடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தருஷ ருக்ஷானின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

அதேநேரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொஹமட் இசாக், ஏனையோருக்கு ஓட்டங்களை குவிக்க ஒத்தாசை வழங்கிய அதேநேரம் 2 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்ளடங்கலாக 31 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், குஷான் கமலசூரியவின் பந்து வீச்சில் தருஷ ருக்ஷானிடம் பிடிகொடுத்து ஓய்வறை திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றமையினால் 25 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களை பதிவு செய்தது புனித தோமியார் கல்லூரி.

தோமியார் கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த காஷான் கமலசூரிய 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து, 145 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொழும்பு றோயல் கல்லூரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குஷான் கமலசூரிய வெறும் ஒரு ஓட்டத்துடன் கலன பெரேராவின் அதிரடிப் பந்து வீச்சின் மூலம் வந்த வேகத்திலேயே களத்திலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹரிந்து பலியவதன மூன்று ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவிந்து சதுரங்க 46 பந்துகளை எதிர்கொண்டு 4 பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் உள்ளடங்கலாக அரைச் சதம் கடந்து 55 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்டங்களை உயர்த்தியிருந்தார். துரதிஷ்டவசமாக, அவரின் ஆட்டமிழப்பின் பின் களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேறியதால் றோயல் கல்லூரி 23.1 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்து தோல்வியைத் தழுவியது.

சிறப்பாகப் பந்து வீசிய கலன பெரேரா, தோமியார் கல்லூரிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த கவிந்து சதுரங்கவின் விக்கெட் உள்ளடங்கலாக 23 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியார் கல்லூரி: 145/8(25) – சிதார ஹப்புஹின்ன 39, மொஹமட் இசாக் 31, மனிஷ ரூபசிங்க 14, கஷான் கமலசூரிய 24/3, பிஷாந்து ரணசிங்க 16/2,   

றோயல் கல்லூரி: 122/10 (23.1) – கவிந்து சதுரங்க 55, மதீஷ அமரசிங்க 18, அஹான் சசிந்த 16, தேவிந்து சேனாரத்ன 14, கலன பெரேரா 23/6, தேவின் இரிகம 22/2

போட்டியின் முடிவு :  புனித தோமியார் கல்லூரி 23 ஓட்டங்களால் வெற்றி