ஹத்துருசிங்க மீதான நம்பிக்கை வீண் போகவில்லை – சந்திமால்

1727

தொடர் தோல்விகள் மற்றும் உபாதைகள் என இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுத்து இருந்த இலங்கை அணியை பொறுப்பேற்று சிறந்த முறையில் வழிநடாத்திய சந்திக ஹத்துருசிங்க மீது நாங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

 [rev_slider LOLC]

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

இலங்கை அணியின் பயிற்சியாளராக சந்திக ஹத்துருசிங்க பதவியேற்றதன் பின்னர் இலங்கை அணி வெற்றிபெறும் முதலாவது ஒருநாள் தொடர் இது என்பதுடன், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பின்னர் இலங்கை அணி வெற்றிபெறும் முதலாவது ஒருநாள் தொடர் இதுவாகும்.

இந்நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில், ”முதலில் எமது அணியின் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஹத்துருசிங்க உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் என்பதை நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தோம். இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அவர் நிறைய நம்பிக்கைகளைக் கொடுத்திருந்தார். உங்களது பயிற்சியாளரை நம்பினால் உங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். அதேபோன்று தான் இந்த முடிவும் எமக்கு கிடைத்தது.

மதுசங்கவின் கன்னி ஹட்ரிக்கோடு முக்கோண ஒரு நாள் தொடரின் சம்பியனான இலங்கை

அதேபோன்று இந்த வெற்றிக்கான அனைத்து கௌரவமும் அஞ்செலோ மெதிவ்ஸையும் சாரும். அவர்தான் பங்களாதேஷுக்கு அணியை அழைத்துவந்தார். துரதிஷ்டவசமாக உபாதை காரணமாக அவரால் அணியை வழிநடாத்த முடியாமல் போனது” என்றார்.

போட்டித் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தமை எமக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்திருந்தது. அதேபோன்று இத்தொடரை எப்படியாவது வெற்றிகொள்வதற்கு ஒவ்வொரு வீரர்களும் முழு அர்ப்பணிப்புடன் விளையாடியிருந்தனர். இறுதியில் எமது முயற்சிக்கு சிறந்த ஒரு பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடிந்தது.

முன்னதாக இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற வேண்டும் என இறைவனைப் பிரார்த்தனை செய்தேன். ஏனெனில் எமக்கு தரப்பட்ட ஆடுகளம் சமதரையான, மிகவும் வரண்டதாக இருந்தது. இதனால் முதலில் துடுப்பெடுத்தாடி 220 அல்லது 230 ஓட்டங்களைக் குவித்தால் எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்க முடியும் என்று கருதினோம்.

அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தோம். இதில் உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல சிறப்பாக விளையாடியிருந்தனர். இவ்விருவரும் பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். அதன்படி நாம் 200 ஓட்டங்களை கடந்தோம். எனவே எமது வெற்றியின் முக்கிய திருப்புமுனையாகவும் இது அமைந்தது.

மதுசனின் சகலதுறை ஆட்டத்தோடு யாழ். மத்திய கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

உண்மையில் பங்களாதேஷ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்பதை நாம் முன்னரே அறிந்து வைத்திருந்தோம். ஆனால் முடியாதது எதுவும் இல்லை என்பதை எமது வீரர்கள் நிரூபித்துக் காண்பித்தனர். இப்போட்டித் தொடர் முழுவதும் எமக்குத் தேவையான விக்கெட்டுக்களை வேகப்பந்துவீச்சாளர்கள் பெற்றுக்கொடுக்க, சுழல் பந்துவீச்சில் அகில தனஞ்சய மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியில் புதுமுக வீரரான ஷெஹான் மதுஷங்க சிறப்பாக பந்துவீசி, ஹெட்ரிக் விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இலங்கை ஒரு நாள் அணிக்கு அவர் பொருத்தமானவர் என்பதை நிரூபித்தார். அவருக்கு கிடைத்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். எனவே அணியின் வெற்றிக்காக உழைத்த அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர், முகாமையாளர் மற்றும் இலங்கை கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த வெற்றி உரித்தாகும் என சந்திமால் இதன்போது தெரிவித்தார்.