அனைவராலும் எதிர்பார்க்கப்பட 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண தொடர் இந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடரின் அட்டவணை, போட்டியிடும் அணிகளின் குழுக்கள் மற்றும் இத்தொடர் நடைபெற இருக்கும் மைதானங்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் ஆசிய கிரிக்கெட் வாரியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்குபெறும் இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இடம்பெறும். இத்தொடரின் இறுதிப்போட்டியானது மின்னொளி விளக்குகளின் துணையுடன் ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இத்தொடரை நடத்தும் இலங்கை அணியானது, இறுதியாக இத்தொடரில் சம்பியன்பட்டத்தை சுவீகரித்த இந்திய அணி இடம்பெறும் குழு A  இல் மலேசியா மற்றும் நேபாளம் ஆகியவற்றுடன் நீடிக்கின்றது.

குழு B இல், பாகிஸ்தான் அணியானது பங்களாதேஷ், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோதுகின்றது.

குழு A இற்குரிய அணிகள் தங்களுடைய 6 போட்டிகளையும் கொழும்பை அண்மித்த மைதானங்களான NCC, CCC, டி சொய்ஸா மைதானம் (மொரட்டுவை) ஆகியவற்றில் விளையாடுகின்ற இவ்வேளையில், குழு B இற்குரிய அணிகள் இலங்கையின் தென்மாகாணத்தில் உள்ள காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம், மாத்தறை உயனவத்த மைதானம் மற்றும் மக்கோன சர்ரேய் கிராம மைதானம் ஆகியவற்றில் தங்களுடயை போட்டிகளை விளையாடவுள்ளன.

இந்த இரண்டு குழுக்களிலும், போட்டி முடிவுகளின் படியான புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

இப்போட்டித் தொடரின் குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் எதிர்வரும் 15, 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, அரையிறுதிப் போட்டிகள் இம்மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் இடம்பெறும்.

2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கிண்ணத்திற்குரிய வீரர்களை தெரிவு செய்வதற்கு இத்தொடர் முக்கியமான ஒன்றாக அமையும் என நம்பப்படுகின்ற இதேவேளையில், இத்தொடரில், காலி றிச்மன்ட் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு கைகளினாலும் பந்து வீசக்கூடிய திறமைமிக்க சுழல்பந்து வீச்சாளர் கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியை தலைமை தாங்குவார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த இருவாரமாக இத்தொடரிற்கு பயிற்றுவிப்பாளர் ரோய் டயஸின் மேற்பார்வையின் வீரர்கள் மும்முரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இத்தொடரில் பங்குபெறும் 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணியின் குழாம் இவ்வாரம் அறிவிக்கப்படும்.

Group A Schedule

Group B Schedule