இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 வயதிற்கு உட்பட்ட பிரிவு இரண்டு (டிவிஷன்-2) அணிகளுக்கு இடையிலான 2017/18 பருவகாலப் போட்டித்தொடரின் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு, மஹாநாம கல்லூரி (B) அணியினை, அன்ரன் அபிஷேக்கின் சகலதுறை ஆட்டத்தின் துணையுடன் வெற்றி கொண்ட யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஒரு நாளில் 4 இன்னிங்ஸ்களைக் கொண்டமைந்த இந்தப் போட்டியானது அநுராதபுரம் மாவட்ட கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் அன்ரன் அபிஷேக் முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்தார்.

அரையிறுதிக்கு தகுதிபெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட்…

அதனடிப்படையில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடுவதற்காக களம் நுழைந்திருந்த மஹாநாம கல்லூரி அணியின் துடுப்பாட்ட வீரர்களை நிலை குழையச் செய்த சென். ஜோன்ஸின் பந்துவீச்சாளர்கள் முன்வரிசை வீரர்களை ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் விரைவாக ஓய்வறை அனுப்பினர்.

பின்வரிசை வீரர்களான திஷும் ஏக்கநாயக்கவின் பெறுமதியான 17 ஓட்டங்கள், மேதிக மெதீசன் ஆட்டமிழக்காமல் பெற்ற 14 ஓட்டங்கள் என்பனவற்றின் துணையுடன் உதிரிகளாக 16 ஓட்டங்கள் கிடைக்கப்பெற 44.3 ஓவர்களை எதிர்கொண்ட மஹாநாம கல்லூரி அணி 76 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.  

பந்துவீச்சில் வலது கை வேகப்பந்து வீச்சாளரான பவிந்தன் 3 விக்கெட்டுக்களையும், அன்ரன் அபிஷேக் மற்றும் யுகேந்திரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது விக்கெட்டிற்காக 32 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த வேளையில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் சபேசன் (23) ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்(41) விரைவாக இழக்கப்பட்ட போதும் அடுத்த விக்கெட்டிற்காக பவிந்தன் மற்றும் அன்ரன் அபிஷேக் இணை, சத இணைப்பாட்டத்தினைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வேளையில் 50 பந்துகளில் 11 பெளண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்த அன்ரன் அபிஷேக் துவிந்து ரத்நாயக்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது அன்ரன் அபிஷேக்கின் தொடர்ச்சியான இரண்டாவது அரைச்சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

30 ஓவர்களினை எதிர்கொண்ட சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 03 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை பெற்றிருந்தவேளையில் போட்டியானது சமநிலையில் நிறைவிற்கு வந்தது. எனினும், புள்ளிகளடிப்படையில் யாழ்ப்பாணம், சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது

பந்துவீச்சில் அஞ்சித விக்ரமசேகர 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

ஹட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட்…

இதன்படி, 2012/13 பருவகாலத்தில் பிரிவு மூன்றில் இரண்டாவது இடம்பெற்று பிரிவு இரண்டிற்கு தரமுயர்த்தப்பட்ட சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, வட மாகாணத்தினுடைய ஒரேயொரு அணியாக பிரிவு இரண்டில் விளையாடி இறுதிப் போட்டிக்கு தடம்பதிக்கின்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிப் போட்டியில் கனேமுல்ல, கலஹிட்டியவ மத்திய மகா வித்தியாலய அணியினை எதிர்கொள்ளவுள்ளது. அதேவேளை, இவ்விரு அணிகளும் அடுத்த பருவகாலத்திற்கு பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி, கொழும்பு (B) (முதல் இன்னிங்ஸ்) 76 (44.3) – திஷும் ஏக்கநாயக்க 17, மேதிக மெதீசன் 14*, பவிந்தன் 3/21 , யுகேந்திரன் 2/05 அன்ரன் அபிஷேக் 2/21

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் (முதல் இன்னிங்ஸ்) 143/3 (30) – அன்ரன் அபிஷேக் 85, சபேசன் 23, பவிந்தன் 22 அஞ்சித விக்ரமசேகர 2/36

போட்டி முடிவு – சமநிலை (புள்ளிகளடிப்படையில் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி)