சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் புனித அந்தோனியர் கல்லூரி

341
U17 Semi Finals - Royal vs St. Anthony's

இன்று முடிவடைந்திருக்கும் பதினேழு வயதுக்குட்பட்ட (டிவிஷன்-I) பாடசாலை அணிகளுக்கு இடையிலான ‘சிங்கர் கிண்ண’ மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், கொழும்பு றோயல் கல்லூரியினை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்திய கண்டி புனித அந்தோனியார் கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக மாறுகின்றது.

கொழும்பு சோனகர் கழக மைதானத்தில் இடம்பெற்ற தீர்மானமிக்க இந்த போட்டியில் ஆடியிருந்த றோயல் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரியையும் புனித அந்தோனியர் கல்லூரி மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரியையும் தொடரின் காலிறுதிச் சுற்றுப் போட்டிகளில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த அரையிறுதி ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த புனித அந்தோனியார் கல்லூரி அணியானது, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை றோயல் கல்லூரியின் இளம் வீரர்களுக்கு வழங்கியிருந்தது.

இதன்படி, மைதானம் விரைந்த றோயல் கல்லூரி வீரர்கள் ஆரம்பம் முதலே எதிரணி பந்து வீச்சை சமாளிப்பதில் பல சவால்களை எதிர்கொண்டிருந்தனர். இதனால், மந்த கதியிலேயே ஓட்டங்கள் சேர்த்த கொழும்பு இளம் வீரர்கள் 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

றோயல் கல்லூரி சார்பான துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக ஹசிந்து பலிகவர்த்தன 31 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். எதிரணிக்கு நெருக்கடி தந்த அந்தோனியர் கல்லூரி அணியின் பந்து வீச்சில் சசித் தென்னக்கோன் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பதம் பார்த்ததுடன் தரிந்து ஹேவகே, கயான் சமரசிங்க மற்றும் கல்ஹார சேனரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதனையடுத்து, றோயல் கல்லூரி அணியினரால் நிர்ணயம் செய்யப்பட்ட வெற்றி இலக்கான 133 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய மலைநாட்டு வீரர்கள் விரைவாக சில முன்வரிசை விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். எனினும் அவ்வணி சார்பாக ஹல்ஹார சேனரத்ன மற்றும் மொஹமட் காமில் ஆகியோர் சிறப்பான  துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியினால், 31.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்த புனித அந்தோனியார் கல்லூரி அணி, 134 ஓட்டங்களினை பெற்று வெற்றி இலக்கினை அடைந்தது.

இதில் கல்ஹார சேனரத்ன 40 ஓட்டங்களினையும், மொஹமட் காமில் 35 ஓட்டங்களினையும் பெற்று புனித அந்தோனியார் கல்லூரியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தனர்.

றோயல் கல்லூரி சார்பாக மனுல பெரேரா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த போதும் அது அந்தோனியார் கல்லூரியினை கட்டுப்படுத்துவதற்கு போதுமானதாக அமைந்திருக்கவில்லை.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி 132 (47.2) ஹரிந்து பலிஹவர்த்தன 31, தருஷ ருக்ஷான்  22, சசித் தென்னக்கோன் 3/30, தரிந்து ஹேவகே 2/16, கயான் சமரசிங்க 2/16,” கல்ஹார சேனரத்ன 2/21

புனித அந்தோனியார் கல்லூரி 134/6 (31.4) கல்ஹார சேனரத்ன 40, மொஹமட் காமில் 35, நவோத்ய விஜயகுமார் 29*, மனுல பெரேரா 3/35, திமல் விஜயசேகர 2/35

போட்டி முடிவு புனித அந்தோனியார் கல்லூரி அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி